புதன், 15 நவம்பர், 2023

பிச்சை

இரண்டொரு தினங்களுக்கு முன் பள்ளிக்குள் நுழையும் முன் காலை சிற்றுண்டி முடிக்க அருகில் இருந்த உணவகத்துக்குச் சென்றேன். வழக்கம் போல் 2 பூரி சாப்பிட்டுவிட்டு 45 ரூபாய் கொடுத்துவிட்டு வண்டியை எடுக்க வந்த போதுதான், அந்த முதியவரை கவனித்தேன்அவர் என்னையே கவனித்து கொண்டு இருப்பதை.

நான் அவரை கேட்க எத்தனிக்கும் முன்னே அவரே என்னை நெருங்கி உரிமையோடு புன்னகையோடு சாப்பிட ஏதாவது வாங்கி தரியா என்று கேட்டார்.

பலமுறை, நான் ஒரு விஷயத்தை யோசித்து பார்த்ததுண்டு. எவ்வளவு பேர் நின்றிருந்தாலும் இவ்வாறு தேவை உள்ளவர்கள் என்னை நாடி வருவதை உணர்ந்து இருக்கிறேன்.

சிலர், உன் முகத்தில் இளிச்ச வாயன்னு  எழுதி இருக்கு போலன்னு’ வெளயாட்ட சொல்றதையும் கேட்டிருக்கேன். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

அதே போல் தான் இன்றும் நடந்தது.

அவ்வளவு பேர் நின்றிருக்க, பெரியவர் என்னை மட்டுமே கேட்டார். நானும் எப்பொழுதும் போல கடைக்காரரிடம் நாலு இட்லி கொடுங்க அண்ணன்னு சொல்லிட்டு காசு கொடுக்க போனபோது அந்த பெரியவர் என்னை மீண்டும் அழைத்தார்.

திரும்பி பார்த்த போது அதே புன்னகையோடு தம்பி எனக்கு இட்லி வேணாம் அதுக்கு பதில்லா நான் ரெண்டு தோசை வாங்கிக்கிறேன்னு சொன்னார்.

அப்போதுதான் என் மனசுக்குள் அந்த எண்ணம் சுருக்கென்று குத்தியது, எடுக்குறது பிச்சை இதுல இவருக்கு வேற புடிச்சதுதான் சாப்புடுவாரான்னு’ ஆனால் சொல்ல வில்லை. எரிச்சல் தான் வந்தது என்னடா தர்மம் பண்ண போய் இப்புடி ஒரு நெலமை நம்மளுக்குன்னு.

நான் சாப்பிட்டது 45 ரூபாய் தர்மம் 80 ரூபாயா என்று மனசு புலம்ப தொடங்கியது. ஒரு வழியாக 80 ரூபாயை தாரை வார்த்து விட்டு அரை குறை மனதோடு பள்ளிக்கு வந்து சேர்ந்தேன். இருந்தாலும் மனசு ஒருமன பட்டதாக தெரியவில்லை.

அன்று பத்தாம் வகுப்பு மாணாக்கருக்கு திருக்குறள் நடத்த வேண்டும். கொடுக்கப்பட்ட அதிகாரம் 'இரவு'. நானும் குறட்களின் பொருளை எனக்கே உரிய பாணியில் சிறப்பாக சொல்லி கொண்டிருந்தேன்.

ஏழாம் குறளை வாசித்ததும் பேச்சின்றி நின்றேன். வள்ளுவர் அந்த குறள் மூலம் எதையோ எனக்கு சொல்ல முனைகிறார் என்ற உணர்வு மேலிட்டது.

 "இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

   உள்ளுள் உவப்பது உடைத்து"

அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.

வள்ளுவர் வார்த்தைகள் வலுவாக என்னை பாதித்தது.

பொருள் இல்லாதவன் பொருளை தானே இழந்து விட்டான், தனது உரிமையை கூடவா இழந்து விடுகிறான்?  அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என சும்மாவா சொன்னார் வள்ளுவர். 

இரப்பவர்கள் தங்களது தேவைகளை கேட்கும் உரிமையை இழந்துவிடுகிறார்களா என்ன?

ஆங்கிலத்கில் ஒரு பழமொழி உண்டு. Beggars Can’t be choosers.

கிழக்கிற்கும் மேற்கிற்கும் தான் வாழ்க்கையை வாழ்வதில் எவ்வளவு வேறுபாடுகள்.

