சனி, 16 மார்ச், 2024

கோப்ரா விளைவும் செல்பேசியும்

           பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சும்மாவா சொன்னாங்க.

1800 களில் டெல்லியை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்களை அச்சுறுத்தியது கட்டாயம் இந்தியர்கள் அல்ல, மாறாக விஷ பாம்புகள். பாம்புகளின் எண்ணிக்கை அதிகமானதால் அவர்கள் ரொம்பவே கவலைப்பட்டு அதை கட்டுப்படுத்த ஒரு கவர்ச்சியான திட்டத்தை அமுல்படுத்தினர்.

ஒவ்வொரு இறந்த பாம்புக்கும் ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டது. பாம்படிக்குறதுக்கு காசுனா சும்மா இருப்பாங்களா? எல்லோரும் பாம்புகளை கொன்று காசு பாக்க ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பாம்புகளின் தொல்லை குறைந்தது என ஆங்கிலேயர்கள் நினைத்த போது, மீண்டும் செத்த பாம்பு உடல்கள் இன்னும் அதிகமாக வர ஆரம்பித்ததை கண்டு சந்தேகம் வர ஆரம்பித்தது.

உண்மையை நோண்ட ஆரம்பித்ததும்,  காசுக்காக பலரும் பாம்புகளை வளர்த்து அதன் உடலை கொடுத்து சம்பாதிக்க தொடங்கினர் என்று தெரிந்தது. ஆங்கிலேயர்கள் உடனே அந்த திட்டத்தை கைவிட்டனர். பாம்பு வளர்த்தவர்களும் இனி பாம்புகளால் பலனில்லை என்பதால் அவற்றை வெளியில் விட்டனர். முன்னர் இருந்ததை விட இப்போது பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆங்கிலேயர்களின் 'பாம்பு கொல்லும் கவர்ச்சித் திட்டம்'            திட்டமிடப்படாத மற்றும் விரும்பத்தகாத முடிவுகளை மட்டுமல்ல,   அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிரான விளைவுகளையும் ஏற்படுத்தி விட்டன.

இதை தான் பொருளியல் நிபுணர் Horst Seibert அவர்கள் Cobra effect என்று விளக்குகிறார்.    

இதைப்போலவே வியட்நாமில் எலிகளால் தொல்லை வந்தபோது, அப்போது ஆட்சி செய்த பிரெஞ்சு அரசாங்கம் ஒவ்வொரு எலி வாலுக்கும் ஒரு பணத்தொகையை அறிவித்தது. தொடக்கத்தில் குறைவது போலிருந்த எலிகளின் எண்ணிக்கை, எலி வால்களால் காசு பெறுபவர்களின் எண்ணிக்கையை பார்த்தபோது அதிகரிக்கவே செய்தது. காரணம் காசு பெறுவதர்காக எலிகளை மக்கள் வளர்க்க தொடங்கியது தான் காரணம். இறுதியில், திட்டம் கைவிடப்பட்டதும், எலிகளும் கைவிடப்பட்டன. முதலில் இருந்ததை விட எலித்தொல்லை அதிகரித்தது. இதுவும் கோப்ரா விளைவுதான்.

     நாம் ஏன் பாம்புகளையும் எலிகளையும் துணைக்கு அழைக்கணும். நம் பிள்ளைகளை நாமே கோப்ரா விளைவுக்கு உட்படுத்த வில்லையா? புரியலையா? சொல்றேன் கேளுங்க.

கொரோனா வந்து பள்ளிகளுக்கு ஒரு வருட காலம் போக முடியாமல் பெற்றோர் தவித்த போது, பிள்ளைகளெல்லாம் மகிழ்ந்த போது, யாரோ ஒரு புண்ணியவான் ONLINE வகுப்புகளை பற்றி சொல்ல, எல்லா பள்ளிகளும் ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு, GOOGLE SUITE வாங்கி எப்படி கற்றல் நிகழ்வை துண்டு பட்டு விடாமல் காப்பாற்றுவது என்று யோசித்தனர்.

நாமும் நம் பிள்ளைகளுக்கு கற்றல் நிகழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வயித்த கட்டி வாய கட்டி,  மொபைல் போன் வாங்கி கொடுத்தோம். ஆனால் இன்றைய நிலைமையில், வருகின்ற பெரும்பான்மை பெற்றோர், பிள்ளைகளின் படிப்புக்கு பெரும் தடையாய் இருப்பது, கற்றல் நிமித்தம் நாம் வாங்கி கொடுத்த மொபைல் போன் தான் என்று சொல்லும்போது, அது கோப்ரா விளைவுதான் என்பதை உணர முடிகிறதா?

மொபைல் போன்கள் வாங்கி கொடுத்ததன் மூலம் கற்றல் நிகழும் என்று நினைத்தோம் ஆனால் திட்டமிடப்படாத மற்றும் விரும்பத்தகாத முடிவுகளை மட்டுமல்ல, நமது  எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிரான விளைவுகளையும் ஏற்படுத்தி விட்டன என்று உணர முடிகிறதா?

கிரேக்க தொன்மங்களில், திராய் (TROY) நகரம் வெற்றி கொண்டபின் ஒடிஸியஸ், இதகாவின் அரசனும் கிரேக்க தளபதியுமான இவன் கப்பலில் சாகச பயணத்தை மேற்கொண்டதாக காப்பியம் கூறுகிறது. அவ்வாறு பயணிக்கும்போது, ஒரு சில தீவுகளை கடந்து செல்லும்போது தன்னுடைய மாலுமிகளின் காதில் பஞ்சு வைத்து நன்றாக அடைத்து விடுவானாம்.

