ஞாயிறு, 7 ஜூலை, 2024

நான் என்ன என் சகோதரனின் காவலாளியா? (வழிப்போக்கன் மனநிலை (Bystander Effect))

 நான் என்ன என் சகோதரனின் காவலாளியா?

 

“தினம் தினம் வெளியில் பயணித்து விட்டு, பத்திரமாக வீடு திரும்புவது, நாம் எல்லோரும் கவனிக்க மறந்த, அல்லது இது என்ன பெரிய விஷயமா என்று எடுத்துக்கொண்ட, ஆசீர்வாதம்.”

சென்னையில் தினம் தினம் பயணிப்போர் நான் சொல்வதை முற்றிலும் ஆமோதிப்பர். சென்னை மட்டுமல்ல, உலகின் எப்பகுதியில் வசிப்போரும் ஆமோதிக்கும் விஷயம் தான், நான் இப்போது சொன்னது.

ஒவ்வொரு நாளும் நான் எனது பள்ளிக்கு பயணிக்கையில், தினம் ஏதோ ஓன்று இரண்டு விபத்துகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். ஒன்றிரண்டு விபத்துகளை நானும் சந்தித்திருக்கிறேன். நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவது விபத்துகள் அல்ல மாறாக, விபத்தின் போது, நம்மை சுற்றி இருக்கும் மக்களின் நடத்தையே.

ஆம். வழிப்போக்கன் மனநிலை (Bystander Effect) என்ற மனித செயல்பாட்டை பற்றி தான் பேச விழைகிறேன். சரியான பெயர்தான். அவர்களுக்கும் நமக்குமான தொடர்பு அதுதானே. நாம் விபத்துக்குள்ளானவர்கள், அவர்கள் வழிப்போக்கர்கள்.

'வழிப்போக்கன் மனநிலை' என்றதும் எனது நினைவிற்கு வருவது "நல்ல சமாரியன்" பற்றிய விவிலிய நிகழ்வு தான். எல்லோருடைய புரிதலுக்காக அதை இங்கு தருகிறேன்.

ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்."

நாம் விவாதித்துக் கொண்டிருக்கும்விபத்து’ போன்ற நிகழ்வு தான் இதுவும். சமுதாயத்தின் உயர் நிலையில் உள்ள இரண்டு பேர் அந்த விபத்தை கண்டும் காணாது போய் விட்டனர். தாழ்ந்த சமூகத்தைச் சார்ந்த ஒருவர் உதவுவதாக இதில் காண்கிறோம். விவிலிய விளக்கத்திற்குள் செல்லாமல் மனித உளவியலின் வழி சிந்திப்போம், மனித செயல்பாட்டின் வழியில்,  இதை ஆய்வோம்.

 

ஏன் ஒரு சிலர் இதை பார்த்தும் பார்க்காமல் சென்றனர்?

ஏன்  ஒருவர் மட்டும் உதவ முன் வந்தார்?

தனி மனித ஆளுமை தான் இதை முடிவு செய்கிறதா? அல்லது

இயற்கையிலேயே ஒரு சிலர் குணவான்களாக பிறந்துள்ளனரா?

 

மூன்று காரணங்களை முன் வைக்கிறேன்:

ஒன்று: பிறருக்கு இல்லாத அக்கறை நமக்கேன்? என்ற மனப்பாங்கு.

இவ்வளவு பேர் இருக்கிறார்கள்? நான் ஏன் உதவ வேண்டும்.

யாராவது உதவுவார்கள் என்ற பொறுப்பை பிறர் மீது சுமத்தும் மனப்போக்கு.

 

இரண்டு: பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்சம். இதுவும் ஒரு காரணம்.

நாம் உதவ போய் நம்மை பிறர் கேலிக்கோ கேள்விக்கோ  உட்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம்.

உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேல? அப்புடின்னு மத்தவங்க முன்னாடி தல குனிய நேரிடுமோ அப்புடின்னு பயம்.

 

மூன்று: யாருமே உதவ முன் வரவில்லை, அதனால் அது ஒன்னும் அவ்ளோ பெரிய விபத்தா இருக்காதுன்னு நம்மை நாமே நமது அறியாமையினால் ஆற்றுப்படுத்திக் கொள்வது.

"பிரிட்டனில் 2 வயது சிறுவன் ஒருவனை (James Bulger) 10 வயது நிரம்பிய இரு சிறுவர்கள் தெருவில் இழுத்து அடித்து சென்று, கம்பியால் அடித்து கொன்ற சம்பவத்தில், மொத்தம் 38 சாட்சிகள் அந்த நிகழ்வை பார்த்ததாக சொல்லப்பட்டது. ஏன் உதவ வில்லை என்றபோது, அவர்கள் சொன்ன காரணங்கள் எவ்வளவு நம்மை நாமே அறியாமையினால் ஏமாற்றி கொள்கிறோம் என்பதற்கு சான்று. அவர்கள் சகோதரர்கள் அதனால் அவ்வாறு செய்கிறார்கள் என நினைத்தேன் என்று சமாதானம் சொல்லி கொண்டார்கள்."

இது ஒரு பாதுகாப்பு நெறிமுறை (Defense Mechanism). உதவாமல் வந்து விட்ட நமது குற்ற உணர்வை சரி செய்ய நமது மனது விளையாடும் ஒரு சித்து விளையாட்டு.

உணர்வா? அறிவா? இதயமா? மூளையா?

பொதுவாக, நாம் இதை போன்று வழிப்போக்கராக ஒரு விபத்தைப் பார்க்கும்போது, அந்த விபரீதத்தின் வீரியத்தில் இருந்து, பதற்றத்தில் இருந்து விடுபட நேரம் ஆகும். அதனால் சில சமயங்களில் ஏதும் செய்யாமல் நாம் இந்த சூழல்களில் உறைந்து போய் விடுகின்றோம்.

இந்த செயல்பாடு, உணர்வு சார்ந்தது.

வேறு சில சமயங்களில், விபத்தில் உள்ளவரின் நிலையில் இருந்து பரிவுடன் (Empathetic) நாம் அந்த நிகழ்வை பார்க்கும்போது, நம் பதற்றத்தையும் மீறி, நாம் நம்மை கட்டுக்குள் கொண்டு வந்து, அந்த நபருக்கு தேவையான உதவியை செய்ய முற்படுகின்றோம்.

இந்த செயல்பாடு, அறிவு சார்ந்தது.

இந்த உள் உணர்வுகள் தான், ஒரு சூழ்நிலையில் ஒரு மனிதனை உதவவோ, உதறி தள்ளவோ வைக்கிறது.

 

வழிப்போக்கனிலிருந்து நல்ல சமாரியனாய் மாறுவது எப்படி?

எல்லோருக்குமே இதை போன்ற வாய்ப்புகள் தினம் தினம் வாய்க்கத்தான் போகிறது. அந்த சூழல்களில் நாம் உறைந்து போய் உதவாமல் நம்மை நாமே ஆற்றுப்படுத்துகிறோமா? இல்லை நமது உணர்ச்சி மேலீட்டை சரி வர அறிவு சார்ந்த சிந்தனை வழியாய் நெறிப்படுத்தி உதவ முற்படுகிறோமா?

1. பாதிக்கப்பட்ட மனிதரின் மன நிலையில் இருந்து, அவரின் துன்பத்தை தனதாய் உணர்ந்து செயல்படுதல். ஆங்கிலத்தில் Empathy என்று சொல்லலாம்.

“ஒருமுறை, இளம் பெண் ஒருத்தி தெருவோரம் அமர்ந்து இருப்பதை பார்த்தேன். அவளை சுற்றி சுற்றி நோட்டம் இட்டுக் கொண்டு பலர் இருப்பதையும் பார்த்து விட்டு, என் மனதில் ஒரு சிந்தனை, என் மகளை இப்படி விட்டு விட்டு நான் ஒரு போதும் செல்வேனா? உடனே, வண்டியை நிறுத்தி, மகளிர் சிறப்பு காவல் பிரிவுக்கு அழைத்து, நிலைமையை கூறி, அவர்கள் வரும்வரை அங்கேயே இருந்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீடு திரும்பினேன்.”  

2. ஒருவர் ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தவுடன், உங்களுடன் முதலில் பேசுங்கள். நான் தான் இந்த சூழலில் அந்த நபருக்கு கிடைக்கும் முதல் உதவி என்று. Self Talk என்பது மிகவும் அவசியம். உங்களை நீங்கள் சமாதானப் படுத்தி விட்டால், பிறகு நீங்கள் தான் ஹீரோ.

