திங்கள், 23 ஜனவரி, 2023

நாய்கள் ஓய்வதில்லை

எங்களது நாய், ஒருபோதும் ஓய்வதில்லை. 
ஒருவரையும் வீட்டைக் கடக்க அனுமதியாது. குரைத்து குரைத்து தான்தான் காவல் என்பதை உரத்துச் சொல்லும். அதன் குரைத்தலை வைத்தே வந்திருப்பது மனிதர்களா? மற்ற நாய்களா? என அறிய முடியும். 

பல தூக்கமில்லா இரவுகளில் நீக்கமற உடன்நின்றவன். பக்க துணையாய் என் நேரம் பகிர்ந்த நண்பன். 

எனது குரலையும், குரலின் உணர்வையும் துல்லியமாய் அறிந்து கொள்ளும் அபூர்வ ஜீவி அவன். 
நான் கொஞ்சினால், மிஞ்சுவான்
நான் கொதித்தால், அடங்குவான்

வீடு திரும்பும் போதெல்லாம், இல்லத்தாள் இருக்கிறாளோ இல்லையோ, உள்ளத்தால் இவன் வரவேற்பான். 
நாய்களின் இதயம் வாலில் உள்ளதோ என்று பல கணம் நினைத்ததுண்டு. காரணம் வால்கள் ஓய்ந்து பார்த்ததேயில்லை. 

மனிதருக்கு மட்டும் தான் பொறாமை உண்டா? எனது பெண் குழந்தையை கொஞ்சினால், பொருமுவான், குமுறுவான். 

யாரைக் கண்டும், எதைக் கண்டும் பயமே கிடையாது. 
பல தெரு நாய்களை, ஒரு முறைப்பில் அடக்கி கடந்து செல்வான். 
அடங்க மறுக்கும், நாய்களுடன் சமரசம் பேசி சாதுர்யமாக தாண்டி செல்வான். 
சண்டை தான் என்றால், அதையும் ஒரு கைப்பார்ப்பான். 
ஒரு போதும் பயத்தைக் கண்டு பயந்ததே கிடையாது. 

ஒன்றுக்கு மட்டும் பயம்.
வெடிச்சத்தம். 
வெடிச்சத்தம் கேட்டால் 
நடு நடுங்குவான்
கதவு திறந்திருந்தால், கட்டிலுக்கு அடியில் தஞ்சம் புகுவான். 

அவன் என்மீது கோபப்படும் ஒரே தருணம்
அவனை நான் குளிக்க கூப்பிடும்போது மட்டும். தண்ணீருக்கும் அவனுக்கும் ஆயுட்பகை. 

அவனுக்கென்று ஒரு சுயமரியாதை உண்டு.
சாப்பாடு போட்டுவிட்டு நின்றோமானால், அசட்டுத் தனமாய் அகண்டு போவான். 
நாம் நகர்ந்த மறுகணம், அரக்க பரக்கத் தின்பான். 

பல தருணங்களில் அவனது கண்களைப் பார்த்துக் கலங்கியதுண்டு. 
அவ்வளவு தூய அன்பை வேறு எங்கும் பார்த்ததில்லை. 
அதனாலோ என்னவோ 
மனிதர்களை விட
இந்த மிருகங்களின் மத்தியில் இயல்பாய் இருக்கிறேன். 
பாதுகாப்பாய் உணர்கிறேன். 

நாய்களுக்கென்று ஒரு சொர்க்கம் உண்டென்றால், மனித சொர்க்கத்தை துறந்து, நாய்களின் சொர்க்கத்துக்கே செல்ல விரும்புகிறேன். 

வெயிலோ, மழையோ
விடுமுறையோ, வேலையோ
நலமோ, ஜூரமோ
நாயிடமிருந்து நான் கற்றுக் கொண்டது, 
"தன் பணி செய்வதே
தலையாய கடமை"

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

குப்பை வாழ்க்கை

குப்பை வாழ்க்கை


திக்கற்று தெருவில் நின்றதுண்டா?

மழையோ 

வெயிலோ 

வெள்ளமோ 

பஞ்சமோ 

கொண்டாட்டமோ 

கருமாதியோ

கையில் காசில்லாமல் 

தின்ன கதியில்லாமல் 

மாத்த துணியில்லாமல் 

மலம் கழிக்க ஒதுங்க இடமில்லாமல் 

தாகத்துக்கு தவித்தபடி 

எனக்கு மட்டும் ஏனிப்படி 

என மனக்குரல் மட்டும் ஓயாது ஒலிக்க 

திக்கற்று தெருவில் நின்றதுண்டா? 


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் 

வாடினாராம் வள்ளலார் 

வாடும் மனிதரை இழிந்த மயிராய்க் கூட 

மதிக்க இன்று ஆளில்லை 


தெருவில் நிற்கும்போதுதான் ஒன்று புரிந்தது 

எல்லா கதவுகளும் பூட்டப்பட்டு இருப்பது 

எல்லா இடங்களும் யாரோ ஒருவர்க்கு சொந்தம் என்று 

கக்கூஸ் கூட கதைவடைக்கப்பட்டிருக்கிறது 

பொது குழாய்கள் கூட பூட்டப்பட்டிருந்தது 

தெருவோர பிளாட்பார்ம்கள் மட்டும் தான் இலவசம் 

ஆனால் அதோடு மரணமும் இலவசம் 

கொழுத்த குடித்த பணக்காரனுக்கு 

தன் சொகுசு காரை ஓட்ட 

ரோடு பத்தலையாம் - எங்கள் 

மண்டை ஓடும் தேவையாம் 


தெருவில் நிற்பவனுக்கு 

ஜனநாயகமும் ஒன்றுதான் 

சர்வாதிகாரமும் ஒன்றுதான் 

ஒரே வித்தியாசம் ...

சர்வாதிகாரம் எங்களை சாகடிக்கும் 

ஜனநாயகம் எங்களை மறக்கடிக்கும்