செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

அம்மணம்



அம்மணம்
(Inspired by Khalin Gibran's Story)

இது ஒரு உரசல்தான்!

என் இதயத்தை உரசிச் சென்ற ஓரிரு எண்ணங்களை
உங்களோடுதான் முதன் முதலாய் உரசிப் பார்க்கிறேன்.
என் கன்னங்கள் உரச வேண்டும் என நான் ஏங்கவில்லை ஆனால்
நம் எண்ணங்கள் உரசாமல் வெகு நாளாய் தூங்க வில்லை !
உரசும்போது பெருங்காயம் இல்லையென்றாலும் ஒன்றிரண்டு கீறல்களும் ஓராயிரம் தாக்கங்களும் உண்டு! உரசலின் தழும்பு உயிருள்ளவரை விடாது.

அன்றொரு நாள் அழகும் அசிங்கமும் அழகிய கடற்கரை மணலில் சந்தித்துக் கொண்டன. இருவரும் சேர்ந்து நீராடலாம் என ஏகமனதாய் ஒப்புக் கொண்டன. உடனே இருவரும் உடைகளை களைந்து உற்சாகமாய் நீராடத் தொடங்கினார்கள். ஓரிரு பொழுதில் 'அசிங்கம்' அவசரமாய் குளித்துத் தோட்டி கரையேறி அழகினுடைய ஆடைகளை அணிந்து 'அழகாய்' அதன் வழியே சென்று விட்டது.

அழகும் சிறிது நேரத்தில் கடலை விட்டு வந்து உடைகள் காணாது தவித்துப் போயிற்று. இருந்தாலும் அம்மணமாய் இருக்க அழகுக்கு 'அசிங்கமாய்' இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் அழகானது அசிங்கத்தின் உடைகளை உடுத்திக் கொண்டு அதன் வழியே சென்றது.

இந்நாள் வரை இவ்வுலகில் வாழும் ஆண்களும் சரி பெண்களும் சரி அழகையும் அசிங்கத்தையும் ஒன்றுக்கொன்று தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியிருந்தாலும் அழகின் முகத்தை கண்ட ஒரு சிலர் கூட அதன் உடைகளை பார்த்து ஏமாந்தனர். அசிங்கத்தின் சொரூபத்தைக் கண்ட வெகு பலர் அதன் ஆடைகளின் அழகினால் கண்களை மறைத்துக் கொண்டனர்.
இவ்வுலகம் அலங்காரங்களையே அடையாளங்களாகப் பார்க்கின்றது. ஆனால் ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்போதும் என்றென்றும் இருப்பது அம்மணம் மட்டுமே!

அம்மணம் அசிங்கம் அல்ல, அங்கீகாரம்!

அம்மணம் மெய்!
போலிகளை கொண்டு மூடாதீர்கள்...
அம்மணம் மனித குலத்தின் ஆதி அலங்காரம்!
அம்மணம் ஆதாம் ஏவாளின் தேசிய உடை!

நாகரிகத் தாக்கத்தில் 'அவன், அவள்' என்னும் அடையாளச் சிக்கலை
அறவொடு நீக்க அம்மணம் பொதுவுடைமையாக்கப் படவேண்டும்!

அம்மணம் அசிங்கமா? அருவருப்பா? உயிர் என்னும் அருவத்திற்கு
உரு கொடுக்க இறைவன் எதைத் தேர்ந்தெடுத்தான்?
இரு அம்மணங்களின் அந்தரங்கத்தைதானே!

அம்மணம் அசிங்கமாயிருந்தால் இன்று திருமணங்கள் காணாமல் போயிருக்கும். அம்மணம் உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் தான்.

நமது அம்மணம் வினோதமாயிருக்கட்டும்!
உள்ளத்தின் அம்மணம் மறைத்தாலும் மறையாதிருக்கட்டும்!
உடலின் அம்மணம் திறந்தாலும் தெரியாதிருக்கட்டும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக