வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்… ஐயோ வேண்டாம்’

 இறைவனுக்கும் மனிதனுக்குமான உறவு ரொம்பவே விசித்திரமானது.



'உள்ளத்திலே கர்வம்கொண்ட போதினில் 

ஓங்கியடித்திடுவான்;

நெஞ்சில் கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு

காறியுமிழ்ந்திடுவான்;

பெரு வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி

மெலிவு தவிர்த்திடுவான்'

 

இலக்கியங்களை நமக்கு கொடுத்து, அதை நம்மை படிக்கவும் வைத்து

அழவும் வைக்கும் இந்த பிரபஞ்சத்தை எண்ணி சிரிப்பதா? அழுவதா?

 

பாரதியின் இந்த வரிகளைப் படிக்க நேர்ந்தது.

படித்த கணம் முதல் அழுகையை நிறுத்த முடியவில்லை.

கடவுளுக்கும் நமக்குமான உறவு ரொம்பவே புதிரானது.

‘எல்லாம் வல்ல இறைவன் நம் சுதந்திரத்தின் முன் மண்டியிடுகிறான்

நிர்கதியான இறைவன் முன் நாம் ஏதோ ஒன்றுக்காக சரணாகதி அடைகின்றோம்’

 

'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்… ஐயோ வேண்டாம்’ :

'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதும் இல்லை'

இந்த வரிகளை எழுதும்போது கவிஞரின் மனதில் என்ன ஓடியிருக்கும்?

நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், என்னவாகும்?

சற்று சிந்தித்து பாருங்களேன்.

 

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அது நமக்கு கிடைக்கும் சாபக்கேடு தான். அதுமட்டுமல்ல, நமக்கு எதெல்லாம் தேவையோ, அதையெல்லாம் நம்ம யாருகிட்ட கேட்போம்?

கடவுள் கிட்ட தானே.

ஒரு வேளை நமக்கு நினைப்பதெல்லாம் கிடைத்து விட்டால், கடவுள் பற்றிய ஒரு துளி சிந்தனையும் நமக்கு இருக்காதுதானே. எதார்த்தமான உண்மையை, ஒரு வரியில் சொல்லி விட்டு போய்விட்டார் கவிஞர்.

ஆங்கில இலக்கியத்தில், இதை ஒரு முழு பாடலாகவே எழுதிய வரலாறு உண்டு.



கப்பி – PULLEY :

ஜார்ஜ் ஹெர்பர்ட் எழுதிய "கப்பி" (1633) ஆங்கிலத்தில் 'Pulley' என்ற கவிதையை தான் நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். கப்பி என்பது கிணற்றில் இருந்து நீர் இறைக்க நாம் பயன்படுத்தும் சக்கரம் போன்ற ஒரு கருவி. ஒரு பக்கம் நாம் கயிறை கீழ் நோக்கி இழுக்க, கீழிருந்து தண்ணீரை மேல் நோக்கி அது இழுக்கும்.

ஏன் 'கப்பி' என்ற பெயர்க்காரணத்தை பிறகு காண்போம். முதலில், கவிஞர்களை பார்ப்போம்.

ஹெர்பர்ட்டும் கண்ணதாசனும்:


330 ஆண்டுகள் இடைவெளி, வெவ்வேறு கண்டங்கள், வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு கலாச்சாரம்  மற்றும் தனித்துவமான கட்டமைப்புகளால் பிரிக்கப்பட்டிருந்த போதிலும், ஹெர்பர்ட்டும் கண்ணதாசனும் ஒரே உளவியல் மற்றும் ஆன்மீகக் கருத்தை கையாண்டுள்ளது பெரும் வியப்பை உண்டாக்குகிறது.

ஆன்மீக மறதி :


மனிதர்கள் தாங்கள் விரும்பும் அனைத்தையும் பெறும்போது, ​​தங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாக ஒரு மாயையை வளர்த்துக் கொள்கிறார்கள். மனிதனின் தன்னிறைவு, இறைவனை மறக்கடிக்கிறது. ஆன்மீக மறதியை உருவாக்குகிறது:

ஆன்மீக நினைவூட்டல்:

மனிதனின் குறைபாடுகள் - விரக்தி, மனக்கவலைகள், நிறைவேறாத ஆசைகள் மற்றும் மனச்சோர்வு ஆகியவைஎல்லாவற்றுக்கும் முற்று புள்ளியாய் இறைவன் இருக்கின்றான்’ என்ற ஆன்மீக நினைவூட்டலைச் செய்கின்றன. அவை மனித அகந்தையைப் பணிவுடன் வைத்திருக்க உதவுகின்றன.

படைப்புச் சம்பவம்:

மனிதனைப் படைக்கும்போது, மனித இருத்தலுக்குத் தேவையான அனைத்து நற்பண்புகளையும் உள்ளடக்கிய "ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு கோப்பையை" ஏந்தி நிற்கும் ஒரு கைவினைஞராகக் கடவுள் சித்தரிக்கப்படுகிறார்.

மனிதர்களைப் படைக்கத் தொடங்கும்போது, ​​கடவுள் அவர்களுக்கு 'வலிமை, அழகு, ஞானம், நன்மதிப்பு மற்றும் இன்பம் போன்ற, உடல் மற்றும் அறம் சார்ந்த பண்புகளை ஒவ்வொன்றாக  தாராளமாக வழங்குகிறார்.


 இருப்பினும், அந்தக் கோப்பையிலிருந்து ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் அவர் கொடுத்து கொண்டே கோப்பையை காலி செய்யும் நிலையில், மிச்சமிருக்கும் இறுதி ஆசிர்வாதத்தைஅதாவது 'மன நிம்மதி' என்னும் 'மன நிறைவை'—வழங்குவதற்கு முன் கடவுள் சற்றுத் தயங்கி நிற்கிறார்.

 கடவுளின் தயக்கம் :

சர்வ வல்லமையுள்ள கடவுளே, இந்த கடைசி ஆசிர்வாதத்தை மனிதருக்கு கொடுக்க தயங்குகிறார். நிம்மதியை கொடுத்து விட்டால், அது மனிதரின் பக்தியின் தன்மையில் ஒரு ஆபத்தான மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அவர் உணர்கிறார்.

 

என்ன மாற்றம்? என்ன ஆபத்து?

இவ்வுலக சார்ந்த இன்பங்களால் மிகுந்த திருப்தி அடைந்துவிடும் மனிதர்கள், படைத்தவரை வழிபடுவதற்குப் பதிலாகப் படைப்பையே வழிபடத் தொடங்கிவிடுவார்கள்; அதாவது, "இயற்கையின் இறைவனை" வணங்காமல் "இயற்கையை" மட்டுமே போற்றுவார்கள்.


‘படைக்கும் கடவுளுக்கு தெரியாதா படைத்தவற்றின் குணத்தை பற்றி

இத்தகைய சூழல், "இருவருக்குமே பேரிழப்பை தரும்" என்று கடவுள் உறுதியாக நம்பினார்.

கடவுள் தனது படைப்பின் உச்சமாகிய மனிதனின் பக்தியை இழப்பார்;

மனிதர்களோ, நிலையற்ற உலக இன்பங்களிலேயே திருப்தியடைந்து நித்தியமான மீட்பை இழந்துவிடுவார்கள்.

 

நிம்மதியின்மை :

ஹெர்பர்ட்டின் பார்வையில், 'நிம்மதியின்மை' என்பது மனிதகுலத்தை மெதுவாக தன் பக்கம் இழுத்துக் கொள்ள படைத்தவன் பயன்படுத்தும் 'கப்பி' மனிதருக்கே தெரியாமல் தன் படைப்பை தன்னை நோக்கி இழுக்கும் கண்ணுக்கு புலப்படாத கயிறாகும்.


"The Pulley" (கப்பி) என்ற கவிதையின் மையக் கருத்து, 'மனித இருத்தலில் வெற்றிடமே' மனித வாழ்வை வரையறுக்கிறது என்று ஹெர்பர்ட் கருதுகிறார்.

 இந்த மையக் கருப்பொருள் பல்வேறு கலாச்சார மரபுகளிலும் எதிரொலிக்கிறது.

உதாரணமாக, தமிழ்க் கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற வரிகளான "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை" என்பதில்இதே போன்றதொரு புரிதலை நாம் காண முடிகிறது.

அதாவது, 'முழுமையான மனநிறைவு' என்பது ஒருவித ஆன்மீக மறதியை (spiritual amnesia) உருவாக்கிவிடுகிறது.

எவ்வளவோ வெற்றி பெற்றாலும்,

எவ்வளவோ புகழ் சேர்ந்தாலும்,

எவ்வளவோ அழகு அடைந்தாலும்,

எவ்வளவோ நன்மதிப்பு பெற்றாலும்,

எவ்வளவோ இன்பமுற்றாலும்,

இறுதியில் ஒரு நிம்மதியற்ற ஒரு சூழலே மனிதனுக்கு ஏற்படுகிறது.

இந்த நிம்மதியற்ற தன்மையே நம்மை இறைவனை நோக்கி நம் உள்ளங்களை எழுப்புகிறது.



புனித அகுஸ்தினார் சொல்வது போல,

'உம்மில் இளைப்பாறும் வரை

எங்கள் இதயங்கள் அமைதியற்றிருக்கின்றன'

 

அடுத்த முறை, கண்ணதாசனின் வரிகளை கேட்கும்போது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது போல் இறைவன் நம்மை அவரை நோக்கி இழுக்கிறார் என்பதை உணர்வோம்.

 


திங்கள், 22 ஜூன், 2026

விவாதங்கள் முடிவதில்லை

 

சில விவாதங்கள் ஒருபோதும் முடிவதில்லை

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.   (645)

தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும் என்று வள்ளுவர் 'சொல்வன்மை' யில் கூறுகின்றார்.

ஆனால் இந்த திருக்குறள், உறவுகளுக்கு இடையே ஏற்படும் உரையாடல்களுக்கு சொல்லப்பட்டதல்ல. ஆனால் பெரும்பான்மையோர் (என்னையும் சேர்த்துதான்), இதை உறவுகள் விரிய காரணமாக்கி விடுகின்றனர்.

