புதன், 9 ஏப்ரல், 2025

ஒரு ஸ்பெஷல் சாதா...

தலைக்கு மேல் வேலை இருந்தது... மனைவியிடம் சொல்லி விட்டு, முடி வெட்டலாம் என சலூனுக்குப் போனேன். எனது முறை வந்ததும், போய் சுழலும் நாற்காலியில் உட்கார்ந்தேன். என்னை சுழல விட்டு, என் தலையையே பார்த்தான் அந்த பையன். அப்படி பட்ட பார்வை எனக்கு பழகி இருந்தது.

சாதாவா? ஸ்பெஷல் ஆ? ன்னு கேட்டான்.

என் தலைக்கு ஸ்பெஷல்லா வெட்டுனாலே, அது சாதாவா தான் தெரியும் தம்பி. அதனாலே, சாதாவே வெட்டுன்னு சொன்னேன்.

சாதாவா? என ஒரு கேவல தொனியில் கேட்டுவிட்டு வேலையை வேண்டா வெறுப்பாய் தொடர்ந்தான்.

தலை 'கனம்' குறைந்ததால், வீடு திரும்புகையில் ஹோட்டல் போய் டிபன் சாப்டுட்டு. ஒரு காபி குடிச்சுட்டு போலாம்னு நெனச்சேன். போய் உட்கார்ந்ததும், பக்கத்து டேபிளில் சர்வர் பையன், நீண்ட உணவு பட்டியலை 5 நிமிடமாக ஒப்பித்துக் கொண்டிருந்தான். நீண்ட பெருமூச்சு விட்டு அவன் முடித்த போது, 'பக்கத்து டேபிள் காரர் இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல்னு கேட்டார்அதை அந்த சர்வர் பையன் மூச்சு முட்ட சொல்லும் முன்னமே கேட்டு இருக்கலாமே? ன்னு நினைத்து கொண்டேன்.

அதே யோசனையில் 4 இட்லி சாப்டுட்டு, காப்பி கேட்டேன். சாதா காப்பியா? இல்ல டிகிரீ காப்பியான்னு சர்வர் பையன் என்னை கேட்டான்?

என்னப்பா வித்தியாசம்? ன்னு கேட்டேன்.

டிக்ரீ காப்பில, பால் தண்ணி கலக்காம 'திக்கா' இருக்கும் சார். அதுமட்டுமில்ல, பில்டர் காபி தூள் மட்டும் தான் பயன்படுத்துவோம் சார்ன்னு  விளக்கம் சொன்னான்.

வீடு திரும்பும்வரை, சாதா, ஸ்பெஷல் யோசனையாவே இருந்தது.

 

வரும்போது தான் கவனித்தேன்... பேருந்துகளில் சாதா பேருந்து, டீலக்ஸ் பேருந்து இருந்தது. அவ்வளவு ஏன்? swiggy, zomato, Blinkit, Zepto போன்ற இணைய வழி சேவைகளில் கூட, சாதா டெலிவரி, express டெலிவரி உள்ளதை உணர்ந்தேன். தெய்வ தரிசனங்களே கூட இன்று சாதா தரிசனம், ஸ்பெஷல் தரிசனம் என்றாகி விட்டது.

இந்த வாழ்க்கை எதை தான் விட்டு வைத்தது?

மனிதர்களை கூட மாத்தி வச்சுருக்கு.


இரண்டு இடங்கள் இந்த கருத்தியலை நம் மனதுக்குள் திணிக்கின்றன.

ஒன்று வீடு:

அவனைப் பார் எப்புடி படிக்கிறான்?

அவள பார் maths ல 100 மார்க் எடுக்குறா?

அந்த பையன பாத்தியா? கோல்ட் மெடல் வாங்கி இருக்கான்.

அந்த பொண்ண பாரு? எவ்ளோ fair ஆ அழகா இருக்குறா?

அந்த ஆள பாரு, காசுல மெதக்குறான்.

