செவ்வாய், 18 ஜூன், 2024

முள்ளம்பன்றியின் தடுமாற்றம் ( A Porcupine's Dilemma)

"தனிமை என்பது எனக்கு குணப்படுத்தும் ஊற்று, தனிமை என் வாழ்க்கையை வாழ தகுதியுடையதாக்குகிறது. வார்த்தைகளை பேசுவது என்பதே எனக்கு அடிக்கடி வேதனையாக இருக்கிறது, வார்த்தைகளின் பயனற்ற தன்மையிலிருந்து மீள எனக்கு பல நாட்களின் மௌனம் தேவைப்படுகிறது"

-          கார்ல் ஜுங்

 

என் எதிர் வீட்டு நாய்தான், நான் காலை எழுந்தவுடன் பார்க்கும் முதல் ஜீவனும், மாலை வீடு சேர்ந்ததும் நான் பார்க்கும் கடைசி ஜீவனுமாகும்.  காலையில் பார்க்கும்போது அது சோம்பேறித்தனத்தின் உச்சத்தில் இருக்கும். தலை கீழாய் படுத்துக்கொண்டு என்னை பார்த்தவுடன், ‘வாலை ஆட்டலாமா இல்லை வேண்டாமா என்ற குழப்பத்திலேயே சிறிதாய் உடலை அசைத்து என்னை பார்க்கும். அந்த பார்வையிலேயே எனக்கு புரியும். இன்னும் போகலையா நீ? எழுந்து வாலை ஆட்டினால் தான் போவியா?’ என்று கேட்பது போல்.

 

மாலையில் நான் கதவை திறக்கும் முன்னே, அங்கே அது குதிக்க ஆரம்பித்திருக்கும். சத்தமிடும், உடல் முழுக்க ஏக கோணத்தில் வளைந்து நெளிந்து வரவேற்கும். அதன் குரலிலேயே ஏன் சும்மா நிற்கிறாய் மானிட பதரே! என்னை கொஞ்சி தடவி உன் பிறவி பலனை பெற்றுக்கொள் என்று என்னை பார்த்து சொல்வது போன்று உணர்வேன். இருந்தாலும் எனக்குள் ஒரு MIND VOICE ஓடும்: "காலைல மட்டும் கண்டுக்க மாட்ட, மாலையானதும் நான் உன்ன கொஞ்சனுமானு". இருந்தாலும் நாயிடம் என் வீராப்பு ஒரு போதும் செல்லாது.

நாயை பார்த்து விட்டு போக மனசில்லாமல், நானும்  கொஞ்ச நேரம் பிறவி பலனை அடைய முயன்று விட்டு போகும்போது, அதன் குரலில் ஒரு ஏக்கத்தை உணர்வேன். இருந்தாலும், நானும் நாயும் இருக்க வேண்டிய இடத்தில் தானே இருக்க முடியும்.

பல நேரங்களில், நானும் இந்த நாயை போன்று தான் உணர்ந்திருக்கிறேன். ஒரு சில வேளைகளில் சக மனிதரை பார்க்காமல் இருந்தாலே பரவாயில்லை, வாழ்க்கை நலம் என்று. மற்ற சில வேளைகளில், சகமனிதரின் சகவாசம் இல்லாமல் வாழ்க்கை நகர மறுப்பதையும் வெகுவாய் உணர்கிறேன். நான் சரியான சிந்தனையில் தான் நகர்கிறேனா என சந்தேகம் வரும், அப்போதெல்லாம் புத்தகங்களின் பக்கங்களை புரட்டி பார்க்கும்போது தான் இது போன்ற நிதர்சனங்கள் எல்லா காலங்களிலும் எல்லா மனிதர்களுக்கும் இருந்திருக்கின்றன என்று புரிய வந்தது.

