புதன், 20 மார்ச், 2019

நீயும் நானும் அன்பே

நீயும் நானும் அன்பே
சிறுவயது முதல் உன்னை காண கண்கள் ஏங்குது.
மறைந்திருந்து இரசித்த காலங்கள் உண்டு.
ஆனால் முக முக தரிசனமாய் இன்று கண் விழிப்பது முதல் கண்மூடும்வரை நீ.

காலத்தின் ஓட்டத்தில் நீயும் கூட வெகுவாய் இளைத்துவிட்டாய்.
உன்னை தூக்குவதற்கு மூச்சு முட்டிய காலம் போய், உன் மெல்லிய உடலால் மனதைத் திருடுகிறாய்.
ஆனால் உன் கலர் மட்டும் கூடிக்கொண்டே போகிறது.

என்னை வாயடைத்துப் போகச் செய்கிறது உன் பேச்சு.
காலை முதல் கடைசி வரை நீ பேச
சிந்திக்கவும் சிறிதளவு வாய்ப்பில்லாமல் நான் பார்க்க
மனங்களை உன் மந்தகார புன்னகையில் மழுங்கடித்தாய்.
உனக்கு பிடித்ததையெல்லாம் நீ சொல்ல - நானும் நேரக் கணக்கின்றி தவங்கிடந்தேன்.

உன்னை விட்டு பிரிய ஒரு போதும் மனமில்லை
பல நேரங்களில் உண்டு, உறங்கி, எழுந்ததும் உன் முன்னே.

நீ அரிதாக இருந்த காலங்களில்
வந்தாரை வரவேற்றோம் விருந்தோம்பினோம்
அன்றாடம் நீ வந்த பிறகு
அறவே மறந்தோம் உபசரிப்பை
வந்தோரை வரவேற்றோம் வேண்டா வெறுப்பாய்.

குழந்தைகள் உண்பதும் உன்னால்தான்
பெரியோரின் பொழுது போக்கும் உன்னால்தான்
என் மனைவிக்குத் தெரியாமல் உன்னை நான் இரசிப்பதுமுண்டு
எல்லோரும் தூங்கிய பின் உன்னை நான் உசுப்பியதுமுண்டு.
எதற்கும் எப்போதும் சிணுங்காமல் உன் பிரகாச முகம் காட்டுவாய்.

என் குழந்தைகள் உனக்கு அடிமை
என் பேச்சை கேட்பதை விட உன் பேச்சே அவர்களின் மகிழ்ச்சி
என் மனைவி கூட நான் சொல்வதை செவி மடுப்பதில்லை
காரணம் நீ சொல்லும் கதைகளில் அவள் தொலைந்து விட்டாள்.

இவ்வளவு ஆண்டு காலம் உடனிருந்தாய்
இப்போது உன் நண்பனையும் அழைத்து வந்து விட்டாய்.
உன்னை சமாளிப்பதே பெருங்கவலை
இப்படியிருக்கையில் இன்னொன்றா?
நீயாவது வீட்டிலேயே இருக்கிறாய் அவனோ கையை விட்டு போவதே கிடையாது.
அப்பப்பா தலை சுற்றுகிறது.

நீ தொலைக்காட்சி இல்லை தொல்லைக்காட்சி
உன் நண்பன் செல்லாப் பேச்சை வளர்க்கும் செல்பேசி.

கடவுளே !
எங்கள் குடும்பங்களையும்
               உறவுகளையும்
               கனவுகளையும்
தயவுச் செய்து தொலைக்காட்சியிலிருந்தும் செல்பேசியிலிருந்தும் காப்பாற்று.

பின் குறிப்பு:
தினமும் ஒரு சில மணி நேரம் கைபேசிகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் விடுப்பு கொடுங்கள்.
விடுமுறைகளை உறவுகளுடன் இயற்கையுடன் கொண்டாடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக