ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

கொடுப்பதன் தகுதி

விசித்திர அனுபவம் அது 

பின்பனி காலம், வைகறை காலையை அபூர்வ மழை நனைத்துக் கொண்டிருந்தது. காலை எழுந்தவுடன் நான் அது காலை தானா என்று உறுதி செய்தபிறகு அன்றைய பொழுதை தொடங்க குளித்து, துலக்கி, உடுத்தி வெளியில் வந்து வண்டியுடன் சிறு உரையாடல் செய்து பின் தொடங்கியது என் பணி பயணம். 

மழை விட்டது போலிருந்தது. சூரியன் இன்னும் தூக்கம் களையவில்லையோ என்பது போல் வானமெங்கும் மந்தம். கத்திபாரா தாண்டியதும் வானம் சிணுங்க தொடங்கியது. சிணுங்கல் அழுகையாக மாறியபோது சைதைக்கு சற்று முன் இருந்தேன். தண்ணீர் பார்த்து பல நாட்களான என் வண்டியின் எல்லா பாகங்களிருந்தும் தண்ணீர் பட்டு புகை. ஈரமான தொடுதலுக்கு இணங்காமல் இருக்க என் வண்டி மட்டும் என்ன விதிவிலக்கா?

டீக்கடை பக்கம் ஓரம் கட்டினேன். வண்டியை நனையவிட்டு நான் ஒதுங்கினேன். குளிர் கால 20 டிகிரி வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக இளவேனில் கால 31 டிகிரியை தொட்டு விட்டது. இந்த நேரத்தில் ஏன் மழை? என காரண காரியங்களில் மனது சுற்றியது. Climate change பற்றி அறிவு கொஞ்ச நேரம் அலசியது. எதுவும் நம் control லில் இல்ல. என்னுடைய உடம்பே சொல் பேச்சை கேட்பதில்லை. மனசை பத்தி சொல்லவே வேண்டாம். இதெல்லாம் இப்படி இருக்கையில் பிரபஞ்சம் மட்டும் கட்டுப்பாட்டுக்குள் எங்கே இருக்க போகிறது என்று மனசுக்குள் கதைத்துக் கொண்டேன். 

சுட சுட காப்பியை சொல்லிவிட்டு, அங்கிருந்த வினோத போண்டாவைப் பார்த்தேன். புதுக்கவிதை போல இருந்தது. போண்டாவுக்குரிய எல்லா மரபுகளையும் மீறி இருந்தது. வெளியே நிலையற்ற கரடு முரடு உருவம், உள்ளே மென்மை. காப்பியும் கரடு முரடு போண்டாவும் வார்த்தைக்கு அப்பாற்பட்டது. என்னையே மறந்து ரசித்த ருசித்த போதுதான் அவ்வுருவத்தை கண்டேன். 

களைந்த முடி; தாறுமாறான தாடி; 

அரைக்கால் சட்டை அரை தான் உடம்பில் இருந்தது. 

மேலுக்கு அவன் அணிந்திருந்த கந்தலில் கொஞ்சம் பனியனும் ஒட்டியிருந்தது. 

தூரத்தில் அவன் வருவதை கண்டேன். 

அவன் வருகையை கண்டு அங்கிருந்து ஒரு சிலர் அவன் பார்வையை தவிர்க்க ஒதுங்கினார். 

"வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின் றோர் என்

நேருறக் கண்டுளந் துடித்தேன்"

என்று வள்ளலார் அன்றே பதைத்தார். 

வறியவரை நம்மில் பலர் பார்க்கவே தயங்குகிறோம் ஏனென்றால் வள்ளலாருக்கு வந்த பதைபதைப்பு நமக்கேன் என்று தான். 

அவன் கொஞ்சம் கொஞ்சமாய் அருகில் வந்து என் முன்னே நின்றேன். ஒரு கணம் என்னை பார்த்து, பார்த்தவாறே நின்றான். அடுத்த கணம் என்னை பார்த்து சட்டென்று டீ என்றான். மறு  பேச்சு இல்லை. 

நான் பதில் சொல்வதற்குள் கடைக்காரன் அவனை விரட்டத் தயாராகினான். நான் கடைக்காரனை கையமர்த்தி "டீ கொடு" என்றேன். கடைக்காரன் அமைதியானான். 

அடுத்து, அந்த வினோத மனிதனைப் பார்த்து "போண்டா சாப்புடுறீயா?" என்றேன். "வேண்டாம் அண்ணா, டீ போதும்" என்றான். என்னால் நம்ப முடியாமல், மீண்டும் கேட்டேன். 

மீண்டும் வேண்டாமென்றான். 

என் மனதுக்குள் சிறிது குழப்பம். 

இவன் நிலையில் நான் இருந்திருந்தால் நான் என்ன சொல்லி இருப்பேன். 

கட்டாயம் கிடைத்த வரை லாபம் என்று தான் நினைத்திருப்பேன். 

நானாக கேட்காமல் தானாக வரும்போது அதை வேண்டாம் என்று யாரும் மறுக்க மாட்டோம்.

ஆனால் அந்த வினோத மனிதனின் விசித்திர பதிலை புரிந்து கொள்ள முடியவில்லை. 

சற்றும் தயங்காமல் வேண்டாம் என்றான். 

தனது தேவையை மட்டும் பெற்றுக் கொண்டான் 


எத்தனை பேர் அரசு கொடுக்கும் இலவசங்களுக்கு போலி சான்றிதழ் கொடுத்து ஏமாற்றி வாழ்வதை பார்த்திருக்கிறேன். 

ரேஷன் கார்டு இல் வருமானத்தை குறைத்து சலுகைகளை பெறுவதை இன்றும் பார்க்கலாம். 

ஓசியில் எதை பெறவும் எதையும் செய்ய தயங்காதவர்கள் மத்தியில், நான் கண்ட வினோத மனிதனை "பிச்சைக்காரன்" என்று அடையாளப்படுத்துவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

புறநானூற்றில் கீழ் கண்ட பாடலை அறிந்த போது, தமிழரின் கொடை பண்பைக் கண்டு வியந்து போனேன். 

"ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்

பலரும் வருவர், பரிசில் மாக்கள்;

வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்

ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;

அது நற்கு அறிந்தனை யாயின்,

பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே"  


ஒரு திசையில் புகழ் பெற்று விளங்கும் ஒருவனிடம் பரிசில் பெறுவதற்காகப் பல திசையிலிருந்தும் வருவார்கள். கொடை வழங்கும் குடிப்பிறப்பே! அவர்களின் தரத்தை உணர்ந்துகொள்ளுதல் கடினம்தான். என்றாலும் அனைவரையும் ஒரே சமமான கண்ணோட்டத்தில் பார்த்து அவர்களுக்குப் பரிசில் வழங்கும் உன் பொதுக் கண்ணோட்டத்தைத் தவிர்ப்பாயாக.  

மேலை நாடு "The Beggars can't be choosers" என்று நமக்கு சொல்லித் தருகிறது. தமிழ்ச் சமூகமோ இரப்பவனின் தகுதியை அறிந்து கொடு என்று கற்பிக்கின்றது. கொடுப்பவன் மேலானவன்; இரப்பவன் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை ஒழித்து, கொடுப்பதற்கு உரிய தகுதியை வளர்த்துக்கொள்ள சொல்லித்தருகின்றது.

"அனைவரையும் ஒரே சமமான கண்ணோட்டத்தில் பார்த்து அவர்களுக்குப் பரிசில் வழங்கும் உன் பொதுக் கண்ணோட்டத்தைத் தவிர்ப்பாயாக" என்பதன் மூலம், இரப்பவனின் தேவையை முன்னிறுத்துகின்றது. 

பிச்சை எடுப்பது யாருக்கும் இன்பமான செயல் அல்ல. தனது சுயமரியாதையை இழந்து மற்றவரிடம் கேட்பது என்பது நம்மில் பலருக்கு ரொம்ப கடினமான செயல் தான். ஆனால் பிச்சை எடுப்பவரையும் அதை மகிழ்ச்சியாக செய்ய வைப்பது எது தெரியுமா? 

கொடுப்பவரின் மன நிலைதான். கொடுப்பவரும் கேட்பவரும் மனம் நோகாமல் பொருள் பரிமாறினால் பிச்சை எடுப்பதும் இன்பமே. 

இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் கொடுப்பவர்களை காணும்போது, கேட்பவர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும் என்கிறது திருக்குறள். 

அன்று காலை அந்த வினோத மனிதனின் விசித்திர பதில் என்னை சிந்திக்க வைத்து, கொடுப்பதற்கான என் தகுதியை எனக்கு உணர்த்தியது. 


"கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை"

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக