வெள்ளி, 5 ஏப்ரல், 2024

சட்டைய மாத்துங்க சார்

 ஒரு நாள் வேலைக்கு கெளம்பும்போது, பக்கத்து வீட்டுக்காரர் என்னைப் பார்த்து என்ன சார் இப்புடியே ஸ்கூலுக்கு போகப் போறிங்களான்னு கேட்டார். ஒன்னும் புரியாம, ஏன் சார் என்ன ஆச்சுன்னு கேட்டேன். சட்டைய திருப்பி போட்டு இருக்கீங்க சார்னு சொன்னதும் தான் எனக்கு புரிஞ்சுது. சிரிச்சுகிட்டே தேங்க்ஸ் சொல்லிட்டு வீட்டுக்கு போய் சட்டைய திருப்பி போட்டுட்டு ஸ்கூலுக்கு கிளம்பினேன்.

ஒரு சக மனிதனின் கவனித்தல், திருத்துதல் என்பது எனது நலனுக்கே என்ற பார்வையில், அதை பார்த்து அதை சரி செய்வது என்பது நமக்கு ஒரு இயல்பான செயலாகத்  தானே தோன்றுகிறது.

இல்லை நம்மில் யாராவது, நமது பக்கத்து வீட்டுக்காரரிடம், மொதல்ல உங்க சட்டைய ஒழுங்கா போட்டு இருக்கீங்களான்னு பாருங்க, அப்புறம் எனக்கு அட்வைஸ் பண்ணலாம்முன்னு சொல்லுவீங்களா?

அப்படி சொல்றவங்கள பாத்தா நமக்கு என்ன தோணும்? சரியான லூசா இருப்பான் போல இந்த ஆளுனு தானே யோசிப்போம். ஏன்னா இது பொது நடத்தை அல்ல. பிறழ் நடத்தைன்னு நமக்கு நல்லா தெரியும்.

இப்ப சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம். நம்மள சுத்தி மூணு பக்கத்து வீட்டுக்காரன் இருக்கான். அதாவது இந்தியாவ கூர்நோக்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள் அமெரிக்கா (Freedom House), ஸ்வீடன் (V-Dem) மற்றும் உலகளாவிய நாடுகளை தரவரிசை படுத்தும் மற்றொரு நிறுவனம் (The Economist Intelligence Unit), தங்களின் ஆண்டு அறிக்கையில் இந்தியாவை பற்றிய ஒரு சில கவனிப்புகளை முன் வைத்து உள்ளார்கள். இது வெறும் பக்கத்து  வீட்டுக்காரர் பார்த்து சொல்வது போன்ற செயல் அல்ல.

Freedom House ன் சமீபத்திய உலகளாவிய அறிக்கை 195 நாடுகள் மற்றும் 15 பிரதேசங்களில் உள்ள அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய முன்னேற்றங்களை உள்ளடக்கியது

 V-Dem நிறுவனம் 1789 முதல் 2020 வரை, 202 நாடுகளை உள்ளடக்கிய ஜனநாயகம் குறித்த மிகப்பெரிய உலகளாவிய தரவுத்தொகுப்பை வழங்குகிறது.

The Economists Intelligence Unit, 165 நாடுகள் மற்றும் இரண்டு பிரதேசங்களில் ஜனநாயகத்தின் தரத்தை பற்றியும் தற்போதைய நிலைமை பற்றியும் ஒரு அறிவியல் பார்வையையும் புரிதலையும் வழங்குகிறது.

இந்த கவனிப்புகள் ஏதோ போகுற போக்கில் சொல்லுகிற விஷயங்கள் அல்ல.

ஆழ்ந்த கூர் நோக்கும், அறிவியல் முறைகளில் பல்லாயிரக்கணக்கான நிபுணர்களும் வல்லுனர்களும் சேர்ந்து முன் வைக்கும் ஒரு கூட்டு அறிவியல் பார்வை.

தரவரிசையின்படி பார்த்தால், ஜனநாயகம், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரச்சனையில் இருப்பதாகத் தான்  தோன்றுகிறது.  உலக மக்கள் தொகையில் 68% வசிக்கும் நாடுகளில் தேர்தல் எதேச்சதிகாரங்கள் (ELECTORAL AUTOCACY) தான் இப்பொழுது உள்ளது.

ஆனால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஜனநாயகம் சீர்குலைந்து போவதுதான் பலரை கவலையடையச் செய்கிறது. ஹங்கேரி மற்றும் துருக்கியைத் தொடர்ந்து இந்தியா இதற்கு சமீபத்திய உதாரணம். இந்தியாவை பொறுத்த மட்டும் இவ்வளவு பெரிய மக்கள் தொகையுடன், ஜனநாயகத்தின் வெற்றிகரமான மாதிரியாக கடந்த காலத்தில் தனித்து நின்றிருக்கிறது. தற்போதை நிலைமை 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்குப் பிறகு தான் என்கிறது இந்த எல்லா நிறுவனங்களும்.

ஜனநாயகத்திலிருந்து வழுக்கி எதேச்சதிகாரத்தில் விழுந்து…

தேர்தல் எதேச்சதிகாரம் என்பது ஜனநாயகம் இருக்கு ஆனால் இல்லை” என்ற S J SURYA  ஜோக் மாறிதான். அங்கு ஜனநாயக நிறுவனங்கள் (ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் சட்டமன்றம், அமலாக்கத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகம்) உள்ளன, ஆனால் அவை சர்வாதிகார முறைகளைப் பிரதிபலிக்கும் வழிகளில் செயல்படுகின்றன.

விவேக் சார் சொல்வது போல "எப்படி இருந்த நான் இப்புடி ஆயிட்டேன்?" என்பது இந்தியாவுக்கு மிகவும் பொருந்தும். எப்படி இருந்த இந்தியா இப்புடி ஆயிடுச்சு. இந்தியா இன்று வெளித்தோற்றத்தில் ஒரு ஜனநாயக நாடு அவ்வளவுதான்; நடைமுறையில், அது மெல்ல மெல்ல ஜனநாயகத்தில் இருந்து வழுக்கி ஒரு எதேச்சதிகார அரசாக மாறி கொண்டிருக்கிறது.

வழுக்கல் ஒண்ணு

அதன் வெளிப்பாடு தான் மத்திய புலனாய்வுப் பணியகம், அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் வருமான வரித் துறை போன்ற "தற்சார்பு" அமைப்புகள், ஆளும் அரசாங்கத்துக்கு அடியாளாக மாறி, திட்டமிட்டு, ஆளும் அரசை  எதிர்ப்பவர் மீது குறிவைத்து தாக்குவது.

ஏப்ரல் 2ம் தேதி, 2021 இல் தமிழக சட்டசபை தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு, வருமான வரித்துறையினர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் சோதனை நடத்தினர்.

பிப்ரவரி 21, 2021 அன்று, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்பி, மற்றும் வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜியின் கதவைத் தட்டியது சிபிஐ.

செப்டம்பர் 2019 இல், மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீது அமலாக்க இயக்குனரகம் பணமோசடி வழக்கு பதிவு செய்தது.

2024 தேர்தலுக்கு முன்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் தற்போது அமலாக்க இயக்குநரகத்தின் (ED) கண்காணிப்பின் கீழ் உள்ள இரண்டு முதல்வர்கள்.

சரியாக ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது இந்த அரசின் சராசரி நிகழ்வாக மாறி விட்டது.

அதே நேரத்தில், 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய சாரதா ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முகுல் ராய் மீதான விசாரணை ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இதேபோல், 2020 டிசம்பரில் டிஎம்சியில் இருந்து பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி மற்றும் 2019 ஆகஸ்டில் பாஜகவில் இணைந்த  சோவன் சாட்டர்ஜி ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் விசாரணை முடங்கியுள்ளது.

அடுத்த வழுக்கல்

அடுத்த வழுக்கலுக்குக்கான காரணம், நீதித்துறைக்கான நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமை:

உயர் நீதிமன்றங்களில் புதிய நீதிபதிகள் நியமனம் மற்றும் ஏற்கனவே உள்ள நீதிபதிகளின் இடமாற்றம் ஆகியவை தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும் கேள்விக்குரியதாக இருந்தன, ஆனால் நீதிமன்றம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை மற்றும் நீதிபதிகளை இடமாற்றம் செய்ய அமைதியாக அனுமதித்தது.

பெரும் வழுக்கல்: ஊடகங்களைத் தணிக்கை செய்தல்

இந்திய அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் பேச்சு சுதந்திரத்தை வழங்குகிறது. இருப்பினும், REPORTERS WITHOUT BORDERS என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்பட்ட பத்திரிக்கை சுதந்திர குறியீடு (PRESS FREEDOM INDEX), 2022ல்,  இந்தியா 180 நாடுகளில் 150வது இடத்தைப் பிடித்துள்ளது.

பெரும் வழுக்கல் என்பதற்கு காரணம் இதுதான். இந்திய அதிகாரிகள் வரி விசாரணைகளை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி முக்கியமான செய்தி நிறுவனங்களை குறிவைத்து தாக்குகின்றனர்.

2002 - குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை விமர்சன ரீதியாக ஆய்வு செய்யும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு BBC நிறுவனத்தின் மீது வருமான வரி சோதனை ஏவப்பட்டது.

செப்டம்பர் 2020 - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் பிப்ரவரியில் நடந்த மதக் கலவரத்தின் போது டெல்லி காவல்துறை நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆகஸ்ட் 2020 இல் வெளியிட்ட அறிக்கை.   

இதன் விளைவாக, இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதன் அனைத்து பிரச்சாரம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை நிறுத்தி, அதன் முழு ஊழியர்களையும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் பணிநீக்கம் செய்தது.

ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 - அப்படியென்றால், அவர்கள் எது உண்மை செய்தி என்கிறார்களோ, அது தான் செய்தி. மற்றதெல்லாம் தூக்கி எறிய அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு. உண்மையை எடுத்து சொல்ல ஒருவராலும் முடியாது

ஆன்டி இந்தியன்

அரசியல் எதிர்ப்பை யாரெல்லாம் வெளிப்படுத்துகிறார்களோ அவர்களை ஆன்டி இந்தியன் என்கிறார்கள், அல்லது அவர்களை கொல்லுதல் போன்ற ஜனநாயகத்துக்கு ஊறு செய்யும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

முற்போக்காளர்களான எம்எம் கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் மற்றும் கெளரி லங்கேஷ்கர் ஆகியோரின் படுகொலைகளை நிகழ்த்தியது, ஹிந்து ஜன் ஜக்ருதி சமிதியும் அதன் தாய் அமைப்புமான சனாதன் சன்ஸ்தாவும்தான் என்பது மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. . ஆக மொத்தத்தில் அரசை எதிர்ப்பவர்களை அரசின் அல்லது மக்களின் எதிரிகளாகக் காட்டுகிறார்கள்.

சொல் புத்தி அல்லது சுய புத்தி:

இதை தான், நான் மேற்சொன்ன நிறுவனங்கள் (The Economists Intelligence Unit, V-Dem, Freedom House) தங்களது ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இதை இந்தியாவிற்கு எதிராக பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. இதில் உண்மை உண்டா இல்லையா என்பதை  தான் நாம் ஆராய வேண்டும். இங்குள்ள ஒரு சில ஊடகங்கள் விலைபோனதாலும், ஒரு சில உண்மை பேசும் நிறுவனங்களை ஒடுக்க முற்படுவதாலும், வெளி நாட்டு ஊடகங்கள் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

நாம் என்ன  செய்ய வேண்டும் என்பது தான்  முக்கியமான கேள்விக்குறி.

நமது பொது எதிரியை வீழ்த்த பொது நண்பரை ஆதரிக்க வேண்டும். நமக்குள்ளே தனி தனியாக பிரிந்து கிடக்காமல் ஒற்றுமையாய் எதிரியை வீழ்த்தி, பிறகு நமது வேற்றுமைகளை களைவதே புத்திசாலித்தனம்.

அழுவுணி ஆட்டம் 

சின்ன வயசுல ரோட்டுல விளையாடும்போது, எல்லா வெளயாட்டுலயும் ஒருத்தன் இருப்பான். அவுட் ஆனா ஒத்துக்காம அழுவுணி ஆட்டம் ஆடுவான். பிறரின் வாய்ப்பை கொடுக்காமல், தானே எப்படியாவது திரும்ப திரும்ப வெளயாடணும்ன்னு நெனப்பான். அவன் இருக்குற வரைக்கும் ஆட்டம் நல்லா இருக்காது. அவன ஓரமா ஒக்கார வச்சிட்டு அப்புறம் தான், நல்ல ஆட்டம் சூடு பிடிக்கும்.

இப்பவும் EVM மெஷின் தான் வேணும்னு அடம் பிடிப்பான்;

எதிர்த்து பேசுனா ஆன்டி இந்தியன்னு சொல்லுவான்;

அப்புடியும் தாக்கு புடுச்சா, அமலாக்கத்துறை பாய வைப்பான்;

வருமானவரித்துறையை  சீற வைப்பான்;

சிறையில் அடைப்பான்;

வங்கி கணக்குகளை முடக்குவான்;

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டுவான்; பணம் புடுங்குவான்;

அழுவுணி ஆட்டம் ஆடி கிட்டே இருப்பான்.

ஒரே வழி அவனை ஓரமா ஒக்கார வைக்கிறது தான்.

அழுவுணி ஆட்டம் ஆடுறவனை ஒக்கார வைப்போம் ஓரமா

அப்புறம் தான் உண்மையான ஆட்டம்.

புரிஞ்சுதா?