வியாழன், 11 டிசம்பர், 2025

எனது அறை

​ஆண்டின் இறுதி மாதத்தின் நாட்கள் உருண்டோடி கொண்டிருக்கும் வேளையில் இதை எழுதுகிறேன். 

எனது அறை

எங்கு போனாலும் 

எதை செய்தாலும் 

திரும்பி திரும்ப நான் வந்து நிற்கும் இடம் ‘எனது அறை’

சுத்தம் செய்யவில்லை 

பொருட்களை அடுக்கும் எண்ணமுமில்லை 

சும்மா உள்ளே நுழைந்து அறையைப் பார்க்கிறேன். எனது கண்கள் எனது அறையில் என்னோடு பயணித்த பொருட்களின் மீது படர்ந்தது. 

எனது மேஜை 

எனது படுக்கை 

எனது நாற்காலி 

எனது காபி கப்

எனது புத்தகங்கள் 

எனது கண்ணாடி 

எனது நோட்டுப் புத்தகம் 

எனது பேனா 

எனது ஜெபமாலை 

எனது பை 

எனது அலமாரி 

எனது ஜன்னல் 

எனது தலையணை 

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு நாட்கள் நான் இவற்றைப் பற்றியெல்லாம் நினைத்தது கூட கிடையாது. 

உங்களது வீட்டையோ, அறையையோ இப்படி ஒவ்வொன்றாக நினைத்துப் பாருங்கள். எவ்வளவு பொருட்கள் உங்கள் கண்முன்னே இருந்தும், கண்ணில் படாமல் இருந்திருக்கின்றன என்று உணர்வீர்கள்.

எனது அறையில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்தேன். 

இந்த ஆண்டு முழுக்க உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து அனுபவங்கள் வழியாக, உங்களை அப்படியே, எந்த ஒரு நிபந்தனையுமின்றி, உங்களை ‘நீங்களாகவே’ ஏற்றுக் கொண்ட, தழுவிக் கொண்ட, தாங்கிக் கொண்ட உங்கள் அறைக்கு நன்றி சொல்லுங்கள். 

நான் நன்றி சொன்னாலும், எனது அறை மறுபேச்சு பேசுவதில்லை. இதுபோன்ற உடனிருப்பு மிகவும் அவசியம். நம்மை எடை போடாது, உள்ளது உள்ளபடியே, மறுபேச்சு இல்லாமல், நம்மை உள்வாங்கும் உடனிருப்பு. 

இந்த அறை 

எனது வெற்றிகளை கொண்டாடியுள்ளது 

எனது தோல்விகளை பார்த்திருக்கிருக்கிறது 

எனது முயற்சிகளில் உடன் நின்றிருக்கிறது 

எனது அழுகையின் கண்ணீரை கண்டிருக்கிறது. 

எனது சிரிப்பின் சந்தத்தை ரசித்திருக்கிறது  

எனது வியர்வையின் துளிகளை தாங்கி இருக்கிறது 

எனது மோகத்தின் முள்ளையும் அணைத்திருக்கிறது

எனது கோபத்தின் உச்சத்தை அளந்திருக்கிறது

எனக்கிழைத்த துரோகத்தின் பள்ளத்தில் உடனிருந்திருக்கிறது 

எனது சிந்தையின் சீர்மையில் கரைந்திருக்கிறது 

எனது தாகத்தை தணித்திருக்கிறது 

எனது தலைகால் புரியாத வேகத்தை தடுத்திருக்கிறது 

எனது தலைகனத்தை சற்றே இறக்கி வைத்திருக்கிறது

எனது காதலை கண்டும் காணாமல் இருந்திருக்கிறது 

எனது நட்பின் வட்டாரத்தை கண்டு நகைத்திருக்கிறது 

எனது பகையை வேரறுத்திருக்கிறது 

இந்த அறையின் உடனிருப்பு என்னை ‘நானாய்’ நிலைபடுத்தியிருக்கிறது

இவ்வளவும் செய்துவிட்டு, என்னிடம் எதுவும் திரும்ப கேட்பதில்லை 

ஒவ்வொரு முறை நுழையும்போது, உள்ளிழுத்து என்னை அரவணைக்கிறது 

ஒவ்வொரு நாளும் நான் என்னை சந்திக்கும் இடமே எனது அறை 

‘தனிமை’ துன்பம் அல்ல; அது ஓர் வரம் என என்னைப் பழக்கியது எனது அறை 

உலகின் சப்தங்களிருந்து பாதுகாத்து, அமைதிக்கு என்னை அறிமுகம் செய்தது எனது அறை 

உங்கள் இல்லங்களில் உள்ள அறைகளை நினைத்துப் பாருங்கள் 

உங்கள் அறைகள் உங்கள் அனுபவங்களின் கருவூலம் 

உங்கள் அந்தரங்கங்களை அறிந்த ஒரே இடம் உங்கள் அறை மட்டும்தான் 

உங்கள் அம்மணத்தை அங்கீகரித்த ஒரே இடம் உங்கள் அறை மட்டும்தான் 

உங்கள் எல்லா மனவெழுச்சிகளையும் பார்த்த ஒரே இடம் உங்கள் அறைதான் 

உங்கள் அறை ஓர் மனிதனாக இருந்தால், அதுதான் உங்கள் soulmate. 

இந்த ஆண்டில் இறுதி மாதத்திலிருந்து, புதிய ஆண்டுக்குள் நுழைய போகும் தருணத்தில்…

எனது போதிமரமான எனது அறையின் வெற்றிடத்திற்கு நன்றி சொல்ல விழைகிறேன். 

The only place where “EMPTINESS” makes sense is my ROOM. 

இன்னுமொரு ஆண்டு எனை தாங்க தயாரா? 

எனது அறையின் கரங்களில் தவழ, நான் தயார். 

நீங்களும் நன்றியோடு அடியெடுத்து வையுங்கள். 


4 கருத்துகள்:

  1. அருமை அருமை இதப்பத்தி ஒரு நாளும் யோசித்தது இல்லை. சற்றே சிந்திக்க வைக்கிறது அருமையான பதிவு. எனது அறை காலம் முழுவதும் Kitchen தான்💯😜 வெறுப்பான ஒரு இடமாக இருந்தாலும் எனது அறையையும் இனி நேசிக்க பழக இது ஒரு அழகிய பதிவு 😊👍👏👌🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது இருப்பு அறையை அழகுபடுத்தும்

      நீக்கு
  2. “தனிமை ஒரு துன்பமல்ல; அது ஓர் வரம்” — இந்த வரி மட்டும் போதுமானது உங்கள் எழுத்தின் ஆழத்தை உணர. பழைய ஆண்டின் பயணத்தை முடித்த பின், புதிய ஆண்டில் நுழையும் இந்த நேரத்தில், நமது அறைக்கும் ஒரு “நன்றி” சொல்ல வேண்டும் என்பதை நினைவூட்டியுள்ளீர்கள்.

    ‘எனது அறையின் கரங்களில் தவழ, நான் தயாராகிறேன்’ —அருமையான முடிவு!
    அழகான பதிவு. மனதை மெல்ல தழுவும் வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நாதலீன். உங்கள் வார்த்தைகள் உத்வேகம் அளிக்கிறது.

      நீக்கு