செவ்வாய், 30 செப்டம்பர், 2025

கலிலேய கரையும், கரூரும்

இன்றைய நிலைமைக்கு நாம் எதை பேசினாலும், நம் மீது அரசியல் சாயம் பூசிவிடுவார்கள் என்ற ஆபத்தை அறிந்தே இதை எழுத முனைகிறேன்.

நடிகர் விஜய்யின் கட்சி பரப்புரையின் போது, கரூரில் நடந்த உயிரிழப்புகளை பற்றி தான் சொல்லுகிறேன். இப்போது சமூக வலைதளங்கள் முழுதும் இரு வேறு கட்சிகள் ஒருவரை ஒருவர் சிலுவையில் ஏற்றி கழுவேற்றும் பணியை சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். எவ்வளவுக்கு கீழ்த்தரமாக ஒருவரை ஒருவர் பழி சாற்ற முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு செய்து கொண்டு இருக்கின்றனர். இப்படி பட்ட தருணத்தில் நான் யார் சார்பாக என் கருத்தை முன் வைக்க துணிகிறேன் என்று நீங்கள் அறிவதும் கட்டாயம் என்று நான் நினைக்கிறேன்.

இறை வார்த்தையும், இன்றைய நிகழ்வும்:

"ஒரு கையில் விவிலியத்தையும், மறு கையில் செய்தித்தாளையும் ஏந்திச் செல்லுங்கள்" என்ற இந்த மேற்கோள் ஜெர்மன்-இறையியலாளர் கார்ல் பார்த்தால் (KARL BARTH) கூறப்பட்டது. இந்த கூற்று தான் என்னை இறைவார்த்தையையும், இன்றைய நிகழ்வையும் தொடர்பு படுத்த உந்தி தள்ளியது.

ஒரு கிறிஸ்தவர் உலக நடப்புகளைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும், அதிலிருந்து விலகி ஓடுவதற்குப் பதிலாக, அதைப் புரிந்துகொண்டு, தங்கள் நம்பிக்கையை பயன்படுத்தி இறை சித்தத்தை அறிய  முயற்சிக்க வேண்டும்.

என்னை சிந்திக்க தூண்டிய விவிலிய பகுதி:

இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.

மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்என்றனர்.

இயேசு அவர்களிடம்,

அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்

என்றார்.

 

இன்று, இந்த விவிலிய பகுதியில் நாம் கவனம் செலுத்த வேண்டியது 5000 அப்பங்களை பலுகச் செய்தாரா? அல்லது பகிரச் செய்தாரா? என்பதல்ல. மாறாக, தன்னை தேடி வரும் மக்களை அவர் எவ்வாறு நடத்தினார் என்பது தான்.

 பரிவு எங்கே?

கலிலேய கரையோரம், இயேசு இறையாட்சியை பறைசாற்றினார்

கரூரில், திரு. விஜய் அவர்கள் அவருடைய ஆட்சிக்காக பரப்புரை செய்தார். அவ்வளவுதான் வித்தியாசம்.

இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அதுதான் அந்த நேரத்தின் முக்கியத்துவம்.

திரு. விஜய் அவர்களின் கூட்டத்தில், மதியம் 12.00 மணிக்கு வர வேண்டிய அவர் இரவு 07.00 மணிக்கு வந்து சேரும்போதே அவர் மனதில் கொண்டிருக்க வேண்டிய முக்கியமான விஷயம்: தன்னை காண கூடியிருக்கும் மக்களின் நிலைமை

காலை முதல், 12 மணி நேரத்துக்கும் மேலாக நிற்கும் தனது ரசிகர்களை மனதில் கொண்டு செய்ய வேண்டிய சிலவற்றை செய்திருக்கலாம் என எனக்கு தோன்றியது.

யார் குற்றம்?

அந்த அசம்பாவிதம் பற்றி சிலர் விஜய் அவர்களையும்,

சிலர் ஆளும் கட்சியையும்,

சிலர் போலீஸின் மெத்தன போக்கென்றும்

இப்பொழுது ஒருவர் மாற்றி ஒருவரை சாடுவதை கண் கூடாக பார்க்கின்றோம்.

இதில் யாரை குற்றம் சாற்றி என்ன ஆக போகிறது?

என்னை பொறுத்த வரை, மக்களின் பொறுப்பற்ற தன்மையைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். அவ்வளவு கூட்டத்தையும், போலீஸ் கட்டுப்படுத்துவது இயலாத காரியம் என்பது நமக்கு நன்று தெரியும். மக்கள் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளை கூட்டிக் கொண்டு மணிக்கணக்கில் நின்று கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன?

வரும் இளந்தலைமுறைக்கு என்ன சொல்லி கொடுக்கிறோம்?

ஒரு நடிகனுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்றா?

ஏசுவும் உடனிருப்பும்: 

ஏசுவே எனது தலைவர்

அவரே எனது முன்மாதிரி

விவிலியத்தில் எங்கெல்லாம் இறப்பு நிகழ்ந்து உள்ளதோ

இயேசு அங்கே தனது இருப்பை உணர செய்திருக்கின்றார்.

 

தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்என்று அவரை வருந்தி வேண்டினார். ஏசுவும் உடன் சென்றார்.

 

இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்என்றார்.