காரணம், அந்த தீவுகளில் பறவை உடல் கொண்ட பெண்கள் (SIRENS) அமர்ந்து கொண்டு, தேனினும் இனிய குரலில் பாடுவதை கேட்க கூடாதென்று. அப்படி கேட்டவர்கள், அதில் மயங்கி கப்பலை நிலைகுலைய செய்து விபத்தில் இறந்து விடுவர். அதனால் அவனும் தன் காதுகளை மூடி கொள்வானாம். இருந்தாலும் உள் மனதிற்குள் ஆசை. எப்படியாவது அந்த காந்தர்வ குரலை கேட்க வேண்டும் என்று. அதனால் தன்னை தூணோடு கட்டி கொண்டு, அந்த குரலை கேட்டு விட்டு உடனே தன் காதுகளை அடைத்துக் கொள்வானாம்.

     இன்று நாமும் ஒடிஸியஸ் நிலைமையில் தான் இருக்கிறோம். ஒடிஸியஸ் பறவை பெண்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தான். நாமோ நம் கைகளில் வைத்துள்ள மொபைல் போன்களிடம் இருந்து தப்பிக்க முயன்றும் தோற்று கொண்டிருக்கிறோம்.  எதற்கு மொபைல் போன் எடுக்கின்றோம் என புரியாமல் பல மணி நேரம் தடவி தடவியே கால விரயம் செய்கிறோம்.

இன்று இந்த சமூக ஊடகங்கள் நம்மை எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை படுத்தி நம்மை மொபைல் போனோடு ஒட்டி இருக்க செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்கின்றன. 

மேலை நாடுகளில், மொபைல் போன் அருகில் இருந்தாலே (அதை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை)  அது பிறரோடு நமது தொடர்பை பாதிக்கும் என்பதை அறிவியல் முறையில் நிரூபித்திருக்கிறார்கள்.

  • எத்தனை முறை பிறர் நம்மிடம் பேசும்போது நாம் போன் நோண்டிக் கொண்டு கவன சிதறலை ஏற்படுத்தி இருக்கின்றோம்.
  •  நம் நண்பர்களோடு பேசி கொண்டு இருக்கும்போது, போன் வந்தால் தனித்து சென்று விடுவோம். அவர்கள் தனியாய் நிற்பார்கள்.
  • மொபைல் போன் நம் கையில் இருந்தால், அருகில் இருப்பவர் யார் என்பதை கூட நாம் கவனிக்க தவறி விடுகிறோம். பல முறை நானே இதை செய்திருக்கிறேன்.

அப்படி என்ன இருக்கிறது இந்த கருவியில்?

நம்மை நம் சூழலில் இருந்து வேரறுத்து வேற்று மனிதராக்கி விடுகிறதே?

ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்குவோரை கவனித்ததுண்டா?

தங்கம் வென்றவர் முகத்தில் சந்தோஷ கலை தாண்டவமாடும்.

அதே போல் வெண்கலம் வென்றவர் முகத்திலும் உண்மையான சந்தோசம் இருக்கும். காரணம், நல்ல வேளை நமக்கு வெண்கலமாவது கெடச்சுதேன்னு சந்தோசம்.

வெள்ளி பதக்கம் பெற்றவர் சற்று சோகம்மா தான் இருப்பார். கொஞ்சம் முயற்சி எடுத்துருந்தா தங்கம் வாங்கி இருப்பேன் என்ற வருத்தம் அவரிடம் அதிகமாவே இருக்கும்.

இதுதான் எதிர்ச்சிந்தனை.

எதிர்ச் சிந்தனைகள் கடந்த காலத்தில் நிகழாத நிகழ்வுகளைச் சார்ந்து இருப்பதால் - நிகழ்காலத்தில் - நடந்திருக்க முடியாத விஷயங்களை உள்ளடக்கியது.

இதுதான் நம்மை மொபைல் போன்களோடு பொழுது போக்க வைக்கிறது. போன் பேச வில்லை என்றாலும், ஒரு வேளை நமது போஸ்ட்க்கு யாராவது லைக் போட்டு இருப்பாங்களா?

யாராவது ஒரு வேளை பதில் அனுப்பி இருப்பாங்களா?

அந்த ஆன்லைன் விளையாட்டுல வேற யாராவது நம்ம லெவல் தாண்டி இருப்பாங்களா?

நமக்கு தெரியாத செய்தி எதுவும் 'ஒரு வேளை' வைரல் ஆகி இருக்குமோ?

இப்படி பற்பல ஒரு வேளை இப்படியோ.. ஒரு வேளை அப்படியோ ... போன்ற எதிர்ச்சிந்தனை தான் அந்த கருவியை நாம் பயன் படுத்த வில்லையென்றாலும், நமது கவனத்தை திசை திருப்பி நம்மை சமுதாய தொடர்பிலிருந்து துண்டிக்க செய்கிறது.

இப்படிப்பட்ட அடிமை படுத்தும் தொல்லைகளில் இருந்து விமோச்சனம் உண்டா?

கட்டாயம் உண்டு. விரைவில் சந்திப்போம்.

10 கருத்துகள்:

  1. ரொம்ப நல்ல கருத்து நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான ஒன்று.congrats!

    பதிலளிநீக்கு
  2. இனிமையாக சொல்லப்பட்ட, அருமையான கருத்து. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. தெளிவான கருத்து, நல்ல

    சிந்தனை.

    பதிலளிநீக்கு
  4. This astute piece demonstrates your intellectual prowess. Sublime thoughts indeed. Well done.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு, apt நிகழ்வுகள், அழகான நடை திரு ராபி.

    பதிலளிநீக்கு
  6. அழகிய விளக்கம். ஆழமான கருத்து. சிந்திக்க தூண்டும் பகிர்வு...

    பதிலளிநீக்கு