இவ்வாறு சாதாரண வாழ்க்கை வேண்டாம்; ஸ்பெஷல் வாழ்க்கை தான் வேணும்னு வீட்டுலயே, இந்த உள்ளார்ந்த மனவியலை உருவாக்கி விடுகிறோம்.

இரண்டு: பள்ளி

பள்ளிகளில் சொல்லவே தேவையில்லை.

ஆசிரியர்களும், பெற்றோர்களும் தனது குழந்தை ஸ்பெஷல் குழந்தையாகவே இருக்க விரும்புகிறார்கள்.

சராசரி மாணவர்களை அவர்கள் சீண்டுவது கூட கிடையாது.  

 

சாதாரண வாழ்க்கை என்பது வெற்றியடையாத வாழ்க்கை அல்ல.

அது பொருளாதார ரீதியான வெற்றியை முக்கியமானதாக கருதுவதில்லை

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திரு. ஜாதவ் பயேங்கை (Jadav Payeng) பலருக்கும் தெரியாது. மிகவும் எளிமையான மனிதர், ஒரு சிறிய குடிசை வீட்டில் வசிக்கிறார். டிவி, குளிர்சாதன பெட்டி, ஏசி, இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனம் அல்லது பிற அடிப்படை விஷயங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

இவர் இந்த உலகத்தின் பார்வையில் ஒரு சாதாரண மனிதன் தான்.

பல ஆண்டுகளாக அவரது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

எந்த கோணத்தில் பார்த்தாலும் அவர் ஒரு சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தார்.

15 ஆண்டுகளாக, இந்த சமூகம் அவரை ஒரு சாதாரண வேலை செய்யும் ஒரு 'சாதாரண மனிதர்' என்றும், இன்னும் சொல்ல போனால், 'தோல்வியுற்றவர்' என்றும் முத்திரை குத்தியது.

ஆனால் அவர் தனது வழியில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

உலகம் முழுவதும் இவர் 'இந்தியாவின் வன மனிதன்'  என்றே  அறியப்படுகின்றார்.

தனது 16 வயதில் மரங்களை நேசித்து மரக்கன்றுகளை நடுவதற்கு தொடங்கிய அவர், 36 ஆண்டுகள் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்து வந்தார்.

இது இப்போது 1360 ஏக்கர் வனப்பகுதியாக மாறி விட்டது.

மேலும் 100 க்கு அதிகமான யானைகள்,

ஐந்து/ ஆறு புலிகள்,

சில காண்டாமிருகங்களின் வாழ்விடம் ஆகி போனது.

ஆனால் தனது தாய்நாடான இந்தியாவிலேயே இவர் ஒரு ஸ்பெஷல் மனிதராக இல்லை.

ஆனால் தனக்கு எது அர்த்தம் தருமோ, அதை அவர் பாணியில் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

 

Franz Kafka, என்ற யூத எழுத்தாளர், வாழ்க்கையை பற்றி கூறுவது இங்கு நம் கவனத்தை ஈர்க்கிறது.

"என்னை பொறுத்தவரை வாழ்க்கை அர்த்தமுள்ளது போல ஒரு மாயை உருவாக்கபட்டுள்ளது.

இங்கு கல்வி, பணம், புகழ் மற்றும் பலவற்றை சேர்ப்பதோ அல்லது அவற்றை அடைவதோ மட்டுமே அர்த்தமுள்ள வாழ்க்கை என நினைக்கிறோம். அது ஒரு மாயை நமக்கு நாமே உருவாக்கியது.

பிச்சைக்காரன் முதல் கோடீஸ்வரன் வரை,

முட்டாள் முதல் விஞ்ஞானி வரை

நல்லவன் மற்றும் கெட்டவன்,

தனது ஏதோ ஒரு பங்களிப்பை வாழ்வில் செய்துவிட்டு செல்கின்றனர்.

இதனால் எந்த உபயோகமும் இல்லை.