 

இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.

 

'உடனிருப்பு' என்பது தான் நாம் உள்வாங்க வேண்டிய உண்மை.

திரு. விஜய் அவர்களின் 'உடனிருப்பை' மட்டும் தான் நான் எதிர்பார்த்தேன்.

அந்த நேரத்தில் நிகழ்வது நிகழ்ந்து விட்டது.

அந்த நேரத்தில் தேவை எல்லாம், ஒரு தலைவனின் 'உடனிருப்பு' மட்டுமே.

அதுவே அந்த கணத்தின் மாபெரும் மருந்து.

உங்கள் X பக்கத்தின் அனுதாபங்கள் எல்லாம் அரசியல்.

உங்கள் உடனிருப்பு மட்டுமே உள்ளத்தை ஆற்றுப்படுத்தும் அருமருந்தாக இருந்திருக்கும்.

உங்களின் அமைதியும், தலைமறைவும் மிகுந்த மன வேதனையையும், குழப்பத்தையும் தான் கொடுத்தது.

தலைவனாக உங்களை பார்த்த பலருக்கு, உங்கள் அமைதி சற்றே மன தடுமாற்றத்தை தான் கொடுத்தது.

நமது வாழ்வின் முக்கிய தருணங்கள் எல்லாம் சந்திப்பின் தருணங்கள் தான்.

சில தருணங்களில், அந்த உடனிருப்பின் மகிழ்வே, உறவை நம்முள் வளர்க்கும்.

அந்த உடனிருப்பு இல்லையேல், உறவுகள் விரிசல் காணும். 

எல்லா சந்திப்புகளிலும் முழுமையான உடனிருப்பை உணரும் போது தான்

உறவின் நெருக்கத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும்.

 

அரசியலில் நீங்கள் யார் பக்கம் நிற்க போகிறீர்கள்?

உங்கள் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம், காலம் வெளிப்படுத்தும்.

நீங்கள் சினிமா போன்ற வசனங்களை விட்டு விட்டு, அரசியல் பேச வேண்டும் என்ற கட்டாயத்தையும் காலம் உங்களுக்கு கற்று கொடுக்கும்.

இப்போது நீங்கள் கற்று கொள்ள வேண்டிய முக்கிய பாடம், இதோ கண்ணதாசன் வரிகளில்...

 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...

வாசல் தோறும் வேதனை இருக்கும்..

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவது இல்லை...

 

ஓடி ஒளியாமல்

ஒரு தலைவனாய் உடன் நில்லுங்கள்

'உண்மையான தலைவன் நீ' என்று உலகம் உணர்ந்தால்

உன் பின் இந்த உலகம் வரும்.

இல்லையேல்,

உதறி தள்ளி விட்டு

உருண்டோடும்.

13 கருத்துகள்:

  1. இன்பத்திலும்.. துன்பத்திலும்..
    உடனிருந்து பழகுங்கள்...
    வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.
    குடும்பம்.. அரசியல்.. எதுவானாலும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயசாந்தி மேரி1 அக்டோபர், 2025 அன்று 9:29 AM

      அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ். இனிய மனையாளுக்கு நன்றி

      நீக்கு
  2. சிரமங்களை கையாள்வது கடினம்.இது நடக்கும் என்று எதிர்பார்த்தவர்கள்.இதை தடுத்திருக்கலாம். Bible says , they were like sheep without a Shepherd. Vijay has intention of serving. He has to learn from these mishaps. Scapegoats are inevitable.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for your feedback and your personal reflection. Only time will tell who is a shepherd that lead them to pastures

      நீக்கு
  3. TVK should have postponed the event when it got delayed in Namakkal itself considering the practical challenges ahead especially in a place like KARUR. I mean this Caz I'm from this very place. People would have been upset but 41 lives would definitely have been saved...

    It's also good to postpone plans and come back even stronger...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. That was practical thinking and definitely it would have saved lives. Anyway, it became a lesson for all political parties. Thanks for your practical wisdom on this event.

      நீக்கு
  4. தேவை எல்லாம், ஒரு தலைவனின் 'உடனிருப்பு' மட்டுமே...சினிமா அரசிலலை விட உண்மையான அரசியல் மிகவும் கொடியது என்பதை உணர்ந்திருப்பார்... மேய்ச்சல் நிலங்களை விட அதிகம் எதிர்பாரத பயங்கரமான சுழலில்தான் உண்மையான உண்மையான தலைவரை, உண்மையான மேய்ப்பனை நாம் அறிய முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சரி. இன்னும் சினிமா அரசியலை தாண்டி, அரசியலின் உண்மையான முகம் அறிந்து பக்குவ பட வேண்டியது நிறைய உள்ளது

      நீக்கு
  5. சாமானியனின் ஆதங்கத்தின் பிரதிபலிப்பே உங்கள் தொகுப்பு.... உடனிறுத்தலின் அவசியம் பற்றி உணர்த்தி இருக்கிறீர்கள்....உங்கள் ஒப்பீடும் மிக நேர்த்தி... 👏👏👏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. சாமானியனின் குரலாகவே ஒலிக்க விரும்புகிறேன். சாமானியனுக்கு உண்மையை உணர்த்தும் குரலாகவும் இருக்க விரும்புகிறேன்

      நீக்கு