உரையாடல் - விவாதம்:

எத்தனை முறை, நமது அன்பானவருடன் ஏற்பட்ட சிறிய உரையாடல், விவாதமாகி, விரிசல் ஏற்பட்டு, அமைதியாய் பிரிந்திருக்கிறோம். அந்த விவாதங்கள், அமைதியில் முடிந்தாலும் சரி; அல்லது ஆரவாரத்தோடு முடிந்தாலும்; அவை ஒரு போதும் முடிவதில்லை. அவை அந்த இடத்தை விட்டு, வேறு இடத்திற்கு பெயர்ந்து செல்கின்றனவே தவிர, ஒரு போதும் முடிந்து போவதில்லை.   

அவை அமைதியானதொரு இடத்திற்கு இடம்பெயர்கின்றன, அவ்வளவே. உங்கள் நினைவுகளின் ஆழத்திற்கு.

இடப்பெயர்ச்சி:

பெரும்பாலான விவாதங்கள், வார்த்தைகள் ஓய்ந்ததும் முடிவுக்கு வருவதில்லை. அவை மிகத் தாமதமாகவே முற்றுப் பெறுகின்றன.

சில நேரங்களில் பல வருடங்கள் கழித்து.

சில நேரங்களில் ஒருபோதும் முற்று பெறுவதே இல்லை.

வார்த்தைகள் நின்றுவிடுகின்றன.

மனிதர்கள் கடந்துவிடுகிறார்கள்.

வாழ்க்கை பரபரப்பாகிவிடுகிறது.

ஆனால், வியப்பளிக்கும் வகையில், பல கருத்து வேறுபாடுகள் வெறுமனே தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்கின்றன. அவை விவாதம் நடந்த அந்த அறையை விட்டு வெளியேறி, ஆழ் நினைவுகளுக்குள் குடியேறுகின்றன.

அங்குதான் அவை அமர்ந்திருக்கின்றன.

காத்திருக்கின்றன...

மிக அமைதியாக.

சரியான நேரத்திற்காய் காத்திருக்கின்றன:

'அன்று வேறு மாதிரி பதில் சொல்லியிருக்கலாமோ' என்று நீங்கள் ஏங்கும் ஒரு தருணம்.

நீங்கள் திருத்தாமல் விட்ட ஒரு புரிதல் குறைபாடு. அந்த புரிதலை சொல்லி தெரிய படுத்தி இருக்கலாமோ என்ற ஆதங்கம்.

விசித்திரம் என்னவென்றால், விவாதித்தவர் எப்போதோ விவாதத்தை நிறுத்திய பிறகும், நாம் இன்னும் அதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதுதான்.

வெளியே சத்தமாக அல்ல.

நம் மனதிற்குள்.

வாகனம் ஓட்டும்போது...

நடக்கும்போது...

உறங்க முயலும்போது...

யாரோ ஒருவர் சொன்ன சொல் நம்மை பழைய நினைவுகளுக்குள் தர தரவென இழுத்து செல்லும்போது;

நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், நம்மை தொடர்ந்து ஆட்கழிக்கும்போது.

எப்போதோ முடிந்து மடிந்து போன உரையாடலை, இப்போது மீண்டும் மீண்டும் மனத்திரையில் ஓட்டிப் பார்க்கிறோம்.

இன்னும் சிறந்த பதில்களை அதில் சேர்க்கிறோம்.

வலிமையான வாதங்களை முன்வைக்கிறோம்.

மூன்று வருடங்கள் தாமதமாக வந்து சேர்ந்த அந்த "மிகச்சரியான" பதிலைச் சொல்லிப் பார்க்கிறோம்.

முற்றுப்புள்ளி:

பல கற்றும், இது நாள் வரை நான் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதுதான் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நினைத்திருந்தேன்—. ஆனால் சமீபகாலமாக எனக்கு அதில் உடன்பாடில்லை.

சில விவாதங்கள், யாரோ ஒரு நபர் திறமையாக வாதிட்டதால், இறுதியாக வென்றுவிட்டதால், முடிவுக்கு வருவதில்லை. மாறாக, அந்த விவாதத்தின் சுமையைத் தாங்கித் தாங்கி ஒருவருக்கு அலுத்துப் போகும்போதுதான் அது முடிகிறது.

அதற்குக் காரணம் அறிவோடு விவாதித்தவர் வெல்லும் சொல் கொண்டவர் என்பதால் அல்ல; அல்லது அவர் சொன்னது சரி என்று அர்த்தமல்ல

அதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால்: அந்த விவாதம் இனிமேலும் தங்கள் மனதை ஆக்ரமித்து, மென்மேலும் துன்பம் தர அவர்கள் விரும்ப வில்லை என்று தான் பொருள்.

தங்கள் மனதின் வெளியை அவர்கள் இந்த விவாதத்துக்கு கையளிக்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

ஒருவேளை, அந்த வெற்றியை விடவும், இந்த மனவிலகலே அவர்கள் மனதிற்கு மிக நெருக்கமானதாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.