 3. ஆபத்தான சூழலில், நீங்கள் மட்டும் உதவுவது ஆபத்தாகிவிடும். மற்றவர்கள் உதவுகிறார்கள், இல்லை என்பதை தாண்டி, மற்றவருக்கும் சேர்த்து என்ன செய்ய வேண்டும் என்பதை சத்தமாய் சொல்லுங்கள்.

போலீஸ்க்கு போன் செய்யுங்கள்;

தண்ணீர் கொடுங்கள்;

தடுத்து நிறுத்துங்கள்.

உங்கள் சொற்களுக்காக பலரும் தங்கள் உணர்வளவில் காத்து கிடக்கிறார்கள். உங்கள் சொற்கள் அவர்களை செயலில் ஈடுபட வைக்கும்.

4. இறுதியாக, நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா? என்று காயின் கேட்டதை போல, உங்களை நீங்களே அந்த சூழலில் இருந்து அந்நியப்படுத்தாதீர்கள். மாறாக, எல்லோரும் எனது உரிமைச் சகோதரர், சகோதரி என்ற உணர்வில் இருந்து செயல்படுங்கள்.

“ வழிப்போக்கர்கள் ஏராளம்

சமாரியர்களே அரிது

அரிதாய் இருங்கள் “  

 

செவ்வாய், 18 ஜூன், 2024

முள்ளம்பன்றியின் தடுமாற்றம் ( A Porcupine's Dilemma)

"தனிமை என்பது எனக்கு குணப்படுத்தும் ஊற்று, தனிமை என் வாழ்க்கையை வாழ தகுதியுடையதாக்குகிறது. வார்த்தைகளை பேசுவது என்பதே எனக்கு அடிக்கடி வேதனையாக இருக்கிறது, வார்த்தைகளின் பயனற்ற தன்மையிலிருந்து மீள எனக்கு பல நாட்களின் மௌனம் தேவைப்படுகிறது"

-          கார்ல் ஜுங்

 

என் எதிர் வீட்டு நாய்தான், நான் காலை எழுந்தவுடன் பார்க்கும் முதல் ஜீவனும், மாலை வீடு சேர்ந்ததும் நான் பார்க்கும் கடைசி ஜீவனுமாகும்.  காலையில் பார்க்கும்போது அது சோம்பேறித்தனத்தின் உச்சத்தில் இருக்கும். தலை கீழாய் படுத்துக்கொண்டு என்னை பார்த்தவுடன், ‘வாலை ஆட்டலாமா இல்லை வேண்டாமா என்ற குழப்பத்திலேயே சிறிதாய் உடலை அசைத்து என்னை பார்க்கும். அந்த பார்வையிலேயே எனக்கு புரியும். இன்னும் போகலையா நீ? எழுந்து வாலை ஆட்டினால் தான் போவியா?’ என்று கேட்பது போல்.

 

மாலையில் நான் கதவை திறக்கும் முன்னே, அங்கே அது குதிக்க ஆரம்பித்திருக்கும். சத்தமிடும், உடல் முழுக்க ஏக கோணத்தில் வளைந்து நெளிந்து வரவேற்கும். அதன் குரலிலேயே ஏன் சும்மா நிற்கிறாய் மானிட பதரே! என்னை கொஞ்சி தடவி உன் பிறவி பலனை பெற்றுக்கொள் என்று என்னை பார்த்து சொல்வது போன்று உணர்வேன். இருந்தாலும் எனக்குள் ஒரு MIND VOICE ஓடும்: "காலைல மட்டும் கண்டுக்க மாட்ட, மாலையானதும் நான் உன்ன கொஞ்சனுமானு". இருந்தாலும் நாயிடம் என் வீராப்பு ஒரு போதும் செல்லாது.

நாயை பார்த்து விட்டு போக மனசில்லாமல், நானும்  கொஞ்ச நேரம் பிறவி பலனை அடைய முயன்று விட்டு போகும்போது, அதன் குரலில் ஒரு ஏக்கத்தை உணர்வேன். இருந்தாலும், நானும் நாயும் இருக்க வேண்டிய இடத்தில் தானே இருக்க முடியும்.

பல நேரங்களில், நானும் இந்த நாயை போன்று தான் உணர்ந்திருக்கிறேன். ஒரு சில வேளைகளில் சக மனிதரை பார்க்காமல் இருந்தாலே பரவாயில்லை, வாழ்க்கை நலம் என்று. மற்ற சில வேளைகளில், சகமனிதரின் சகவாசம் இல்லாமல் வாழ்க்கை நகர மறுப்பதையும் வெகுவாய் உணர்கிறேன். நான் சரியான சிந்தனையில் தான் நகர்கிறேனா என சந்தேகம் வரும், அப்போதெல்லாம் புத்தகங்களின் பக்கங்களை புரட்டி பார்க்கும்போது தான் இது போன்ற நிதர்சனங்கள் எல்லா காலங்களிலும் எல்லா மனிதர்களுக்கும் இருந்திருக்கின்றன என்று புரிய வந்தது.

 

சமீப காலத்தில் நான் படிக்க நேர்ந்த ஒரு எழுத்து ஆளுமை அமெரிக்க எழுத்தாளரான சார்லஸ் புகோவ்ஸ்கி ஆவார். இவர் மீது ஆர்வம் வந்ததற்கான ஒரு காரணம், இவரது ஒரு மேற்கோள்: 

"நான் மனிதர்களை வெறுக்கவில்லை, ஆனால் அவர்கள் அருகில் இல்லாதபோது நான் நன்றாக உணர்கிறேன்"

ஏன் புகோவ்ஸ்கி அவ்வாறு கூறி இருப்பார்?

நானுமே அவர் மீது நாட்டம் கொண்டதற்கு காரணம் அவர் கூறியது எனது எண்ணங்களை பிரதிபலித்ததினால் தான் என்று உணர்ந்தேன்

தனிமையை நான் என்றும் விரும்பியதில்லை ஆனால் அதற்காக எல்லா பொழுதுகளிலும் என்னை சுற்றி என் நண்பர்கள் வட்டம் இருக்க வேண்டும் என்றும் நினைத்ததில்லை.

என் தனிமை நேரங்களில் தான், நான் என்னை முழுமையாக உணர்ந்திருக்கிறேன். எல்லாருக்குமே இது அவரவர் வாழ்வில் கட்டாயம் நடக்கும் என்றே நம்புகிறேன்

தனிமையில் தான் என்னால் எனது படைப்புத்திறனை வெளிக்கொணர  முடிகிறது

தனிமையில் நான் எனது குறைகளை நிவர்த்தி செய்ய மனதில் ஒரு தெளிவு கிடைக்கிறது

பிறரோடு இருக்கும்போது நான் செய்யும் செயல்கள் பல. அதே போல் தனிமையும் எனக்கு பொருள் தருகிறது என்பதை நான் உணருகிறேன்.

இதைத்தான் ஜெர்மானிய தத்துவவியலாளர் Arthur Schopenhauer 'முள்ளம்பன்றியின் தடுமாற்றம்' என்ற உருவக நிகழ்வின் மூலம் மனித உறவின் தன்மையை விளக்குகிறார்.

 

"முள்ளம்பன்றிகள் பல சேர்ந்து ஒரு குளிர்காலத்தின் ஒரு நாளில், தங்களின் உடல்களை ஒருவர் ஒருவரின் உடற்சூட்டில் இதமாக வைத்துக்கொள்ள முடிவெடுத்தன. அதனால் ஒருவரோடு ஒருவர் மிகவும் நெருக்கமாக  சென்று  மற்றவரின் அரவணைப்பால் ஆதாயமடைந்து, மரணத்தில் உறைந்துபோகாமல் தங்களைக் காப்பாற்றி கொள்ளலாம் என்று நினைத்து நெருங்கி வந்தன. ஆனால் ஒருவர், மற்றவரின் முள்ளையும் அதன் குத்தும் வலியையும் உணரத்தொடங்கின.  அது அவர்களை மீண்டும் பிரிக்க துவங்கியது. முள்ளம்பன்றிகள்  உடற்சூட்டை பெற முன்னோக்கியும், முள்ளின் வலியால் பின்னோக்கியும் நகர்ந்தவாறே இருந்தன. சிறிது நேரத்தில் ஒருவர் மற்றவரின் முள்ளின் வலியை சகித்துக்கொள்ளும் சராசரி தூரத்தை கண்டுபிடித்து ஒன்றாய் உயிர் பிழைத்ததாக Schopenhauer கூறினார்.

 

மனித நிலையின் மிக அடிப்படையான முரண்பாடுகளுள் இதுவும் ஒன்று என்றே நினைக்கிறேன். மனிதன் ஒரு சமூக விலங்கு, அது பல சமயங்களில் பலருடன் சுற்றி திரிந்து மகிழ்ந்து இருக்கவும், சில வேளைகளில் ஒதுங்கி பதுங்கி வாழவும் தான் முற்படும். இது எல்லா மனிதருக்கும் உள்ள இயல்பே.

அன்பு, அந்தரங்கம், நெருக்கம் மற்றும் தனிமை ஆகியவற்றின் வரையறைகள் ஒவ்வொரு மனிதருக்கும் கட்டாயம் பெரிதும் வேறுபடுகின்றன, நிச்சயமாக, மனிதரின் கலாச்சாரம், அவர்கள் வாழுகின்ற வரலாற்று தருணம் மற்றும் சமுதாய நிலை போன்றவை பெரும்பாலான மக்களை முள்ளம்பன்றியின் இக்கட்டான வாழ்க்கையைத்தான்  வாழ வைக்கிறது.

அதாவது, நம்முடைய தனிமைக்கும் சமூக ஈடுபாட்டுக்கும் இடையே ஒரு போராட்டம் தினம் தினம் நடக்கிறது.

நமது மீதான சுய அக்கறைக்கும் பிறர் மீதான அக்கறைக்கும் இடையே எதை முக்கியத்துவப்படுத்துவதென்று மன குழப்பம் நிகழ்கிறது.

உடல் தேவைக்கும், அமைதியான தனிமை சூழலுக்கும் இடையே நாம் நம்மை சமநிலைப்படுத்த தினம் தினம்  போராடுகிறோம்.

அந்த முள்ளம்பன்றியை போல....

முள்ளம்பன்றியோடு உறங்குவது எப்படி?

முள்ளம்பன்றிகள் சூடாக இருக்க விரும்புவதைப் போலவே, பணியிடத்தில், சேர்ந்து பணி செய்வதற்கும், வேலைகளை எளிதாக்குவதற்கும் நாம் அனைவரின் ஒத்துழைப்பும்  தேவை. அதே சமயத்தில் ஒருவர் மற்றவருடனான மோதலைத் தவிர்க்க வேண்டுமானால், அவரவருக்குரிய தனிப்பட்ட எல்லைகளை மதிக்க வேண்டியது அவசியம். நெருக்கமாக உழைக்க வேண்டும் அதே சமயத்தில் நெருக்கி விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட எல்லைகளுக்கு மதிப்பு கொடுத்தல் நன்று.

மற்றவரின் முட்கள் என்னை குத்தும்போது விலகி சென்று ஆறுதல் பெற எனக்கான சூழலை உருவாக்கி கொள்ள வேண்டும். இந்த சூழல் வேலை தொடர்பானது அல்ல. விளையாட்டு, திரைப்படங்கள், புத்தகங்கள், தோட்டக்கலை அல்லது சமீபத்திய குடும்ப வதந்திகள் பற்றி உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசுங்கள். நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்லஆனால் பேசுங்கள் அன்புடன்.

கார்ல் ஜுங் போன்ற ஒரு சிலருக்கு மௌனமே மருந்து. 

அதையும் செய்யுங்கள். 

செய்வோரையும் மதியுங்கள். 


ஞாயிறு, 5 மே, 2024

படிச்சுதான் பாருங்க: "கிழவனும் கடலும்" - நூல் மதிப்புரை

 பொதுவாகவே கதைகள் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. மிக தேர்ந்த நூல் தொகுப்புகளை மட்டுமே இது வரை ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி படித்திருக்கிறேன். அவ்வாறு நான் படித்த கதைகளில் ஒன்று வைரமுத்துவின் "தண்ணீர் தேசம்" சுமார் 7 அல்லது 8 முறை படித்திருப்பேன். முதன் முறையாக, கையில் புத்தகத்தோடு கடற்கரையில் பல மணி நேரம் நின்று கடலின் பெருமைகளை நினைத்து பார்க்க வைத்தது அந்த புத்தகம் தான். இன்று பல மணி நேரம் கடலின் கரையில் சிறுமணற் துகளோடு துகளாய் தவம் காத்திருக்கும் பண்பை வளர்த்தது "தண்ணீர் தேசம்" தான்.

