வியாழன், 11 டிசம்பர், 2025

எனது அறை

​ஆண்டின் இறுதி மாதத்தின் நாட்கள் உருண்டோடி கொண்டிருக்கும் வேளையில் இதை எழுதுகிறேன். 

எனது அறை

எங்கு போனாலும் 

எதை செய்தாலும் 

திரும்பி திரும்ப நான் வந்து நிற்கும் இடம் ‘எனது அறை’

சுத்தம் செய்யவில்லை 

பொருட்களை அடுக்கும் எண்ணமுமில்லை 

சும்மா உள்ளே நுழைந்து அறையைப் பார்க்கிறேன். எனது கண்கள் எனது அறையில் என்னோடு பயணித்த பொருட்களின் மீது படர்ந்தது. 

எனது மேஜை 

எனது படுக்கை 

எனது நாற்காலி 

எனது காபி கப்

எனது புத்தகங்கள் 

எனது கண்ணாடி 

எனது நோட்டுப் புத்தகம் 

எனது பேனா 

எனது ஜெபமாலை 

எனது பை 

எனது அலமாரி 

எனது ஜன்னல் 

எனது தலையணை 

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு நாட்கள் நான் இவற்றைப் பற்றியெல்லாம் நினைத்தது கூட கிடையாது. 

உங்களது வீட்டையோ, அறையையோ இப்படி ஒவ்வொன்றாக நினைத்துப் பாருங்கள். எவ்வளவு பொருட்கள் உங்கள் கண்முன்னே இருந்தும், கண்ணில் படாமல் இருந்திருக்கின்றன என்று உணர்வீர்கள்.

எனது அறையில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்தேன். 

இந்த ஆண்டு முழுக்க உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து அனுபவங்கள் வழியாக, உங்களை அப்படியே, எந்த ஒரு நிபந்தனையுமின்றி, உங்களை ‘நீங்களாகவே’ ஏற்றுக் கொண்ட, தழுவிக் கொண்ட, தாங்கிக் கொண்ட உங்கள் அறைக்கு நன்றி சொல்லுங்கள். 

நான் நன்றி சொன்னாலும், எனது அறை மறுபேச்சு பேசுவதில்லை. இதுபோன்ற உடனிருப்பு மிகவும் அவசியம். நம்மை எடை போடாது, உள்ளது உள்ளபடியே, மறுபேச்சு இல்லாமல், நம்மை உள்வாங்கும் உடனிருப்பு. 

இந்த அறை 

எனது வெற்றிகளை கொண்டாடியுள்ளது 

எனது தோல்விகளை பார்த்திருக்கிருக்கிறது 

எனது முயற்சிகளில் உடன் நின்றிருக்கிறது 

எனது அழுகையின் கண்ணீரை கண்டிருக்கிறது. 

எனது சிரிப்பின் சந்தத்தை ரசித்திருக்கிறது  

எனது வியர்வையின் துளிகளை தாங்கி இருக்கிறது 

எனது மோகத்தின் முள்ளையும் அணைத்திருக்கிறது

எனது கோபத்தின் உச்சத்தை அளந்திருக்கிறது

எனக்கிழைத்த துரோகத்தின் பள்ளத்தில் உடனிருந்திருக்கிறது 

எனது சிந்தையின் சீர்மையில் கரைந்திருக்கிறது 

எனது தாகத்தை தணித்திருக்கிறது 

எனது தலைகால் புரியாத வேகத்தை தடுத்திருக்கிறது 

எனது தலைகனத்தை சற்றே இறக்கி வைத்திருக்கிறது

எனது காதலை கண்டும் காணாமல் இருந்திருக்கிறது 

எனது நட்பின் வட்டாரத்தை கண்டு நகைத்திருக்கிறது 

எனது பகையை வேரறுத்திருக்கிறது 

இந்த அறையின் உடனிருப்பு என்னை ‘நானாய்’ நிலைபடுத்தியிருக்கிறது

இவ்வளவும் செய்துவிட்டு, என்னிடம் எதுவும் திரும்ப கேட்பதில்லை 

ஒவ்வொரு முறை நுழையும்போது, உள்ளிழுத்து என்னை அரவணைக்கிறது 

ஒவ்வொரு நாளும் நான் என்னை சந்திக்கும் இடமே எனது அறை 

‘தனிமை’ துன்பம் அல்ல; அது ஓர் வரம் என என்னைப் பழக்கியது எனது அறை 

உலகின் சப்தங்களிருந்து பாதுகாத்து, அமைதிக்கு என்னை அறிமுகம் செய்தது எனது அறை 

உங்கள் இல்லங்களில் உள்ள அறைகளை நினைத்துப் பாருங்கள் 

உங்கள் அறைகள் உங்கள் அனுபவங்களின் கருவூலம் 

உங்கள் அந்தரங்கங்களை அறிந்த ஒரே இடம் உங்கள் அறை மட்டும்தான் 

உங்கள் அம்மணத்தை அங்கீகரித்த ஒரே இடம் உங்கள் அறை மட்டும்தான் 

உங்கள் எல்லா மனவெழுச்சிகளையும் பார்த்த ஒரே இடம் உங்கள் அறைதான் 

உங்கள் அறை ஓர் மனிதனாக இருந்தால், அதுதான் உங்கள் soulmate. 

இந்த ஆண்டில் இறுதி மாதத்திலிருந்து, புதிய ஆண்டுக்குள் நுழைய போகும் தருணத்தில்…

எனது போதிமரமான எனது அறையின் வெற்றிடத்திற்கு நன்றி சொல்ல விழைகிறேன். 

The only place where “EMPTINESS” makes sense is my ROOM. 

இன்னுமொரு ஆண்டு எனை தாங்க தயாரா? 

எனது அறையின் கரங்களில் தவழ, நான் தயார். 

நீங்களும் நன்றியோடு அடியெடுத்து வையுங்கள். 


புதன், 3 டிசம்பர், 2025

யோசிக்காதே… இப்படிக்கு ‘டிங்’

​பசித்தது… 

மொபைல் எடுத்து order செய்ய முயன்று கொண்டிருந்தேன். 

என்னைச் சுற்றி 450 உணவகங்கள்,  45,000 க்கும் மேற்பட்ட உணவு வகைகள். ஆனால் ஆர்டர் history பார்த்தால், 5 உணவகங்கள், 10 உணவு வகைகளுக்கு மேல் நான் தாண்டியதில்லை. 

மீண்டும் ஏதோ அந்த ஐந்தில் ஒன்றில். அந்த 10 வகை உணவில் ஒன்றை order செய்துவிட்டு, நேரத்தைப் பார்த்தேன். 30 நிமிடங்களுக்கு மேலாக காட்டியது. படிக்கலாம் என புத்தகத்தை புரட்டினேன். முதல் notification மணி ஒலித்தது. 

‘Your order is accepted’ என்று. 

பார்த்துவிட்டு படிக்க தொடங்கினேன். சில நிமிடங்களில் மீண்டும் ஒரு மணி: 

‘Searching for delivery partners nearby’ என்று. 

பார்த்துவிட்டு மீண்டும் புத்தகத்தை கையில் எடுத்து எங்க விட்டோம் என்று யோசிக்கையில் அடுத்த மணி: 

‘Found a Delivery partner’ என்று. 

தொடர்ந்து அந்த அரை மணி நேரத்தில் பல முறை மணி ஒலித்தது. 

‘Partner on the way’

‘Delivery Partner reached the restaurant’

‘Delivery partner waiting to pick up’

‘Delivery partner picked up the delivery’

Delivery partner on the way to deliver’

இதற்கிடையில் டெலிவரி பார்ட்னர் மெசேஜ் வருகிறது: ‘ I’m on my way to your place’ என்று. 

இந்த இடைபட்ட நேரத்தில், 

Zomato Gold விளம்பரங்கள், 

You won a reward விளம்பரம் 

அது இதுன்னு அந்த அரை மணி நேரத்தில் 20-30 மணிகள் ஒலித்தபடியே இருந்தது. கடைசிவரை புத்தகத்தை படித்த பாடில்லை. 


*இன்னொரு கதை கேளுங்க*

1961 இல் Kurt Vonnegut எழுதிய Harrison Bergeron என்ற சிறுகதை 2081 ம் ஆண்டில் அமெரிக்க வாழ்க்கையை சித்தரிப்பதாகும். இந்த கதையில் அரசாங்கம், மக்களில் எந்த ஒரு தனி நபரும் புத்திசாலித்தனம், அழகு அல்லது வலிமை காரணமாக மற்றவரை விட உயர்ந்தவர்களாக உணரக்கூடாது என்பதில் முழு கவனம் செலுத்துகிறது. 

