புதன், 9 ஏப்ரல், 2025

ஒரு ஸ்பெஷல் சாதா...

தலைக்கு மேல் வேலை இருந்தது... மனைவியிடம் சொல்லி விட்டு, முடி வெட்டலாம் என சலூனுக்குப் போனேன். எனது முறை வந்ததும், போய் சுழலும் நாற்காலியில் உட்கார்ந்தேன். என்னை சுழல விட்டு, என் தலையையே பார்த்தான் அந்த பையன். அப்படி பட்ட பார்வை எனக்கு பழகி இருந்தது.

சாதாவா? ஸ்பெஷல் ஆ? ன்னு கேட்டான்.

என் தலைக்கு ஸ்பெஷல்லா வெட்டுனாலே, அது சாதாவா தான் தெரியும் தம்பி. அதனாலே, சாதாவே வெட்டுன்னு சொன்னேன்.

சாதாவா? என ஒரு கேவல தொனியில் கேட்டுவிட்டு வேலையை வேண்டா வெறுப்பாய் தொடர்ந்தான்.

தலை 'கனம்' குறைந்ததால், வீடு திரும்புகையில் ஹோட்டல் போய் டிபன் சாப்டுட்டு. ஒரு காபி குடிச்சுட்டு போலாம்னு நெனச்சேன். போய் உட்கார்ந்ததும், பக்கத்து டேபிளில் சர்வர் பையன், நீண்ட உணவு பட்டியலை 5 நிமிடமாக ஒப்பித்துக் கொண்டிருந்தான். நீண்ட பெருமூச்சு விட்டு அவன் முடித்த போது, 'பக்கத்து டேபிள் காரர் இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல்னு கேட்டார்அதை அந்த சர்வர் பையன் மூச்சு முட்ட சொல்லும் முன்னமே கேட்டு இருக்கலாமே? ன்னு நினைத்து கொண்டேன்.

அதே யோசனையில் 4 இட்லி சாப்டுட்டு, காப்பி கேட்டேன். சாதா காப்பியா? இல்ல டிகிரீ காப்பியான்னு சர்வர் பையன் என்னை கேட்டான்?

என்னப்பா வித்தியாசம்? ன்னு கேட்டேன்.

டிக்ரீ காப்பில, பால் தண்ணி கலக்காம 'திக்கா' இருக்கும் சார். அதுமட்டுமில்ல, பில்டர் காபி தூள் மட்டும் தான் பயன்படுத்துவோம் சார்ன்னு  விளக்கம் சொன்னான்.

வீடு திரும்பும்வரை, சாதா, ஸ்பெஷல் யோசனையாவே இருந்தது.

 

வரும்போது தான் கவனித்தேன்... பேருந்துகளில் சாதா பேருந்து, டீலக்ஸ் பேருந்து இருந்தது. அவ்வளவு ஏன்? swiggy, zomato, Blinkit, Zepto போன்ற இணைய வழி சேவைகளில் கூட, சாதா டெலிவரி, express டெலிவரி உள்ளதை உணர்ந்தேன். தெய்வ தரிசனங்களே கூட இன்று சாதா தரிசனம், ஸ்பெஷல் தரிசனம் என்றாகி விட்டது.

இந்த வாழ்க்கை எதை தான் விட்டு வைத்தது?

மனிதர்களை கூட மாத்தி வச்சுருக்கு.


இரண்டு இடங்கள் இந்த கருத்தியலை நம் மனதுக்குள் திணிக்கின்றன.

ஒன்று வீடு:

அவனைப் பார் எப்புடி படிக்கிறான்?

அவள பார் maths ல 100 மார்க் எடுக்குறா?

அந்த பையன பாத்தியா? கோல்ட் மெடல் வாங்கி இருக்கான்.

அந்த பொண்ண பாரு? எவ்ளோ fair ஆ அழகா இருக்குறா?

அந்த ஆள பாரு, காசுல மெதக்குறான்.

இவ்வாறு சாதாரண வாழ்க்கை வேண்டாம்; ஸ்பெஷல் வாழ்க்கை தான் வேணும்னு வீட்டுலயே, இந்த உள்ளார்ந்த மனவியலை உருவாக்கி விடுகிறோம்.

இரண்டு: பள்ளி

பள்ளிகளில் சொல்லவே தேவையில்லை.

ஆசிரியர்களும், பெற்றோர்களும் தனது குழந்தை ஸ்பெஷல் குழந்தையாகவே இருக்க விரும்புகிறார்கள்.

சராசரி மாணவர்களை அவர்கள் சீண்டுவது கூட கிடையாது.  

 

சாதாரண வாழ்க்கை என்பது வெற்றியடையாத வாழ்க்கை அல்ல.

அது பொருளாதார ரீதியான வெற்றியை முக்கியமானதாக கருதுவதில்லை

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திரு. ஜாதவ் பயேங்கை (Jadav Payeng) பலருக்கும் தெரியாது. மிகவும் எளிமையான மனிதர், ஒரு சிறிய குடிசை வீட்டில் வசிக்கிறார். டிவி, குளிர்சாதன பெட்டி, ஏசி, இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனம் அல்லது பிற அடிப்படை விஷயங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

இவர் இந்த உலகத்தின் பார்வையில் ஒரு சாதாரண மனிதன் தான்.

பல ஆண்டுகளாக அவரது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

எந்த கோணத்தில் பார்த்தாலும் அவர் ஒரு சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தார்.

15 ஆண்டுகளாக, இந்த சமூகம் அவரை ஒரு சாதாரண வேலை செய்யும் ஒரு 'சாதாரண மனிதர்' என்றும், இன்னும் சொல்ல போனால், 'தோல்வியுற்றவர்' என்றும் முத்திரை குத்தியது.

ஆனால் அவர் தனது வழியில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

உலகம் முழுவதும் இவர் 'இந்தியாவின் வன மனிதன்'  என்றே  அறியப்படுகின்றார்.

தனது 16 வயதில் மரங்களை நேசித்து மரக்கன்றுகளை நடுவதற்கு தொடங்கிய அவர், 36 ஆண்டுகள் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்து வந்தார்.

இது இப்போது 1360 ஏக்கர் வனப்பகுதியாக மாறி விட்டது.

மேலும் 100 க்கு அதிகமான யானைகள்,

ஐந்து/ ஆறு புலிகள்,

சில காண்டாமிருகங்களின் வாழ்விடம் ஆகி போனது.

ஆனால் தனது தாய்நாடான இந்தியாவிலேயே இவர் ஒரு ஸ்பெஷல் மனிதராக இல்லை.

ஆனால் தனக்கு எது அர்த்தம் தருமோ, அதை அவர் பாணியில் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

 

Franz Kafka, என்ற யூத எழுத்தாளர், வாழ்க்கையை பற்றி கூறுவது இங்கு நம் கவனத்தை ஈர்க்கிறது.

"என்னை பொறுத்தவரை வாழ்க்கை அர்த்தமுள்ளது போல ஒரு மாயை உருவாக்கபட்டுள்ளது.

இங்கு கல்வி, பணம், புகழ் மற்றும் பலவற்றை சேர்ப்பதோ அல்லது அவற்றை அடைவதோ மட்டுமே அர்த்தமுள்ள வாழ்க்கை என நினைக்கிறோம். அது ஒரு மாயை நமக்கு நாமே உருவாக்கியது.

பிச்சைக்காரன் முதல் கோடீஸ்வரன் வரை,

முட்டாள் முதல் விஞ்ஞானி வரை

நல்லவன் மற்றும் கெட்டவன்,

தனது ஏதோ ஒரு பங்களிப்பை வாழ்வில் செய்துவிட்டு செல்கின்றனர்.

இதனால் எந்த உபயோகமும் இல்லை.

இவை இல்லாமலும் உலகம் இயங்கும். இதில் எந்த அர்த்தமும் இல்லை.

நமக்கு பிடித்தோ பிடிக்காமலோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இங்கு நாம் எது எல்லாம் வாழ்கையில் அர்த்தம் என நினைக்கிறோமோ, அவை இல்லாமலும் உலகம் இயங்கும்.

எந்த மாற்றமும் இருக்காது.

நமக்கு நாமே சொல்லி கொல்லும் மிக பெரிய பொய் 'வாழ்க்கை அர்த்தமுள்ளது' என்பதுதான்.

அர்த்தமற்றது வாழ்க்கை.

பிறப்பு முதல் இறப்பு வரையில் நம்முடைய ஆசையை பூர்த்தி செய்யதான்  ஓடி கொண்டு இருக்கிறோம். இதனால் வாழ்க்கை அர்த்தமுள்ளது என ஆகிவிடாது.

நீங்கள் உங்கள் ஆசையை  அடைந்தாலும், அடையாவிட்டாலும் எதுவும் மாறப் போவதில்லை."

 

kafka வின் வார்த்தைகள் சற்றே நம்மை புரட்டி போடத்தான் செய்கிறது. வாழ்க்கைக்கென்று எந்த அர்த்தமும் இல்லை. நாம் தான் நமக்கு அர்த்தத்தை உருவாக்கி கொள்கிறோம்.

'சாதாரண வாழ்க்கை' என்பது தோல்வியல்ல. மாறாக, வாழ்க்கையின் முடிவற்ற எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை என்றே நான் கருதுகிறேன்.

நிம்மதியான வாழ்க்கை என்பது நாம் நமக்கு ஏற்படுத்தி கொள்ளும் தொடர்புகள், இனிய உறவுகள் மற்றும் நமக்கு நாம் உருவாக்கி கொள்ளும் அர்த்தங்கள் தான். இதில் எங்கு போட்டியும், ஒப்புமைகளும் வந்தது.

'சாதாரண வாழ்க்கை' என்பது எதையும் செய்யாமல் இருப்பதல்ல, மாறாக உங்களுக்கு எதையெல்லாம் செய்ய விருப்பமோ அதை  செய்து நிம்மதியாய் வாழ்வது.

உங்களுக்கு விருப்பமானதை பிறர் மேல் திணிக்காமல் வாழ்ந்தாலே, எல்லோருடைய வாழ்க்கையும் தனித்தன்மை வாய்ந்தது தான், நிம்மதியானதுதான்.

எனது பள்ளியில் வாரா வாரம் மாணவர்க்கு "BEST STUDENT OF THE WEEK" என்று ஒரு விருது உண்டு. இனி அந்த விருது கிடைக்கிறதோ இல்லையோ, மாணவரிடம், 'எல்லோரும் அவரவர் வாழ்க்கையை நிம்மதியாய் வாழ்வதே சிறப்பு' தான் என சொல்ல வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கும்போதே, என் இனிய மனையாளின் குரல், இனிதாய் கேட்டது சமையலறையிலிருந்து, 'முட்ட தோசையா? சாதா தோசையா?'

'முதல்ல சாதா தோசை பிறகு முட்டை தோசை' ன்னு பதிலளித்தேன்.

சரிதானே!

 

பின்குறிப்பு:

'கோயினோபோபியா' (Koinophobia) என்பது ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான பயம், ஒருவரின் வாழ்க்கை சாதாரணமானது அல்லது முக்கியமற்றது, அதற்கு அர்த்தமோ நோக்கமோ இல்லை என்ற உணர்வு.

 

17 கருத்துகள்:

  1. ஓஓஓ.... இது தான் first சாதா தோசை next முட்டை தோசையின் தாக்கம் போலும்😝😝😝அருமை அருமை... உங்களின் எளிமையான எழுத்துக்களுக்கு வலிமை அதிகம் 💪💪💪👍👍👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு இனியவளுக்கு நன்றிகள் பல. நீதான் என் முதல் ரசிகை.

      நீக்கு
  2. ஸ்பெஷல் கருத்தை சாதாரணமாக பதிவிட்டதற்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. பெயரோடு பதிவிட்டால் தொடர்பு எளிதாகும்

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. Very informative...thought provoking....loved the following lines
    சாதாரண வாழ்க்கை' என்பது தோல்வியல்ல. மாறாக, வாழ்க்கையின் முடிவற்ற எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை என்றே நான் கருதுகிறேன்.

    நிம்மதியான வாழ்க்கை என்பது நாம் நமக்கு ஏற்படுத்தி கொள்ளும் தொடர்புகள், இனிய உறவுகள் மற்றும் நமக்கு நாம் உருவாக்கி கொள்ளும் அர்த்தங்கள் தான். இதில் எங்கு போட்டியும், ஒப்புமைகளும் வந்தது.

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான், இவை அனைத்தும் விளம்பரங்கள் வந்த பிறகு, தொடங்கப்பட்டவையாக நான் கருதுகிறேன். சாதா அம்மாவை சூப்பர் அம்மாவாக காட்டும் விளம்பரங்கள் பல

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான். இந்த மனப்போக்கு வளர்ந்ததுக்கு விளம்பரங்கள் மிக முக்கிய காரணி. நன்றி John சார்.

    பதிலளிநீக்கு


  7. Sago, highlighting the importance of inner peace and happiness, which can get lost in the pursuit of material wealth. Many people realize too late that true fulfillment comes from within. Thanks for making us to think and realize it .

    பதிலளிநீக்கு
  8. I use translator to read and is very interesting to read it..it is life experience which everyone has experienced you have expressed it in a simple manner..hope to see such blogs sir..🥳🎉

    பதிலளிநீக்கு
  9. ஆழமான கருத்தை, இதமான எள்ளலோடு சொன்ன விதம் அருமை. என் மனதில் அவ்வப்போது வந்து போகும் சிந்தனைகள் உங்கள் வார்த்தைகளில் பயணித்ததைப் போல உணர்கிறேன். வாழ்த்துகள்... சிந்தனைத் துளிகள் தொடர்ந்து சிதறட்டும்... 😊👌👍

    பதிலளிநீக்கு
  10. சாதா ஸ்பெஷல் என்று ஆரம்பித்து சாதாரண வாழ்க்கை தோல்வி அல்ல என்பது வரை அழகான கருத்துக்கள்.... The article takes away the guilt of living a simple life with content feeling.... பாராட்டுக்கள் சார் 💐💐

    பதிலளிநீக்கு