இன்னும் சிறு வயதில் கடலின் மீது மிக பெரிய ஆச்சர்யத்தை உருவாக்கியது அந்த கால தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய "THE SECRETS OF THE SEA" என்ற ஆவணப்படம். ஆழ்கடலின் அதிசயங்களை தண்ணீருக்கடியில் சென்று படம் பிடித்து நம்மையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்தது அந்த தொடர்.

பதின்ம வயதில் HOLYWOOD திரைப்படமான “THE WATER WORLD” பார்க்க நேர்ந்தது. கடலின் பிரம்மாண்டம் என்ன என்பதை வாய்பிளந்து பார்க்க வைத்தது அப்படம். ஒரு வித பயத்தையும் உருவாக்கியது. பிறகு ABYSS என்ற மற்றொரு படம், அதன் பிறகு TITANIC போன்ற படங்கள் கடலையும் என்னையும் நிறையவே தொடர்பு படுத்தியது. இன்றும் கடலை பார்த்தால் ஏதோ ஒரு உள்ளுணர்வு என்னை அதனோடு இணைத்தது.

அப்படித்தான் எனக்கும் கடலுக்குமான ஒரு வித வினோத உறவு தொடர்ந்து வந்தது. இரண்டு மூன்று முறை கடலுக்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், ஒரு வித சொல்ல முடியாத உற்சாகம் உள்ளுக்குள் புகுந்து கொள்வதை உணர்ந்தேன். கடலுக்கும் அந்த உணர்வு உள்ளது போன்று தான் நானும் உணர்ந்தேன்.

இப்படி இருக்கையில், ஒரு மாதம் முன்பு எனது சக ஆசிரியர் வழியாக "கிழவனும் கடலும்" என்ற புத்தகத்தை கையில் எடுக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. எர்னெஸ்ட் ஹெம்மிங்வே பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். அவருடைய வித்தியாசமான வாழ்வும் விவரிக்கமுடியாத சோக முடிவும் எப்போதுமே என்னை ஈர்த்திருக்கிறது. அவருடைய புத்தகம் "THE OLDMAN AND THE SEA" என்ற புத்தகத்தை பல ஹாலிவுட் திரைப்படங்களில் மேற்கோள் காட்டுவதை பார்த்திருக்கிறேன். அதன் மேலான ஆர்வம் அதிகரிக்கவே ஆங்கிலத்தில் படிக்கவே திட்டமிட்டிருந்தேன். ஆனால் தமிழில் படிக்கும் வாய்ப்பு முதலில் கிடைத்தது.

புத்தகத்துக்குள் செல்வோம்...

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் நாவல், "கிழவனும் கடலும்", மனிதனின் விடாமுயற்சி, இயற்கையின் மீதான மரியாதை மற்றும் வாழ்க்கையின் கசப்பான உண்மைகள் போன்ற ஆழமான கருப்பொருள்களை  எதிரொலிக்கும், ஏமாற்றம் தரும் கதையாகும். ஆமாம் ஏமாற்றம் தரும் கதை தான். நமக்கு திரைப்படங்களை பார்த்து பார்த்து வெற்றி தரும் முடிவுகளை கொண்ட கதையை தான் எதிர்பார்க்கிறோம். ஆனால் வாழ்க்கை வினோதமான ஆசிரியர். ஏமாற்றம் வழியாகவும்  பாடத்தை கற்பிக்கின்றது. கதையின் மையத்தில் சாண்டியாகோ என்ற முதிர்ந்த, அனுபவமிக்க மீனவர் மற்றும் அவரோடு பயணிக்கும் ஒரு அற்புதமான மீன் மார்லின். இவர்களிடையே நடைபெறும் காவியப் போராட்டம் தான் கதையின் கரு.

