பொதுவாகவே கதைகள் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. மிக தேர்ந்த நூல் தொகுப்புகளை மட்டுமே இது வரை ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி படித்திருக்கிறேன். அவ்வாறு நான் படித்த கதைகளில் ஒன்று வைரமுத்துவின் "தண்ணீர் தேசம்" சுமார் 7 அல்லது 8 முறை படித்திருப்பேன். முதன் முறையாக, கையில் புத்தகத்தோடு கடற்கரையில் பல மணி நேரம் நின்று கடலின் பெருமைகளை நினைத்து பார்க்க வைத்தது அந்த புத்தகம் தான். இன்று பல மணி நேரம் கடலின் கரையில் சிறுமணற் துகளோடு துகளாய் தவம் காத்திருக்கும் பண்பை வளர்த்தது "தண்ணீர் தேசம்" தான்.
இன்னும் சிறு வயதில் கடலின் மீது மிக பெரிய ஆச்சர்யத்தை உருவாக்கியது அந்த கால தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய "THE SECRETS OF THE SEA" என்ற ஆவணப்படம். ஆழ்கடலின் அதிசயங்களை தண்ணீருக்கடியில் சென்று படம் பிடித்து நம்மையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்தது அந்த தொடர்.
பதின்ம
வயதில் HOLYWOOD திரைப்படமான “THE WATER WORLD” பார்க்க நேர்ந்தது. கடலின் பிரம்மாண்டம் என்ன என்பதை வாய்பிளந்து
பார்க்க வைத்தது அப்படம். ஒரு வித பயத்தையும்
உருவாக்கியது. பிறகு ABYSS என்ற மற்றொரு படம்,
அதன் பிறகு TITANIC போன்ற படங்கள் கடலையும் என்னையும் நிறையவே தொடர்பு படுத்தியது. இன்றும் கடலை பார்த்தால் ஏதோ
ஒரு உள்ளுணர்வு என்னை அதனோடு இணைத்தது.
அப்படித்தான்
எனக்கும் கடலுக்குமான ஒரு வித வினோத
உறவு தொடர்ந்து வந்தது. இரண்டு மூன்று முறை கடலுக்குள் செல்லும்
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், ஒரு வித சொல்ல
முடியாத உற்சாகம் உள்ளுக்குள் புகுந்து கொள்வதை உணர்ந்தேன். கடலுக்கும் அந்த உணர்வு உள்ளது
போன்று தான் நானும் உணர்ந்தேன்.
இப்படி
இருக்கையில், ஒரு மாதம் முன்பு
எனது சக ஆசிரியர் வழியாக
"கிழவனும் கடலும்" என்ற புத்தகத்தை கையில்
எடுக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. எர்னெஸ்ட் ஹெம்மிங்வே பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். அவருடைய வித்தியாசமான வாழ்வும் விவரிக்கமுடியாத சோக முடிவும் எப்போதுமே
என்னை ஈர்த்திருக்கிறது. அவருடைய புத்தகம் "THE OLDMAN
AND THE SEA" என்ற
புத்தகத்தை பல ஹாலிவுட் திரைப்படங்களில்
மேற்கோள் காட்டுவதை பார்த்திருக்கிறேன். அதன் மேலான ஆர்வம்
அதிகரிக்கவே ஆங்கிலத்தில் படிக்கவே திட்டமிட்டிருந்தேன். ஆனால் தமிழில் படிக்கும் வாய்ப்பு முதலில் கிடைத்தது.
புத்தகத்துக்குள்
செல்வோம்...
எர்னஸ்ட்
ஹெமிங்வேயின் நாவல், "கிழவனும் கடலும்", மனிதனின் விடாமுயற்சி, இயற்கையின் மீதான மரியாதை மற்றும் வாழ்க்கையின் கசப்பான உண்மைகள் போன்ற ஆழமான கருப்பொருள்களை எதிரொலிக்கும்,
ஏமாற்றம் தரும் கதையாகும். ஆமாம் ஏமாற்றம் தரும் கதை தான். நமக்கு
திரைப்படங்களை பார்த்து பார்த்து வெற்றி தரும் முடிவுகளை கொண்ட கதையை தான் எதிர்பார்க்கிறோம். ஆனால் வாழ்க்கை
வினோதமான ஆசிரியர். ஏமாற்றம் வழியாகவும் பாடத்தை
கற்பிக்கின்றது. கதையின் மையத்தில் சாண்டியாகோ என்ற முதிர்ந்த, அனுபவமிக்க
மீனவர் மற்றும் அவரோடு பயணிக்கும் ஒரு அற்புதமான மீன்
மார்லின். இவர்களிடையே நடைபெறும் காவியப் போராட்டம் தான் கதையின் கரு.