இரத்தல் பற்றி புறநானூற்றில் ஒரு பாடலில், புலவர் கழைதின் யானையார் அரசன் வல்வில் ஓரியிடம் பரிசில் பெறச் சென்றார். வள்ளலாகிய அவன் ஏனோ உதவியை உடனே வழங்கவில்லை. புலவரோ வெறுப்படையாமல் வள்ளலை பாராட்டுகிறார்.

பல நேரங்களில் கொடுக்க வில்லையென்றால் நம்மை திட்டுபவர்களை நாம் பார்த்திருப்போம். பிச்சை எடுப்பவர்க்கும் வாழ்வியலை கற்பிக்கிறது தமிழ் இலக்கியங்கள்.

‘ஈ என இரத்தல் இழிந்தன்று ;

அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று.’

 

அய்யா தர்மம் செய்யுங்கள் என்று கேட்பது இழிவான செயல்.

நாம் எந்த நிலை வந்தாலும் யாரிடமும் கை  ஏந்தி விடக்கூடாது என மன உறுதியுடன் இருப்போம். ஏனென்றால் அது எவ்வளவு அசிங்கம் என்பதை உணர்ந்திருக்கிறோம். அப்போது நம்மிடம் ஒருவன் வந்து பிச்சை கேட்கும்போது அவன் எவ்வளவு இழிவான நிலைமைக்கு வந்துவிட்டான் என்று உணர்வது கடினமல்ல.

அப்படிப்பட்ட இழிவான நிலைமையில் இருக்கும் அவனுக்கு, இல்லை என்று மறுப்பது அதை விட கேவலமான செயல் என்று நமக்கு பாடம் கற்பிக்கிறது புறநானூறு.

எத்தனை முறை இல்லை என்று சொல்லி மறுப்பவர்களை பார்த்திருப்போம்,

நாமே எத்தனை முறை இல்லையென்று மறுத்திருப்போம்.

எவ்வளவு இழிவான செயலில் நாம் ஈடுபட்டு இருக்கிறோம் உணர்ந்து பார்க்க வேண்டும்.

‘கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று ; அதன் எதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று’

அதே போல் தேவை உள்ளவனுக்கு கேட்காமலே கொடுப்பது உயர்ந்த செயல். ஆனால் கொடுக்கும்போது அதை வேண்டாம் என மறுப்பது கொடுத்தலை விட உயர்ந்த செயல் என உரக்கச் சொல்லுகிறது நம் பேராசை மனங்களுக்கு.

கேட்பவனுக்கு மறுக்காமல் கொடு

தேவையுள்ளவனுக்கு கேட்காமலே கொடு

அவன் மறுத்துவிட்டால் மனம் உடையாதே

அது அவனுடைய சுயமரியாதை

சுயமரியாதை குலையாமல் கொடுக்க முயற்சித்த உனக்கே அது பெருமை 


பின் குறிப்பு - மனதின் புலம்பல்கள்:

பலர் கேட்பதுண்டு, இலக்கியங்களை எல்லாம் இந்த தொழில்நுட்பம் உயர்ந்த கால கட்டத்தில் சொல்லி கொடுத்து என்ன ஆகப்போகிறது என்று. அதற்கான பதிலை இந்த பாடல் நமக்கு சொல்லாமல் சொல்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. நலிந்தவர்க்கு நம்மால் ஆன உதவியை பலன் எதிர்பாராமல் கொடுத்து வாழ்வதே வாழ்க்கையின் கடமை என்று இளைய தலைமுறையினருக்கு சொல்லி கொடுத்தால் தான் வரும் தலைமுறை மனிதனாக வாழ கற்றுக்கொள்ளும்

 பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலில் தமிழ் மதிப்பெண்ணை பெயரளவில் தான் வைத்திருப்பார்கள். கேட்டால் அது core subject இல்லை என்பார்கள். ஆனால் வாழ்க்கைக்கு வேண்டிய core values கொடுப்பது இலக்கியங்கள் மட்டும்தான். அதிலும் தமிழ் இலக்கியங்களை ஒதுக்கி விட்டு வாழும் தலைமுறை வெகு விரைவில் அழிவை நோக்கி செல்கின்றது என்பதில் மட்டும் நான் உறுதியாய் இருக்கிறேன்