 

சமீப காலத்தில் நான் படிக்க நேர்ந்த ஒரு எழுத்து ஆளுமை அமெரிக்க எழுத்தாளரான சார்லஸ் புகோவ்ஸ்கி ஆவார். இவர் மீது ஆர்வம் வந்ததற்கான ஒரு காரணம், இவரது ஒரு மேற்கோள்: 

"நான் மனிதர்களை வெறுக்கவில்லை, ஆனால் அவர்கள் அருகில் இல்லாதபோது நான் நன்றாக உணர்கிறேன்"

ஏன் புகோவ்ஸ்கி அவ்வாறு கூறி இருப்பார்?

நானுமே அவர் மீது நாட்டம் கொண்டதற்கு காரணம் அவர் கூறியது எனது எண்ணங்களை பிரதிபலித்ததினால் தான் என்று உணர்ந்தேன்

தனிமையை நான் என்றும் விரும்பியதில்லை ஆனால் அதற்காக எல்லா பொழுதுகளிலும் என்னை சுற்றி என் நண்பர்கள் வட்டம் இருக்க வேண்டும் என்றும் நினைத்ததில்லை.

என் தனிமை நேரங்களில் தான், நான் என்னை முழுமையாக உணர்ந்திருக்கிறேன். எல்லாருக்குமே இது அவரவர் வாழ்வில் கட்டாயம் நடக்கும் என்றே நம்புகிறேன்

தனிமையில் தான் என்னால் எனது படைப்புத்திறனை வெளிக்கொணர  முடிகிறது

தனிமையில் நான் எனது குறைகளை நிவர்த்தி செய்ய மனதில் ஒரு தெளிவு கிடைக்கிறது

பிறரோடு இருக்கும்போது நான் செய்யும் செயல்கள் பல. அதே போல் தனிமையும் எனக்கு பொருள் தருகிறது என்பதை நான் உணருகிறேன்.

இதைத்தான் ஜெர்மானிய தத்துவவியலாளர் Arthur Schopenhauer 'முள்ளம்பன்றியின் தடுமாற்றம்' என்ற உருவக நிகழ்வின் மூலம் மனித உறவின் தன்மையை விளக்குகிறார்.

 

"முள்ளம்பன்றிகள் பல சேர்ந்து ஒரு குளிர்காலத்தின் ஒரு நாளில், தங்களின் உடல்களை ஒருவர் ஒருவரின் உடற்சூட்டில் இதமாக வைத்துக்கொள்ள முடிவெடுத்தன. அதனால் ஒருவரோடு ஒருவர் மிகவும் நெருக்கமாக  சென்று  மற்றவரின் அரவணைப்பால் ஆதாயமடைந்து, மரணத்தில் உறைந்துபோகாமல் தங்களைக் காப்பாற்றி கொள்ளலாம் என்று நினைத்து நெருங்கி வந்தன. ஆனால் ஒருவர், மற்றவரின் முள்ளையும் அதன் குத்தும் வலியையும் உணரத்தொடங்கின.  அது அவர்களை மீண்டும் பிரிக்க துவங்கியது. முள்ளம்பன்றிகள்  உடற்சூட்டை பெற முன்னோக்கியும், முள்ளின் வலியால் பின்னோக்கியும் நகர்ந்தவாறே இருந்தன. சிறிது நேரத்தில் ஒருவர் மற்றவரின் முள்ளின் வலியை சகித்துக்கொள்ளும் சராசரி தூரத்தை கண்டுபிடித்து ஒன்றாய் உயிர் பிழைத்ததாக Schopenhauer கூறினார்.

 

மனித நிலையின் மிக அடிப்படையான முரண்பாடுகளுள் இதுவும் ஒன்று என்றே நினைக்கிறேன். மனிதன் ஒரு சமூக விலங்கு, அது பல சமயங்களில் பலருடன் சுற்றி திரிந்து மகிழ்ந்து இருக்கவும், சில வேளைகளில் ஒதுங்கி பதுங்கி வாழவும் தான் முற்படும். இது எல்லா மனிதருக்கும் உள்ள இயல்பே.

அன்பு, அந்தரங்கம், நெருக்கம் மற்றும் தனிமை ஆகியவற்றின் வரையறைகள் ஒவ்வொரு மனிதருக்கும் கட்டாயம் பெரிதும் வேறுபடுகின்றன, நிச்சயமாக, மனிதரின் கலாச்சாரம், அவர்கள் வாழுகின்ற வரலாற்று தருணம் மற்றும் சமுதாய நிலை போன்றவை பெரும்பாலான மக்களை முள்ளம்பன்றியின் இக்கட்டான வாழ்க்கையைத்தான்  வாழ வைக்கிறது.

அதாவது, நம்முடைய தனிமைக்கும் சமூக ஈடுபாட்டுக்கும் இடையே ஒரு போராட்டம் தினம் தினம் நடக்கிறது.

நமது மீதான சுய அக்கறைக்கும் பிறர் மீதான அக்கறைக்கும் இடையே எதை முக்கியத்துவப்படுத்துவதென்று மன குழப்பம் நிகழ்கிறது.

உடல் தேவைக்கும், அமைதியான தனிமை சூழலுக்கும் இடையே நாம் நம்மை சமநிலைப்படுத்த தினம் தினம்  போராடுகிறோம்.

அந்த முள்ளம்பன்றியை போல....

முள்ளம்பன்றியோடு உறங்குவது எப்படி?

முள்ளம்பன்றிகள் சூடாக இருக்க விரும்புவதைப் போலவே, பணியிடத்தில், சேர்ந்து பணி செய்வதற்கும், வேலைகளை எளிதாக்குவதற்கும் நாம் அனைவரின் ஒத்துழைப்பும்  தேவை. அதே சமயத்தில் ஒருவர் மற்றவருடனான மோதலைத் தவிர்க்க வேண்டுமானால், அவரவருக்குரிய தனிப்பட்ட எல்லைகளை மதிக்க வேண்டியது அவசியம். நெருக்கமாக உழைக்க வேண்டும் அதே சமயத்தில் நெருக்கி விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட எல்லைகளுக்கு மதிப்பு கொடுத்தல் நன்று.

மற்றவரின் முட்கள் என்னை குத்தும்போது விலகி சென்று ஆறுதல் பெற எனக்கான சூழலை உருவாக்கி கொள்ள வேண்டும். இந்த சூழல் வேலை தொடர்பானது அல்ல. விளையாட்டு, திரைப்படங்கள், புத்தகங்கள், தோட்டக்கலை அல்லது சமீபத்திய குடும்ப வதந்திகள் பற்றி உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசுங்கள். நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்லஆனால் பேசுங்கள் அன்புடன்.

கார்ல் ஜுங் போன்ற ஒரு சிலருக்கு மௌனமே மருந்து. 

அதையும் செய்யுங்கள். 

செய்வோரையும் மதியுங்கள். 


10 கருத்துகள்:

  1. இந்த கட்டுரையை படித்த போது எனக்குள் அமைதியையும் தெளிவையும் உணர முடிந்தது. மிகவும் ஆழமான ஒரு சிந்தனை. தொடர்க உங்களின் ஆக்கப்பூர்வமான எழுத்து பணி. மெளனம் பல நேரங்களில் எனக்கு மருந்தாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துப் பகிர்வுக்கு நன்றி. என்னை தொட்டவற்றை எழுத முயல்கிறேன். அது உங்களையும் தொட்டிருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  2. சமுக இடைவெளி போல் நம் மனதிற்கும் இந்த சடசட என்று ஓடும் வாழ்க்கையிலிருந்து இடைவெளி வேண்டும்.உங்கள் பதிவு எனக்கு இன்று அந்த இடைவெளியாக மாறி உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் சிந்தனை பகிர்வுக்கு நன்றி. இடைவெளி தான் நெருக்கத்திற்கு மூலதனம்.

      நீக்கு
  3. It's helping to Realise our inner peace. Thank you 😊

    பதிலளிநீக்கு
  4. வாசிக்கும் போதே தங்கள் பதிவு மனதை நிதானித்திற்கு கொண்டு செல்கிறது..... சிந்திக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. தங்களது கருத்து உத்வேகம் தருகிறது.

      நீக்கு