சாண்டியாகோ
என்ற கதாபாத்திரம் "கிழவன்" என்ற சொல்லுக்கே அழகு
சேர்த்தவன். நம் மனதில் நீங்கா
இடம் பிடித்த ஒரு பாத்திரம். "அவரது
கழுத்தின் பின்பகுதியில் ஆழமான சுருக்கங்கள்", "கடலின் உப்பினாலும், கனமான மீன்களைத் தூக்கியதன் விளைவாக உண்டான கடினமான கரடுமுரடான கைகள்", வயதின் காரணமாக அவர் உடல் தளர்ந்து
விட்டாலும், அவரது உள்ளம் உடையாமல் திடனாகவே உள்ளது என்று ஹெமிங்வே
எழுதுகிறார். ஹெமிங்வே, "கிழவன் எண்பத்து நான்கு நாட்களாக மீன் பிடிக்காமல் வெற்று
வலையோடு திரும்பி வந்தார்" என்ற வலி மிகுந்த
வரிகளை எழுதியபோது, கிழவனின் துரதிஷ்டத்தை மட்டுமல்ல அவரின் தொடர்ந்த விடா முயற்சியையும், அசைக்க
முடியாத உறுதியையும் அவரின் வரிகள் எடுத்துக்காட்டுகிறது. மற்ற மீனவர்கள் அவரை
இரக்கத்துடனும் மரியாதை கலந்த கருணையுடன் தான் பார்க்கிறார்கள். அந்த
மரியாதைக்கு காரணம் அந்த கிழவன் வாழ்க்கையின்
சவால்களுடன் மல்யுத்தம் செய்ததே காரணம். அதனால்தான், அவரை அனைவரும் "கிழவன்"
என்று அழைக்கிறார்கள்.
கதை
முழுவதும் பயணிக்கும் இன்னொரு கதாப்பாத்திரம் இறுதிவரை பெயரிடப்படாத மார்லின் வகை மீன் ஒன்று.
இது ஒரு ஆழ்கடல் மீன்.
கூரிய மூக்கு கொண்ட வலிமையான மீன் வகை. கிழவன்
தூண்டில் போட்டு பிடித்த வலையில் சிக்கியது சாதாரண மீன் அல்ல. மீன்
கிடைத்ததும் ஏதோ கதை நிறைவு
பெற்றதை போன்ற உணர்வு உண்டாகும். ஆனால் அது இந்த கதையின்
தொடக்கம்.
சாண்டியாகோ
அந்த உயிரினத்தின் அபரிமிதமான வலிமையை உணர்ந்த போது, அந்த மீன் கிழவனை
படகோடு கடலுக்குள் இழுத்து கொண்டு சென்றது. கிழவனோ கோபப்படாமல் பதட்டப்படாமல் "மீனே, உனக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இருக்க விரும்புகிறேன்" என்று உச்சரித்தார். இந்த ஒற்றை வரி
அவர்களிருவரின் அசாதாரண உறவுக்கான தொனியாய் அமைகிறது. கிழவன், மீனின் சக்தியையும் சகிப்புத்தன்மையையும் பார்த்து வியக்கிறார், பாராட்டுகிறார். தொடக்கத்தில் அதை இரையாக பார்த்த
கிழவன், தற்போது அதன் போராட்ட குணத்தை
பார்த்து, அதை "சகோதரன்" என்று அழைக்கிறார். இந்த மரியாதை, வேட்டைக்காரன்
- வேட்டையாடப்படும் இரை என்ற உறவின்
தன்மையையே மாற்றுகிறது. பரந்து விரிந்த கடலானது அவர்களின் பகிரப்பட்ட அரங்காக மாறுகிறது, அங்கு இருவரும் உயிர்வாழ்வதற்காக போராடுகிறார்கள்.
ஹெமிங்வேயின்
கதை சொல்லும் பாங்கு, கடலைப் போலவே, மேற்பரப்பில் மிக அமைதியாகவும், ஆனால்
அதன் ஆழத்தில் உணர்ச்சிகளின் அடியோட்டங்களால் நிரம்பியுள்ளது.
“சந்திரன்
அருகில் வந்தபோது தண்ணீரில் அதன் பிரதிபலிப்பை முதியவர்
பார்த்தார்” போன்ற
வர்ணனைகளில் அப்பட்டமான அழகு இருக்கிறது. அதே
சமயம், சண்டையின் வன்முறையால் இந்த அமைதி குலைகிறது.
மார்லின் ஒரு கட்டத்தில், தன்
பெரிய தலையையும் மற்றும்
நீண்ட வெள்ளி போன்ற உடலை தண்ணீரிலிருந்து
எழுந்து காற்றில் உயர்த்திய போது அதன் அடங்க
மறுக்கும் உணர்ச்சியும் அதன் உள்ளார்ந்த உணர்வு
போராட்டமும் வெளிப்படுகிறது. இந்த மீனின் போராட்ட
முயற்சிகள் சாண்டியாகோவின்
உள் மன போராட்டத்தை பிரதிபலிக்கின்றன:
தகுதியான எதிரியுடன் போராடுவதில் பெருமையாக இருந்தாலும் இன்னொரு உயிரைப் பறிப்பதில் சோகமும் இருந்தது. ஆக அந்த உணர்ச்சிப்போராட்டங்கள்
கடலின் அமைதிக்கு அடியில் நிகழும் நீரோட்டங்களை போல் அமைதியாய் நிகழ்ந்தது.
கடல்,
ஒரு சக்திவாய்ந்த உடனிருப்பு. கதை முழுக்க நாம்
கடலில் தான் பயணிக்கிறோம். ஹெமிங்வே,
கடலை எப்போதும் நேசித்தார். அதனால்தான் அதை பிரமிப்புடனும் மரியாதையுடனும்
சித்தரிக்கிறார்.
"கடல் எப்போதும் பசியோடு இருக்கிறது" என்ற அவரின் அந்த
அழகான ஒற்றை வரி கடலின் தன்மையை
உணர்த்துகிறது. இந்த பசி கடலின்
மன்னிக்காத தன்மையை பிரதிபலிக்கிறது, ஆனால் அதன் ஆழத்தில் உள்ள
வாழ்வின் மிகுதியையும் பிரதிபலிக்கிறது. சாண்டியாகோவின் மரியாதைக்கு தகுதியான ஒரு அற்புதமான உயிரினம்,
மார்லின், இந்த வாழ்வின் மிகுதியை
உணர்த்துகிறது.
இப்போது
கிழவனுக்கும் சுறாமீன்களுக்கும் இடையிலான போராட்டம். தனது மரியாதைக்குரிய மார்லின்
உடலை சேதப்படுத்தாமல் கொண்டு போய் விட வேண்டும்
என்று கிழவன் எடுக்கும், தனது உடல் வலிமைக்கு
மீறின முயற்சிகள், கண்களையும் மனதையும் சேர்த்தே கலங்கடித்து விடுகின்றன. ஒவ்வொரு முறையும் கிழவன் தனது உடல் பொருள்
அனைத்தையும் கொண்டு இறுதி வரை போராடுவதை பார்க்கும்போது
மனது வலிக்கிறது. விரக்தியின் உச்சத்துக்கே நம்மை கொண்டு சேர்த்து விடுகிறது. கடைசியில் சுறாமீன்களிடம் தோல்வியுற்று, தனது சகோதரன் மார்லினின்
தலை மட்டும் தப்பித்து கரை சேர்ந்த போது,
நான் கண்ணீரை துடைத்து கொண்டு தான் அடுத்த பக்கத்துக்கு
போக முடிந்தது. வாழ்க்கையில் விரக்தி என்பதை நான் அன்றுதான் உணர்ந்தேன்.
முயற்சிகள் எடுத்தும் நினைத்ததை செய்ய முடியவில்லை எண்ணும்போது, வாழ்க்கை கசக்க தான் செய்கிறது, கனக்கத்தான்
செய்கிறது.
ஆனால்
மார்லினின் தலை பகுதியை பார்த்த
மற்ற மீனவர்களுக்கு, கிழவனின் மீதான மரியாதையை மேலும் கூட்டத்தான் செய்தது. வாழ்க்கை தொடரத்தான் செய்தது.
இது
ஒரு மீன்பிடி கதை மட்டும் அல்ல.
அதையும் தாண்டி துன்பங்களைத் தாங்கும் மனித ஆற்றலை விளக்கும்
இக்கதை நமக்கு ஒரு சவாலாகும். சாண்டியாகோவிற்கும்
மார்லினுக்கும் இடையிலான பிணைப்பு, அனைத்து உயிரினங்களின் பிரபஞ்ச இணைப்பை நமக்கு நினைவூட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக