சனி, 30 செப்டம்பர், 2023

வாழு வாழவிடு

 வாழு வாழவிடு

நினைவு தெரிந்தது முதல், நான் வளர்ந்தது நாய்களோடும், கோழிகளோடும், முயல்களோடும் தான். தெருவில் சென்று மற்ற பிள்ளைகளோடு நான் விளையாடிய நாட்களை விட, மொட்டை மாடியில் நாயோடு நாயாக திரிந்த நாட்கள்தான் அதிகம்.

விடிந்ததும், வேகமாய் போய் எத்தனை முட்டைகள் போட்டிருக்கிறது கோழி என்பதில்தான் வெகு நாட்கள் விடிந்தன.

ஆளுக்கொரு முயல்குட்டி எனத் தொடங்கி, பலுகி, பெருகி, குட்டி மேல் குட்டி போட்டு குடும்பம் பலுகியது.

விலங்குகளின் வாசம் என்றும் நாசியில் மணக்கும். எனது இளம்பிராயம் இந்த விலங்குகளின் ஊடே தான் வளர்ந்தது.

ஒரு நாள் விருந்தினர் வருகை நிமித்தம், ஒரு சில முயல்களை சமைத்ததை அறிந்து தேம்பி தேம்பி அழுத நாட்களை இன்று நினைத்தாலும் கண் ஈரம் கசிகிறது.

அந்த விருந்தினரை இன்று வரை நான் முகம் கொடுத்து பேசுவது கூட கிடையாது.

அந்த பிராயத்திலேயே மனதுக்குள் பல கேள்விகள் என்னை வாட்டியது.

"அந்த முயல்கள் நம்மை நம்பித்தானே இங்கு அடைந்து கிடந்தன. தூக்கி சுமந்த இந்த கரங்கள் கழுத்தறுக்கும் என அவை நினைத்திருக்குமோ?

பள்ளிப்பருவம் முடிந்து பல்வேறு இடங்களில் கல்வி நிமித்தம் போனபோது, விலங்குகளோடு என்னை தொடர்பு படுத்திக் கொண்டேன்.

வள்ளுவனை நினைக்கையில் பேருவுகை கொண்டது உள்ளம். சும்மாவா சொல்லிப் போனான் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று. இன்று சகமனிதரை கூட சமமாய் பார்க்க இயலாது குறுகிய சிந்தனை வட்டத்தில் சிக்கி திணறிய போது, சக உயிர்களை சமமாக பார்க்க துணிந்தவர் தான் வள்ளுவர்.

வள்ளுவரின் வரிகளை உள்வாங்கிய கதைதான் ஜெயமோகனின் "யானை டாக்டர்". வனத்துறை மிருக வைத்தியர் டாக்டர். வி. கிருஷ்ணமூர்த்தி (டாக்டர் கே) பற்றிய கதை. படிக்க படிக்க பக்கங்களிலிருந்து காடு, மேடு, பள்ளத்தாக்கு என நம்மை இழுத்துச் செல்கிறது கதை.

 டாக்டர் கே வின் அறிமுகமே ஒரு மறக்க முடியாத அனுபவம். அருவருக்கச் செய்யும் அனுபவம், செத்து அழுகிய யானையைப் பிரேதப் பரிசோதனை செய்யும் அனுபவம். மொய்க்கும் புழுக்களின் மத்தியில் நிற்கும் டாக்டர் கே. கொஞ்சம் கொஞ்சமாய் நம் மனதில் நிற்பதை உணரலாம்.

 

"மனிதன் மட்டும் தான் லியை கண்டு பயப்படுகிற மிருகம்.           மத்த  மிருகங்களெல்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்குறதில இருக்கிற கம்பீரத்தைப் பாத்தா கண்ணுல தண்ணி வந்துடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது. துடிக்காது. கண் மட்டும் சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்க மருந்தே குடுக்காம சர்ஜெரி பண்ணலாம். அந்த அளவு பொறுமையாத்துக்கிட்டு நிற்கும்.

What a Being? God must have created elephants in the peak of his creative mood?

 மனுஷந்தான் வலிய கண்டு அலர்றான்.

                  மருந்து எங்க மாத்திர எங்கன்னு பறக்கிறான்

                  கைக்கு அகப்பட்டதைத் தின்னு அடுத்த நோயை வரவச்சிடுறான்

                  Man is a pathetic being. 

                  உண்மையிலேயே மனுஷந்தான் ரொம்ப வீக்கான மிருகம்"

                                                                                  "யானை டாக்டர்", ஜெயமோகன் 

 என்ற வரிகளைப் படித்த போது தான், மிருகங்களின் வாழ்க்கையை உணரும்போதுந்தான் நமது வாழ்க்கையை எவ்வளவு பரிதாபமாக வாழ்கிறோம் என்பதை உணர்கிறோம் என புரிந்தது.

 உண்மையிலேயே நம்மை ஆறறிவுள்ளவன் என பீத்திக் கொள்வதில் ஒரு பெருமையும் இல்லை.

ஆறறிவில் எதைச் சாதித்தோம்?

ஏனைய உயிர்களை அழித்து நாம் மட்டும் வாழும் உலகை உருவாக்கி உள்ளோம்.

1970 முதல் 2014 வரை கிடைத்த தரவுகளின் படி உலகில் வாழும் 60%  விலங்கு தொகையை ஆறறிவு சமுதாயம் அழித்துவிட்டது. 60% விலங்கு தொகையை மக்கள் தொகையோடு தொடர்பு படுத்தி  புரிந்து கொண்டோமானால் வட அமெரிக்காதென் அமெரிக்காஆப்பிரிக்காஐரோப்பாசீனா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை  சுத்தமாக காலி செய்தது போன்ற சமம்.

இதுதான் நம் ஆறறிவின் லட்சணமா?

 Lord Byron தனது நாயின் கல்லறையில் பின்வருமாறு எழுதியுள்ளார்:

                        " நாய் வாழ்க்கையின் உன்னத நண்பன்

                         வரவேற்பதில் முதல்வன்

                         பாதுகாப்பதில் முந்துபவன்

                         அவன் நேர்மை நெஞ்சம் உரிமையாளனுக்கே சொந்தம்

                        அவனுக்காகவே உழைக்கிறான்

                        உண்டு உயிர்க்கிறான்

                        ஆனால் நாய்க்கு சொர்க்கத்தில் இடமில்லை

                        மாறாக, மனிதனான ஒன்றுக்கும் உதவா உயிரி (Man, a vain insect)

                        சொர்க்கத்தை சொந்தம் கொண்டாடுகிறான்.

                        மனிதா! காலத்தின் பிச்சை தான் உன் வாழ்க்கை

                        அடிமைப் படுத்தும், அதிகாரம் செலுத்தும்

                        உன் இருப்பை நினைத்து எரிச்சலடைகிறேன்.

                        உனது அன்பு வெறும் சதைகளின் தேவை

                        உனது நட்பு ஒரு ஏமாற்று வேலை

                        உனது நாக்கு வெளிவேடத்தனத்தின் ஒட்டுமொத்த குத்தகை

                        உனது நெஞ்சம் ஒரு புதைகுழி

                        நாயைப் போன்ற ஒரு நண்பன் ஒருவனும் எனக்கில்லை

                        இதோ என் நண்பன் இங்கு உறங்குகிறான்"

 

யாரோ ஒருவர், "நாய்கள் இல்லாத சொர்க்கம் எனக்கு தேவையில்லை. இறந்த பிறகு நாய்கள் வாழும் சொர்க்கத்துக்கே போக விரும்புகிறேன்" என்று சொல்லக் கேட்டதை கேட்டு சிரித்த காலம் உண்டு. இன்று அம்மனிதனின் சொற்களை நினைத்து வியக்கிறேன். உணர்கிறேன்.

 வள்ளுவரின் வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை உங்களுக்குள் சொல்லிப் பாருங்கள் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்". விலங்குகளோடு பழகாமல் அவற்றை உணராமல் அவரால் அப்படி சொல்லியிருக்க முடியுமா? முடியவே முடியாது.

வள்ளுவனின் நாய்க்கு என்ன பெயர் வைத்திருப்பான்? வெண்பாவா?

 பிற உயிர்களோடு இயைந்த வாழ்க்கையை தான் கட்டாயம் வாழ்ந்திருப்பான் என்று கட்டாயம் நம்புகிறேன்.

 "என்பில் அதனை ..." குறளில் எலும்பு இல்லாத புழு படும் பாட்டை அறிந்திருக்கிறான், உணந்திருக்கிறான், வாழ்ந்திருக்கிறான்.    

 "ஒருமையுள் ஆமை போல் ..." என்ற குறள் மூலம் ஆமையின் உடலை அறிந்து    எழுதி உள்ளான்

“பகல்வெல்லும் கூகையை காக்கையை...” என்ற குறள் மூலம் வள்ளுவன் காக்கையையும் ஆந்தையையும் இரவிலும் பகலிலும் ஆராய்ந்து கவனித்து இருக்கிறார் என்று தெரிகிறது.

"ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர் ..." என்ற குறளில் ஆட்டுக்கிடாயின் சண்டையிடும் தன்மையை ஆட்டுச்சண்டையில் இருந்து கற்றிருக்கிறார்.

"கொக்கக்க ..." என்ற குறளில் பொறுமையாய் காத்திருக்கும் கொக்கை கூட பொறுமையாய் பார்த்து அதனிடமிருந்து கற்றுள்ளார்.

 "நெடும்புனலுள் வெல்லும் முதலை ..." என்ற குறள் வழி வள்ளுவர் முதலையையும் விட்டு வைக்க வில்லை என்று தெரிகிறது.

 

மேலும், யானை, சிங்கம், புலி என எல்லா உயிர்களை பற்றியும் விவரிக்கிறார்.

 எல்லா உயிர்களும் வாழத் தகுதியுடையவை என்பதை அனுபவித்து எழுதியுள்ளார்

இன்றைய தலைமுறைக்கு இவை கட்டாயம் தேவை

குரங்குக்கு மிளகாய் தடவி கொய்யா கொடுப்பது

காடுகளில் குடித்து விட்டு பாட்டில்களை எறிவது

ஓணான் வாயில் சிகரெட் புகைக்க வைப்பது

கழுதை  வாலில் டின் கட்டுவது

நாயை கண்டதும் கல் எறிவது

ஆயிரக்கணக்கில் கடல்வாழ் சீல்களை கொல்வது

டால்பின்களை கொத்து கொத்தாக பிடித்து விற்பது

அமேசான் காடுகளை சிதைப்பது

கண்ட குப்பைகளையும் கடலில் கொட்டுவது

இதுதான் இன்றைய ஆறறிவு சமுதாயம் சாதித்தவை.

 

விலங்குகள் இல்லாத உலகத்தில் நம்மால் வாழவே முடியாது.

மனிதர்கள் இல்லாத உலகத்தில் விலங்குகளால் நன்றாகவே வாழ முடியும்.

நமக்கு இந்த ஐந்தறிவு விலங்குகள் உரைக்கும்படி சொல்வது ஒன்றுதான்:

 "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"

எல்லா உயிர்களுக்கும் வாழ தகுதி உள்ளது

“EVERY BEING IN THIS WORLD HAS THE RIGHT TO EXIST AND CO EXIST”

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக