ஞாயிறு, 7 ஜூலை, 2024

நான் என்ன என் சகோதரனின் காவலாளியா? (வழிப்போக்கன் மனநிலை (Bystander Effect))

 நான் என்ன என் சகோதரனின் காவலாளியா?

 

“தினம் தினம் வெளியில் பயணித்து விட்டு, பத்திரமாக வீடு திரும்புவது, நாம் எல்லோரும் கவனிக்க மறந்த, அல்லது இது என்ன பெரிய விஷயமா என்று எடுத்துக்கொண்ட, ஆசீர்வாதம்.”

சென்னையில் தினம் தினம் பயணிப்போர் நான் சொல்வதை முற்றிலும் ஆமோதிப்பர். சென்னை மட்டுமல்ல, உலகின் எப்பகுதியில் வசிப்போரும் ஆமோதிக்கும் விஷயம் தான், நான் இப்போது சொன்னது.

ஒவ்வொரு நாளும் நான் எனது பள்ளிக்கு பயணிக்கையில், தினம் ஏதோ ஓன்று இரண்டு விபத்துகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். ஒன்றிரண்டு விபத்துகளை நானும் சந்தித்திருக்கிறேன். நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவது விபத்துகள் அல்ல மாறாக, விபத்தின் போது, நம்மை சுற்றி இருக்கும் மக்களின் நடத்தையே.

ஆம். வழிப்போக்கன் மனநிலை (Bystander Effect) என்ற மனித செயல்பாட்டை பற்றி தான் பேச விழைகிறேன். சரியான பெயர்தான். அவர்களுக்கும் நமக்குமான தொடர்பு அதுதானே. நாம் விபத்துக்குள்ளானவர்கள், அவர்கள் வழிப்போக்கர்கள்.

'வழிப்போக்கன் மனநிலை' என்றதும் எனது நினைவிற்கு வருவது "நல்ல சமாரியன்" பற்றிய விவிலிய நிகழ்வு தான். எல்லோருடைய புரிதலுக்காக அதை இங்கு தருகிறேன்.

ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்."

நாம் விவாதித்துக் கொண்டிருக்கும்விபத்து’ போன்ற நிகழ்வு தான் இதுவும். சமுதாயத்தின் உயர் நிலையில் உள்ள இரண்டு பேர் அந்த விபத்தை கண்டும் காணாது போய் விட்டனர். தாழ்ந்த சமூகத்தைச் சார்ந்த ஒருவர் உதவுவதாக இதில் காண்கிறோம். விவிலிய விளக்கத்திற்குள் செல்லாமல் மனித உளவியலின் வழி சிந்திப்போம், மனித செயல்பாட்டின் வழியில்,  இதை ஆய்வோம்.

 

ஏன் ஒரு சிலர் இதை பார்த்தும் பார்க்காமல் சென்றனர்?

ஏன்  ஒருவர் மட்டும் உதவ முன் வந்தார்?

தனி மனித ஆளுமை தான் இதை முடிவு செய்கிறதா? அல்லது

இயற்கையிலேயே ஒரு சிலர் குணவான்களாக பிறந்துள்ளனரா?

 

மூன்று காரணங்களை முன் வைக்கிறேன்:

ஒன்று: பிறருக்கு இல்லாத அக்கறை நமக்கேன்? என்ற மனப்பாங்கு.

இவ்வளவு பேர் இருக்கிறார்கள்? நான் ஏன் உதவ வேண்டும்.

யாராவது உதவுவார்கள் என்ற பொறுப்பை பிறர் மீது சுமத்தும் மனப்போக்கு.

 

இரண்டு: பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்சம். இதுவும் ஒரு காரணம்.

நாம் உதவ போய் நம்மை பிறர் கேலிக்கோ கேள்விக்கோ  உட்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம்.

உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேல? அப்புடின்னு மத்தவங்க முன்னாடி தல குனிய நேரிடுமோ அப்புடின்னு பயம்.

 

மூன்று: யாருமே உதவ முன் வரவில்லை, அதனால் அது ஒன்னும் அவ்ளோ பெரிய விபத்தா இருக்காதுன்னு நம்மை நாமே நமது அறியாமையினால் ஆற்றுப்படுத்திக் கொள்வது.

"பிரிட்டனில் 2 வயது சிறுவன் ஒருவனை (James Bulger) 10 வயது நிரம்பிய இரு சிறுவர்கள் தெருவில் இழுத்து அடித்து சென்று, கம்பியால் அடித்து கொன்ற சம்பவத்தில், மொத்தம் 38 சாட்சிகள் அந்த நிகழ்வை பார்த்ததாக சொல்லப்பட்டது. ஏன் உதவ வில்லை என்றபோது, அவர்கள் சொன்ன காரணங்கள் எவ்வளவு நம்மை நாமே அறியாமையினால் ஏமாற்றி கொள்கிறோம் என்பதற்கு சான்று. அவர்கள் சகோதரர்கள் அதனால் அவ்வாறு செய்கிறார்கள் என நினைத்தேன் என்று சமாதானம் சொல்லி கொண்டார்கள்."

இது ஒரு பாதுகாப்பு நெறிமுறை (Defense Mechanism). உதவாமல் வந்து விட்ட நமது குற்ற உணர்வை சரி செய்ய நமது மனது விளையாடும் ஒரு சித்து விளையாட்டு.

உணர்வா? அறிவா? இதயமா? மூளையா?

பொதுவாக, நாம் இதை போன்று வழிப்போக்கராக ஒரு விபத்தைப் பார்க்கும்போது, அந்த விபரீதத்தின் வீரியத்தில் இருந்து, பதற்றத்தில் இருந்து விடுபட நேரம் ஆகும். அதனால் சில சமயங்களில் ஏதும் செய்யாமல் நாம் இந்த சூழல்களில் உறைந்து போய் விடுகின்றோம்.

இந்த செயல்பாடு, உணர்வு சார்ந்தது.

வேறு சில சமயங்களில், விபத்தில் உள்ளவரின் நிலையில் இருந்து பரிவுடன் (Empathetic) நாம் அந்த நிகழ்வை பார்க்கும்போது, நம் பதற்றத்தையும் மீறி, நாம் நம்மை கட்டுக்குள் கொண்டு வந்து, அந்த நபருக்கு தேவையான உதவியை செய்ய முற்படுகின்றோம்.

இந்த செயல்பாடு, அறிவு சார்ந்தது.

இந்த உள் உணர்வுகள் தான், ஒரு சூழ்நிலையில் ஒரு மனிதனை உதவவோ, உதறி தள்ளவோ வைக்கிறது.

 

வழிப்போக்கனிலிருந்து நல்ல சமாரியனாய் மாறுவது எப்படி?

எல்லோருக்குமே இதை போன்ற வாய்ப்புகள் தினம் தினம் வாய்க்கத்தான் போகிறது. அந்த சூழல்களில் நாம் உறைந்து போய் உதவாமல் நம்மை நாமே ஆற்றுப்படுத்துகிறோமா? இல்லை நமது உணர்ச்சி மேலீட்டை சரி வர அறிவு சார்ந்த சிந்தனை வழியாய் நெறிப்படுத்தி உதவ முற்படுகிறோமா?

1. பாதிக்கப்பட்ட மனிதரின் மன நிலையில் இருந்து, அவரின் துன்பத்தை தனதாய் உணர்ந்து செயல்படுதல். ஆங்கிலத்தில் Empathy என்று சொல்லலாம்.

“ஒருமுறை, இளம் பெண் ஒருத்தி தெருவோரம் அமர்ந்து இருப்பதை பார்த்தேன். அவளை சுற்றி சுற்றி நோட்டம் இட்டுக் கொண்டு பலர் இருப்பதையும் பார்த்து விட்டு, என் மனதில் ஒரு சிந்தனை, என் மகளை இப்படி விட்டு விட்டு நான் ஒரு போதும் செல்வேனா? உடனே, வண்டியை நிறுத்தி, மகளிர் சிறப்பு காவல் பிரிவுக்கு அழைத்து, நிலைமையை கூறி, அவர்கள் வரும்வரை அங்கேயே இருந்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீடு திரும்பினேன்.”  

2. ஒருவர் ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தவுடன், உங்களுடன் முதலில் பேசுங்கள். நான் தான் இந்த சூழலில் அந்த நபருக்கு கிடைக்கும் முதல் உதவி என்று. Self Talk என்பது மிகவும் அவசியம். உங்களை நீங்கள் சமாதானப் படுத்தி விட்டால், பிறகு நீங்கள் தான் ஹீரோ.

 3. ஆபத்தான சூழலில், நீங்கள் மட்டும் உதவுவது ஆபத்தாகிவிடும். மற்றவர்கள் உதவுகிறார்கள், இல்லை என்பதை தாண்டி, மற்றவருக்கும் சேர்த்து என்ன செய்ய வேண்டும் என்பதை சத்தமாய் சொல்லுங்கள்.

போலீஸ்க்கு போன் செய்யுங்கள்;

தண்ணீர் கொடுங்கள்;

தடுத்து நிறுத்துங்கள்.

உங்கள் சொற்களுக்காக பலரும் தங்கள் உணர்வளவில் காத்து கிடக்கிறார்கள். உங்கள் சொற்கள் அவர்களை செயலில் ஈடுபட வைக்கும்.

4. இறுதியாக, நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா? என்று காயின் கேட்டதை போல, உங்களை நீங்களே அந்த சூழலில் இருந்து அந்நியப்படுத்தாதீர்கள். மாறாக, எல்லோரும் எனது உரிமைச் சகோதரர், சகோதரி என்ற உணர்வில் இருந்து செயல்படுங்கள்.

“ வழிப்போக்கர்கள் ஏராளம்

சமாரியர்களே அரிது

அரிதாய் இருங்கள் “