இவை இல்லாமலும் உலகம் இயங்கும். இதில் எந்த அர்த்தமும் இல்லை.

நமக்கு பிடித்தோ பிடிக்காமலோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இங்கு நாம் எது எல்லாம் வாழ்கையில் அர்த்தம் என நினைக்கிறோமோ, அவை இல்லாமலும் உலகம் இயங்கும்.

எந்த மாற்றமும் இருக்காது.

நமக்கு நாமே சொல்லி கொல்லும் மிக பெரிய பொய் 'வாழ்க்கை அர்த்தமுள்ளது' என்பதுதான்.

அர்த்தமற்றது வாழ்க்கை.

பிறப்பு முதல் இறப்பு வரையில் நம்முடைய ஆசையை பூர்த்தி செய்யதான்  ஓடி கொண்டு இருக்கிறோம். இதனால் வாழ்க்கை அர்த்தமுள்ளது என ஆகிவிடாது.

நீங்கள் உங்கள் ஆசையை  அடைந்தாலும், அடையாவிட்டாலும் எதுவும் மாறப் போவதில்லை."

 

kafka வின் வார்த்தைகள் சற்றே நம்மை புரட்டி போடத்தான் செய்கிறது. வாழ்க்கைக்கென்று எந்த அர்த்தமும் இல்லை. நாம் தான் நமக்கு அர்த்தத்தை உருவாக்கி கொள்கிறோம்.

'சாதாரண வாழ்க்கை' என்பது தோல்வியல்ல. மாறாக, வாழ்க்கையின் முடிவற்ற எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை என்றே நான் கருதுகிறேன்.

நிம்மதியான வாழ்க்கை என்பது நாம் நமக்கு ஏற்படுத்தி கொள்ளும் தொடர்புகள், இனிய உறவுகள் மற்றும் நமக்கு நாம் உருவாக்கி கொள்ளும் அர்த்தங்கள் தான். இதில் எங்கு போட்டியும், ஒப்புமைகளும் வந்தது.

'சாதாரண வாழ்க்கை' என்பது எதையும் செய்யாமல் இருப்பதல்ல, மாறாக உங்களுக்கு எதையெல்லாம் செய்ய விருப்பமோ அதை  செய்து நிம்மதியாய் வாழ்வது.

உங்களுக்கு விருப்பமானதை பிறர் மேல் திணிக்காமல் வாழ்ந்தாலே, எல்லோருடைய வாழ்க்கையும் தனித்தன்மை வாய்ந்தது தான், நிம்மதியானதுதான்.

எனது பள்ளியில் வாரா வாரம் மாணவர்க்கு "BEST STUDENT OF THE WEEK" என்று ஒரு விருது உண்டு. இனி அந்த விருது கிடைக்கிறதோ இல்லையோ, மாணவரிடம், 'எல்லோரும் அவரவர் வாழ்க்கையை நிம்மதியாய் வாழ்வதே சிறப்பு' தான் என சொல்ல வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கும்போதே, என் இனிய மனையாளின் குரல், இனிதாய் கேட்டது சமையலறையிலிருந்து, 'முட்ட தோசையா? சாதா தோசையா?'

'முதல்ல சாதா தோசை பிறகு முட்டை தோசை' ன்னு பதிலளித்தேன்.

சரிதானே!

 

பின்குறிப்பு:

'கோயினோபோபியா' (Koinophobia) என்பது ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான பயம், ஒருவரின் வாழ்க்கை சாதாரணமானது அல்லது முக்கியமற்றது, அதற்கு அர்த்தமோ நோக்கமோ இல்லை என்ற உணர்வு.

 

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

ஒரு பானைச் சோறு

'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது'  

இது புனித பவுல் கிருத்துவ சமூகங்களில் வேலை செய்யாது ஏமாற்றி பிழைப்பவர்களுக்காக சொல்லப்பட்டது என நாம் நினைக்கிறோம். உண்மையில், நமது குடும்ப வாழ்க்கையில் இவ்வரிகள் மிக பொருந்தும். 

பெரும்பாலும், வீட்டு வேலைகளை அம்மாக்களுக்கும், மனைவியருக்கும் அர்ப்பணித்துவிட்டு, ஹாயாய் கால் மேல் கால் போட்டு பொழுதானைக்கும் மொபைல், டிவி என மாறடிக்கும் நபரானால், உங்களுக்கு தான் இந்த வரிகள் சொல்லப்பட்டுள்ளது. 

'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது'

வீட்டில் நான்: 

இப்படித்தான், பல வேளைகளில், என் மகளிடம், சொல்லி சொல்லி. மனதில் ஒரு உறுத்தலை ஏற்படுத்தி வேலை வாங்குவது எனது இயல்பாகி போனது. அதில் எனக்கு உள்ள பெருமிதம் அலாதி.    

 அப்படி இறுமாந்திருந்த ஒரு நாள், என் இல்லத்தரசி என்னிடம் வந்து, 'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது', சரிதானே? என்றாள். நானும், தோராயமாய், புரிந்தும் புரியாமல் 'ஆம் மிகச்சரி' என்றேன். அப்ப இன்னைக்கு சோறு வடிக்குறது உங்க வேலைனு சொல்லிட்டு போய்ட்டாள். தலையில் இடி விழுந்தாற்  போல இருந்தது, அந்த வேலை பளு. 

ஊருக்கு உபதேசம்: 

'ஊருக்கு உபதேசம் செய்வது' எவ்வளவு எளிது என அப்போதுதான் உணர்ந்தேன். ஓர விழிகளில், எனது மகள் என்னை பரிகாசம் செய்வது தெரிந்தும் தெரியாதது போல் சமாளித்து கொண்டேன்.'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது' என்ற வரிகள் கேலியாய் என்னைப் பார்த்து சிரிப்பது போல உணர்ந்தேன். பவுலடிகளார் மீது செம்ம கோபம் வந்தது. இருந்தாலும் 'சோறு முக்கியம்' என நினைத்துக் கொண்டு, அரிசி பானையை எடுத்துக் கொண்டு, அரிசி மூட்டை நோக்கி நடந்தேன். 

உங்களுக்கு சவால்: 

'அரிசி உலை வைத்து சோறு வடிப்பது' என்ன அவ்வளவு பெரிய சவாலான வேலையா? ன்னு உங்கள் மனதின் குரல் எனக்கு கேட்கிறது. 

சொல்கிறேன் கேளுங்கள்:

வீட்டில் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கிட வேண்டும். 

ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிடுவார்கள் என மனக்கணக்கு தேவை. 

எத்தனை முறை சாப்பிடுவார்கள்? சிலர் ஒரே முறை சாப்பிடுவது உண்டு. பலர் கொஞ்சம் கொஞ்சமாய் பலமுறை சாப்பிடுவதும் உண்டு. 

மிகக் கச்சிதமாய் அளவுக்கு சோறு வடிக்க கூடாது. 

மிகக் குறைவாயும் வடித்து பற்றாக்குறை வந்து விட கூடாது. 

மிக அதிகம் சோறு வைத்து வீணாக்கவும் கூடாது. 

ரொம்ப குழைக்கவும் கூடாது 

ரொம்ப வெரையாகவும் இருக்கக்கூடாது.

தண்ணி அளந்து ஊத்தணும் 

பொங்கி வழியவும் கூடாது 

அடி தீயவும் கூடாது 

அங்குமிங்கு போனாலும் கவனம் முழுக்க அரிசி பானை மீது இருக்க வேண்டும் 

இவ்வளவு விஷயம் இருக்கு. 

'அரிசி வடிப்பது' ஆய கலைகளில் 65 ம் கலைனே சொல்லலாம். சற்று தவறினாலும், வடித்த சோறு முழுக்க 'அந்தோ கதி தான்'

இனிமேல் யாராவது அரிசி வடித்து சோறு போட்டால், தெய்வமாக பாருங்கள். 'உண்டி கொடுத்தோன், உயிர் கொடுத்தோன்' அல்லவா? 