சாண்டியாகோ என்ற கதாபாத்திரம் "கிழவன்" என்ற சொல்லுக்கே அழகு சேர்த்தவன். நம் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு பாத்திரம். "அவரது கழுத்தின் பின்பகுதியில் ஆழமான சுருக்கங்கள்", "கடலின் உப்பினாலும், கனமான மீன்களைத் தூக்கியதன் விளைவாக உண்டான கடினமான கரடுமுரடான கைகள்", வயதின் காரணமாக அவர் உடல் தளர்ந்து விட்டாலும், அவரது உள்ளம் உடையாமல் திடனாகவே உள்ளது என்று  ஹெமிங்வே எழுதுகிறார். ஹெமிங்வே, "கிழவன் எண்பத்து நான்கு நாட்களாக மீன் பிடிக்காமல் வெற்று வலையோடு திரும்பி வந்தார்" என்ற வலி மிகுந்த வரிகளை எழுதியபோது, கிழவனின் துரதிஷ்டத்தை மட்டுமல்ல அவரின் தொடர்ந்த விடா முயற்சியையும், அசைக்க முடியாத உறுதியையும் அவரின் வரிகள் எடுத்துக்காட்டுகிறது. மற்ற மீனவர்கள் அவரை இரக்கத்துடனும் மரியாதை கலந்த கருணையுடன் தான் பார்க்கிறார்கள். அந்த மரியாதைக்கு காரணம் அந்த கிழவன் வாழ்க்கையின் சவால்களுடன் மல்யுத்தம் செய்ததே காரணம். அதனால்தான், அவரை அனைவரும் "கிழவன்" என்று அழைக்கிறார்கள்.

கதை முழுவதும் பயணிக்கும் இன்னொரு கதாப்பாத்திரம் இறுதிவரை பெயரிடப்படாத மார்லின் வகை மீன் ஒன்று. இது ஒரு ஆழ்கடல் மீன். கூரிய மூக்கு கொண்ட வலிமையான மீன் வகை. கிழவன் தூண்டில் போட்டு பிடித்த வலையில் சிக்கியது சாதாரண மீன் அல்ல. மீன் கிடைத்ததும் ஏதோ கதை நிறைவு பெற்றதை போன்ற உணர்வு உண்டாகும். ஆனால் அது இந்த கதையின் தொடக்கம்.

சாண்டியாகோ அந்த உயிரினத்தின் அபரிமிதமான வலிமையை உணர்ந்த போது, அந்த மீன் கிழவனை படகோடு கடலுக்குள் இழுத்து கொண்டு சென்றது. கிழவனோ கோபப்படாமல் பதட்டப்படாமல் "மீனே, உனக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இருக்க விரும்புகிறேன்" என்று உச்சரித்தார். இந்த ஒற்றை வரி அவர்களிருவரின் அசாதாரண உறவுக்கான தொனியாய் அமைகிறது. கிழவன், மீனின் சக்தியையும் சகிப்புத்தன்மையையும் பார்த்து வியக்கிறார், பாராட்டுகிறார். தொடக்கத்தில் அதை இரையாக பார்த்த கிழவன், தற்போது அதன் போராட்ட குணத்தை பார்த்து, அதை "சகோதரன்" என்று அழைக்கிறார். இந்த மரியாதை, வேட்டைக்காரன் - வேட்டையாடப்படும் இரை என்ற உறவின் தன்மையையே மாற்றுகிறது. பரந்து விரிந்த கடலானது அவர்களின் பகிரப்பட்ட அரங்காக மாறுகிறது, அங்கு இருவரும் உயிர்வாழ்வதற்காக போராடுகிறார்கள்.

ஹெமிங்வேயின் கதை சொல்லும் பாங்கு, கடலைப் போலவே, மேற்பரப்பில் மிக அமைதியாகவும், ஆனால் அதன் ஆழத்தில் உணர்ச்சிகளின் அடியோட்டங்களால் நிரம்பியுள்ளது.

சந்திரன் அருகில் வந்தபோது தண்ணீரில் அதன் பிரதிபலிப்பை முதியவர் பார்த்தார் போன்ற வர்ணனைகளில் அப்பட்டமான அழகு இருக்கிறது. அதே சமயம், சண்டையின் வன்முறையால் இந்த அமைதி குலைகிறது. மார்லின் ஒரு கட்டத்தில், ​தன் பெரிய தலையையும்  மற்றும் நீண்ட வெள்ளி போன்ற உடலை  தண்ணீரிலிருந்து எழுந்து காற்றில் உயர்த்திய போது அதன் அடங்க மறுக்கும் உணர்ச்சியும் அதன் உள்ளார்ந்த உணர்வு போராட்டமும் வெளிப்படுகிறது. இந்த மீனின் போராட்ட முயற்சிகள்  சாண்டியாகோவின் உள் மன போராட்டத்தை பிரதிபலிக்கின்றன: தகுதியான எதிரியுடன் போராடுவதில் பெருமையாக இருந்தாலும் இன்னொரு உயிரைப் பறிப்பதில் சோகமும் இருந்தது. ஆக அந்த உணர்ச்சிப்போராட்டங்கள் கடலின் அமைதிக்கு அடியில் நிகழும் நீரோட்டங்களை போல் அமைதியாய் நிகழ்ந்தது

கடல், ஒரு சக்திவாய்ந்த உடனிருப்பு. கதை முழுக்க நாம் கடலில் தான் பயணிக்கிறோம். ஹெமிங்வே, கடலை எப்போதும் நேசித்தார். அதனால்தான் அதை பிரமிப்புடனும் மரியாதையுடனும் சித்தரிக்கிறார். "கடல் எப்போதும் பசியோடு இருக்கிறது" என்ற அவரின் அந்த அழகான ஒற்றை வரி கடலின் தன்மையை உணர்த்துகிறது. இந்த பசி கடலின் மன்னிக்காத தன்மையை பிரதிபலிக்கிறது, ஆனால் அதன் ஆழத்தில் உள்ள வாழ்வின் மிகுதியையும் பிரதிபலிக்கிறது. சாண்டியாகோவின் மரியாதைக்கு தகுதியான ஒரு அற்புதமான உயிரினம், மார்லின், இந்த வாழ்வின் மிகுதியை உணர்த்துகிறது.

 மார்லின் பிடிபட்டு கொல்லப்பட்டு, மரியாதையோடு படகில் கட்டி கிழவனோடு பயணிக்க தயாராகும்போது, நாம் அனைவரும் இரண்டாம் முறை கதை முடிவுறுகிறது என்று நினைப்போம். ஆனால் கதையின் ஒரு பகுதி தான் முடிவு பெற்றுள்ளது. இந்த இரண்டாம் பகுதி தான் மிக கனமான பகுதி.

இப்போது கிழவனுக்கும் சுறாமீன்களுக்கும் இடையிலான போராட்டம். தனது மரியாதைக்குரிய மார்லின் உடலை சேதப்படுத்தாமல் கொண்டு போய் விட வேண்டும் என்று கிழவன் எடுக்கும், தனது உடல் வலிமைக்கு மீறின முயற்சிகள், கண்களையும் மனதையும் சேர்த்தே கலங்கடித்து விடுகின்றன. ஒவ்வொரு முறையும் கிழவன் தனது உடல் பொருள் அனைத்தையும் கொண்டு இறுதி வரை போராடுவதை பார்க்கும்போது மனது வலிக்கிறது. விரக்தியின் உச்சத்துக்கே நம்மை கொண்டு சேர்த்து விடுகிறது. கடைசியில் சுறாமீன்களிடம் தோல்வியுற்று, தனது சகோதரன் மார்லினின் தலை மட்டும் தப்பித்து கரை சேர்ந்த போது, நான் கண்ணீரை துடைத்து கொண்டு தான் அடுத்த பக்கத்துக்கு போக முடிந்தது. வாழ்க்கையில் விரக்தி என்பதை நான் அன்றுதான் உணர்ந்தேன். முயற்சிகள் எடுத்தும் நினைத்ததை செய்ய முடியவில்லை எண்ணும்போது, வாழ்க்கை கசக்க தான் செய்கிறது, கனக்கத்தான் செய்கிறது.

ஆனால் மார்லினின் தலை பகுதியை பார்த்த மற்ற மீனவர்களுக்கு, கிழவனின் மீதான மரியாதையை மேலும் கூட்டத்தான் செய்தது. வாழ்க்கை தொடரத்தான் செய்தது.

இது ஒரு மீன்பிடி கதை மட்டும் அல்ல. அதையும் தாண்டி துன்பங்களைத் தாங்கும் மனித ஆற்றலை விளக்கும் இக்கதை நமக்கு ஒரு சவாலாகும். சாண்டியாகோவிற்கும் மார்லினுக்கும் இடையிலான பிணைப்பு, அனைத்து உயிரினங்களின் பிரபஞ்ச இணைப்பை நமக்கு நினைவூட்டுகிறது.

வாசித்து உணருங்கள் வாழ்க்கையின் கனமான உணர்வுகளை.

PLEASE FIND THE LINK TO AMAZON FOR PURCHASE:

https://amzn.in/d/5rC82vU