கதைமாந்தன் புத்திசாலி; சுய சிந்தனை உடையவன். அதனால் அவன் காதுகளில் ஒரு கருவி பொருத்தப்பட்டு, ஒவ்வொரு 20 நொடிகளுக்கு பலவகை ஒலிகளை எழுப்பி, அவனுடைய சிந்தனை சங்கிலியை உடைக்கிறது. தொடர்ந்து சிந்திக்க விடாமல் அது ஒலி எழுப்பி சிந்தனையை மழுங்கடிக்கிறது. 


*என்ன தொடர்பு?* 

1961 இல் எழுதப்பட்ட கதைக்கும், 2025 இல் நான் Zomato வில் ஆர்டர் செய்ததற்கும் என்ன தொடர்பு? 

இதுதான் இக்கட்டுரையின் சாராம்சம். 

*கற்பனை நிஜமாகிறது!*

கற்பனைக்கதையில் சிந்தையை சிதறடிக்க, உற்பத்தித் திறனை உருகுலைக்க பொருத்தப்பட்ட அந்த ஒலி எழுப்பும் கருவியை, இன்று நாம் பயன்படுத்தும் மொபைலோடு ஒப்பிட்டு பார்க்கவும். அரை மணி நேரம் படிக்க விடாமல் எத்தனை notifications. 


*கணக்கு பார்ப்போம் வாங்க!*

Zomato வில் அரை மணிக்கு 30-40 notifications என்றால், இதைபோல் எத்தனை app கள், எத்தனை notifications கள். 

ஒரு நாள் உங்கள் வாட்ஸப்பில் வரும் notifications மட்டும் கணக்கெடுத்து பாருங்கள். 

Personal chat notifications 

Group chat notifications 

update notification 

status notification 

அப்பப்பா தலை சுத்துது 

இன்னும் whatsapp போல மற்றய ஆப் கள். 

Tik Tok, Youtube, Pinterest, Instagram, Twitter, Gmail, OTTs, நியூஸ் apps என ஏராளமான App கள் ஏராளமான Notifications. 

ஒரு சராசரி இளைஞரின் மொபைலில், ஒரு நாளைக்கு ஏறக்குறைய 192 முறை மணி ஒலிப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. 

நாம் தூங்கும் நேரத்தை தவிர்த்து கணக்கிட்டால், விழித்திருக்கும் ஒரு மணி நேரத்தில் 11 மணி ஒலிக்கிறது 

அதாவது ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை மணி ஒலிக்கிறது. 

இது சராசரி இளைஞரின் கணக்கு. சமூக வலைதளங்களில் தீவிரமாய் ஈடுபடும் நபருக்கு கணக்கு வேறு: ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு மணி ஒலித்தால் அது மிகையல்ல. 


*மழுங்கடிக்கும் மணிகள்*

1961 இல் எழுதப்பட்ட கதையில் புத்தியை மழுங்கடிக்க இந்த ஒலி அவர்கள் காதில் எழுப்பப்பட்டது. 

இப்போது ஒலிக்கும் இந்த notification மணிகளும் அப்படித்தான். 

நமக்கு நாமே அடித்துக் கொள்ளும் சாவு மணி தான் இந்த notifications. 


*யோசிங்க…*

நமது கவனத்தை திசை திருப்ப இத்தனை முயற்சிகள். 

பலமுறை இந்த ஒலி கேட்டு செய்கின்ற வேலையை விட்டு மொபைலில் தொலைந்தவர்களில் நாமும் ஒருவர்தான் 

எதற்கு மொபைல் எடுத்தோம் என்பதையே மறந்து விட்டு, பல மணி நேரம், அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்த தருணங்கள் எத்தனை எத்தனையோ!

மொபைல் போனின் ‘இருப்பு’ போதும், நம் கவனத்தை குலைக்க. நீங்கள் அதை பயன்படுத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அருகிருந்தாலே அது நம் தலைக்குள் இடம் பிடித்து விடும். 

எந்த ஒரு வேலையை செய்வதானால், மொபைல் போனை தொலைவில் வையுங்கள். 

உங்கள் சிந்தனை சங்கிலியை உடைக்கும் அழைப்பு மணிகளை, முற்றிலும் தவிருங்கள். 

உங்கள் சிந்தனைக்கு சாவு மணி அடிக்கும் மணியை கழட்டி எறியுங்கள். 

சிந்தியுங்கள் தடங்கலின்றி. 

‘டிங்’