பானை என்னும் போதி மரம்: 

பானையில் தண்ணீர் கொதித்ததும், களைந்த அரிசியை போட்டேன். 

முதலில் அசைவே இல்லை. 

பின்னர் அரிசி மணிகள் ஒவ்வொன்றாக அசைய ஆரம்பித்தன. 

அங்கொன்றும் இங்கொன்றுமாக குதிக்கத் தொடங்கின. அரிசியின் மேல் கீழான சுழற்சி வேகமெடுக்கத் துவங்கியிருந்தது. சூடு அடியில் இருந்து அரிசியை அலைக்கழிப்பதை பார்க்கும்போது, எரிமலை வெடித்து நெருப்புக்குழம்பு கக்குவது தான் நினைவுக்கு வந்தது. கீழிருந்த அரிசி மிக வேகமாக மேல் தள்ளப்பட்டு, மீண்டும் கீழ் இழுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் சுழற்சியில் அரிசி மணிகள். 

அரிசி சற்று வெந்து சோறாக மாற மாற அதன் சுழற்சியில் சற்று தாமதம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக முழுதும் சோறானதும், அதன் சுழற்சி முற்றிலும் நின்று விடுகிறது. பானைக்குள் நெருப்பின் அரவணைப்பில், அரிசி சோறாகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின், சோறை வடித்து பரிமாறுகிறோம். 

சோறு ரெடி...

இந்த அரிசி பானைக்குள் தான் எத்தனை வாழ்க்கைப் பாடங்கள்:

நாம் தான் அரிசி இந்த பாடத்தில். 

நம்மை சூழும் தண்ணீர்: நமக்கு கிடைத்துள்ள உறவுகள், நட்பு வட்டாரங்கள், பணி நிமித்த தொடர்புகள். இந்த தண்ணீர் இல்லாமல் அரிசி சோறாக முடியாது. அதே சமயத்தில், தண்ணீர் சரியான அளவு தான் சோறு பதமாக உதவும். அதிகமானாலும் குறைந்தாலும், ஆபத்துதான். 

நெருப்பு - நமது அனுபவங்கள். இந்த அனுபவங்கள் நமது உறவுகளோடும், நட்புகளோடும், பணி நிமித்த தொடர்புகளோடும் தான் சேர்த்து நம்மை சோறாக உரு மாற்றும். இந்த நெருப்பு, நம்மை தொடக்கத்தில் புரட்டி எடுத்தாலும், கொஞ்ச நேரத்தில் சோறாக மாறுகிறது.

இந்த மாற்றம் தாம் 'பக்குவம்' 

அரிசி சோறாகும் பக்குவம் அரிசிக்கு அரிசி மாறுபடும். 

மனிதர்களும் அனுபவத்தை ஏற்றுக்கொண்டு, அனுபவங்களிலிருந்து பாடங்கள் கற்கும்போது நாம் பக்குவப் படுகிறோம். 

இன்னொரு முக்கியமான விஷயம்... 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிறார்கள். சரிதான். சோற்றுக்கு வேண்டுமானால் இந்த சொலவடை பொருந்தும். கட்டாயம் மனிதருக்கு அல்ல. 

ஒவ்வொரு மனிதனின் அனுபவங்கள் வேறு 

ஒவ்வொரு மனிதனும் பக்குவப்படும் காலமும் வேறு

ஒவ்வொரு மனிதனின் உறவும், நட்பும், பணி தொடர்புகளும், அவனுடைய பக்குவத்தை நேரடியாகவே பாதிக்கின்றன. 

அதனால், 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற கூற்று, பொருந்தா கூற்று தானே மனிதர்க்கு. 

சாப்புட போறேன் மன நிறைவோடு, மனைவியோடும் மகளோடும்... 

தட்டில் சோறு என்னை பார்த்து சிரித்தது.