வியாழன், 22 பிப்ரவரி, 2024

சிறு முடிவுகளின் பெரு விளைவுகள் (TYRANNY OF SMALL DECISIONS)

சிறு முடிவுகளின் பெரு விளைவுகள் 

 (TYRANNY OF SMALL DECISIONS)

 

    கல்லூரி காலங்களில், 90 களின் இறுதியில், மாணவர்களிடையே கடிதப் போக்குவரத்து அதிகமாய் பயன்பாட்டில் இருந்தது. பெற்றோர்கள், நண்பர்களுடனான தொடர்பை துண்டிக்காமல் ஒட்ட வைத்தது கடிதங்கள் தான்.

     மதிய உணவு வேளையின் போதுதான், வீட்டிலிருந்து வந்த கடிதங்கள் மாணவர்க்கு கொடுக்கப்படும். அந்த பொழுது மாணவர் அனைவரும் கடிதம் பட்டுவாடா செய்பவரை தான் சுற்றி மொய்த்திருப்பர். அந்த கணத்தின் கனம் குடும்பத்தை விட்டு தூரத்தில் இருப்பவருக்கு மட்டுமே புரியும்.

 கடிதம் பெற்றவர்கள் களிப்போடு களைந்து போவதையும்

கடிதம் பெறாதவர்கள் கவலையோடு தொலைந்து போவதையும்

கண்டிருக்கிறேன்; அனுபவித்தும் இருக்கிறேன்.

    அந்த ஒரு கடிதம் மிச்சமுள்ள நாளின் உணர்வை நிர்ணயிக்கும். அந்த கடிதங்கள் எத்தனை எத்தனை உணர்வுகளை கொண்டு சேர்த்திருக்கும். எவ்வளவு அழுகைகளையும், சிரிப்புகளையும் கொடுத்திருக்கும். அவமானம், கோபம், வெட்கம், காதல், மோதல், சீற்றம், மன்னிப்பு, ஏக்கம் எத்தனை எத்தனை உணர்ச்சிகளை உள்ளடக்கி இருக்கும்.

     கிறிஸ்துமஸ் நேரங்களில் யாருக்கெல்லாம் வாழ்த்து அட்டை போட வேண்டும் என்ற பெரிய லிஸ்ட் போட்டு, வாழ்த்து அட்டை வாங்கி, அத்தனை பேருக்கும் தனித்தனியான வாழ்த்துக்களை கைப்பட எழுதிய காலமுண்டு. யாருக்கு எழுதுகிறேனோ அவர் என்  அருகில் அமர்ந்து இருப்பது போன்ற உணர்வில் கடிதங்கள் எழுதியுள்ளேன்.

     இன்று 2024, பெப்ரவரி 22 அன்று, உட்கார்ந்து, கடந்த 20 ஆண்டுகளில் கடிதம் எப்படி நம்மை விட்டு தொலைந்து போனது என்பதை நினைத்துக் கொண்டிருந்த போதுதான், உலகப் புகழ்பெற்ற பொருளியல் நிபுணர் ஆல்பர்ட் கான் (Albert E.Khan) எழுதிய "Tyranny of Small Decisions" என்ற கட்டுரையை படிக்க நேர்ந்தது.

“எவ்வாறு நாம் நம்மையும் அறியாமல், வாழ்க்கையின் காலப்போக்கில் எடுக்கும் மிகச் சிறிய முடிவுகளால் (பெரும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல), பெரும் பாதிப்பை தரக்கூடிய விளைவுகளை நம் வாழ்வில் ஏற்படுத்தி உள்ளோம் என்பதை உணர்ந்தேன்”

    1995 ஜூலை 31 தான் முதன் முதல் அலைபேசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் அலைபேசி மாணவர்களின் கைகளை ஆக்ரமித்துவிட்டது. SMS என்ற குறுஞ்செய்தி இலவசமாக அலைபேசியில் இருந்த காலம், அதுவும் அளவில்லாமல் அனுப்பலாம் என்ற கவர்ச்சியும் இணைந்து கொண்டது. அப்போது தான் கடிதங்கள் எழுதி அன்பை பகிர்ந்து கொண்டிருந்த நானும், என்னை போன்ற கோடிக்கணக்கானவர்களும் எங்களையும் அறியாமல், ஒரு சிறு முடிவை சாதாரணமாக எடுத்தோம்

என்ன முடிவு அது? கடிதம் எழுதுவதற்கு பதிலாக, இலவசமாக குறுஞ்செய்தியை அனுப்பலாம் என்ற சிறு முடிவு தான் அது. முடிவு எடுத்த அனைவரும் தனி தனியாக, பெரிய உள்ளார்ந்த நோக்கமின்றி, எதேச்சையாக எடுத்த சிறு முடிவு தான், இருபது வருடங்களில், உயிரோட்டமுள்ள, உணர்வு மிக்க உறவின் பாலத்தை, கடிதப் போக்குவரத்தை, இல்லாமல் ஆக்கி விட்டது.

    இன்று நாம் திறன்பேசிகளை மிகவும் சாதுர்யமாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டோம். ஆனால் நமது தொடர்புகள் இன்று உயிரற்று, உணர்வற்று இருக்கிறது. யாரோ யாருக்கோ அனுப்பிய செய்திகளை, நாம் நமதாக்கி நம்முடையவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அது மீண்டும் மீண்டும் யார் யாருக்கோ அனுப்பப்படுகிறது.   

     கடிதம் என்ற உன்னதமான உறவுத்தொடர்பை நாம் நம் சிறு முடிவுகளின் விளைவால் இழந்து, இன்று செயற்கைத்தனத்தை ஜீரணித்துக் கொண்டிருக்கின்றோம்.

     இதுதான் நான் உணர்ந்து கொண்ட சிறு முடிவுகளின் பெரு விளைவுகள். கடிதத்தோடு முடியவில்லை விளைவுகள். இன்னும் பெரும் விளைவுகளை சிறு முடிவுகளால் நம்மையும் அறியாமல் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறோம்.

     ஒவ்வொரு முறையும், வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, உணவு ஆர்டர் செய்யும்போது, அந்த சிறு முடிவால் உங்கள் வீட்டின் அருகில் இருக்க கூடிய ஒரு உணவகத்துக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர் குறைந்து, விரைவில் மூடும் சூழல் வரும்.

     ஒவ்வொரு முறையும், வீட்டு மளிகை பொருட்கள், மீன், இறைச்சி, பால் போன்ற பொருட்களை ‘10 நிமிடத்தில்’ வீட்டுக்கே பட்டுவாடா செய்யும் பெரு வணிக நிறுவனங்களை நாம் உபயோகிக்கும் சிறு முடிவுகள், வெகு விரைவில் நம்மை சுற்றி உள்ள சிறு, குறு தொழில்களை, வியாபாரிகளை தோற்கடித்து வீழ்த்தி இல்லாமல் செய்து விடும் என்பதை நாம் அறியாமலே நமது சிறு முடிவுகளால் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றோம்.

 ஒரு கணக்கு சொல்கிறேன் புரிகிறதா பாப்போம்:

 நூறு நபர்களின் முடிவு = x = 100 x

இந்த நூறு நபர்களின் முடிவுகளின் விளைவாக X என்ற விளைவு ஏற்படுகிறது.

அதாவது 100 x = X

இந்த நூறு நபர்களுக்கும் அந்த விளைவில் X உடன்பாடா என நேரடியாய் கேட்டால், கட்டாயம் இல்லை என்றே சொல்வர்.

ஆனால் அந்த நூறு பேரின் முடிவு (x ) தான், இந்த விளைவின் (X) ஆதாரம் என்றால் நம்புவீர்களா

'சிறு துளி பெரு வெள்ளம்' இது சேமிப்பை மட்டும் குறிக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிறு துளியாய் அணையின் தண்ணீர் ஒழுகும்போதே அதை சரி செய்து விட வேண்டும், இல்லையேல் அது பெரு வெள்ளமாய் நம்மை அழித்து விடும். சிறு முடிவுகளின் பெரும் விளைவுகளை சிந்தித்து செயல்பட்டால், பேரவதியை தவிர்க்கலாம்.

    ஆன்லைன் ஆர்டர் செய்யவேண்டாம் என சொல்ல முடியாது ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி செய்வதை தவிர்த்து, நம்மை சுற்றி இருக்கும் சிறு, குறு வியாபாரிகளை ஊக்குவிக்கலாம்.

 உங்களுக்கும் உங்கள் சிறு முடிவுகளுக்கும் ஒரு சவால்:

 ATM களில் தமிழ் மொழியை பயன்படுத்துவதை தமிழர்களே அவ்வளவாக செய்வதில்லை.ஆங்கிலத்தை பயன்படுத்துவது நமது சிறு முடிவு தான். ஆனால் இன்னும் கொஞ்ச காலத்தில், ATM களில் முற்றிலுமாக தமிழ் மொழியே இல்லாமல் செய்யக்கூடிய பெரும் விளைவை நம் சிறு முடிவுகள் கொண்டு வரலாம்.

 உங்கள் சிறு முடிவுகளை சற்றே யோசித்து செய்யுங்கள்,

பெரும் பாதிப்பு தரும் விளைவுகளை தவிருங்கள்.