செவ்வாய், 31 மார்ச், 2026

'இயேசு உள்ளம் கலங்கியவராய்...'

என்னை பொறுத்தவரை…

திருச்சபை வாசகங்களில் மிகவும் சோகமானது; கனமானது; உணர்ச்சி மேலீடானது.

புனித வாரத்தின் செவ்வாய்க் கிழமையின் நற்செய்தி தான்,

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38

'தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.'

இந்த பகுதி மிகவும் நெஞ்சை உருக்கும் பகுதி.

'இயேசு உள்ளம் கலங்கியவராய்...',

இறை மகனையே கலங்கடித்த பெருமை மனித குலத்துக்கு மட்டும் தான் உண்டு. என்னதான் இறை மகன் என்றாலும், அவர் முழுதும் மனிதராய் வாழ்ந்தார்.

தன்னோடு மூன்று வருடங்கள்,

உடன் இருந்து வாழ்ந்து,

உடன் நடந்து நற்செய்தி போதித்து,

குருடரை பார்க்க செய்து

செவிடரின் காது திறக்க செய்து

நோய்வாய் பட்ட பலரை குணமாக்கி

முடவரை நடக்க செய்து

இறந்தோரை உயிர்க்க செய்து

தண்ணீரை திராட்சை ரசமாக்கி

ஐந்து அப்பங்களை பலுகச் செய்து

புடலை அடக்கி

நீர் மேல் நடந்து  ,

உடன் உண்டு, உடன் உறங்கி, உடன் கதைத்து, உடன் சிந்தித்து வந்த,

தன்னுடைய சொந்த சீடருள் ஒருவர் தன்னை

இறப்புக்கு கையளிக்க முன் வந்துள்ளதை அறிந்து,

எப்படி கலங்காமல் இருக்க முடியும்?

எவ்வளவு பெரிய துரோகம் இது? இயேசுவின் உளக்குமுறலை உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்ற சொற்களின் மூலம் நம்மால் உணர முடிகிறது.

அடுத்து வருகின்ற பகுதி இன்னும் வேதனைக்குரியது: 'யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.'

ஏன் ஒருவரும் ஒருவரையும் சந்தேகப்படவில்லை; ஏன் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்?

அங்கு இருந்த சீடர்கள் அனைவருமே, இயேசுவை காட்டிக்கொடுக்க தகுதியுள்ள மனிதராகத்தான் இருந்தார்கள். நமக்கு கிடைத்தது பேதுருவும், யூதாசும் தான். வாய்ப்பு கிடைத்திருந்தால், அனைவருமே காட்டிக்கொடுப்பவர் தாம்.

 இந்த நற்செய்தியின், ஒரு திருப்பு முனையே பின் வரும் இறை வார்த்தை தான் என்று நான் நினைக்கிறன்:

'அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்'.

 இயேசு இதை என் நினைவாக செய்யுங்கள் என்று தனது உடலையும் குருதியையும் அளித்தும், 'அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்'

இந்த இறைவார்த்தை நம்மை வெகுவாய் குழப்புகிறது தானே? யேசுவிடமிருந்து அப்பத்தை பெற்றாலும், சாத்தான் நம் உள்ளத்துக்குள் நுழைவது என்பது சாத்தியம் என்று புரிகிறது.

நற்கருணை பெற்றாலும் நாம் எப்படி வாழ்கிறோம்? அதற்கு போவதற்கு முன், நாம் அன்றாடம் உண்ணும் உணவின் நோக்கத்தை பார்ப்போம்.

உண்ட உணவின் செரிமானம் வாயிலேயே தொடங்குகிறது. நீங்கள் மெல்லத் தொடங்கி, உணவைச் செரிக்கும் அளவுக்குச் சிறிய துண்டுகளாக உடைக்கும்போது, ​​உங்கள் வாயில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரக்கின்றன. இந்த உமிழ்நீரில் உள்ள ஒரு பொருள், அந்த உணவுத் துகள்களை உங்கள் உடல் உறிஞ்சிப் பயன்படுத்தக்கூடிய ஒரு வடிவமாக உடைக்கும் செயல்முறையைத் தொடங்குகிறது.

நம் உடல் உணவைச் செரிப்பதற்குப் பல மணிநேரம் ஆகலாம். பொதுவாக, உணவு வயிற்றில் 40 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை இருக்கும். பின்னர் அது சிறுகுடலில் சுமார் 2 முதல் 6 மணி நேரம் செலவழித்து, அதன் பிறகு பெருங்குடலைக் கடந்து செல்கிறது; இந்தப் பயணத்திற்கு 10 முதல் 59 மணி நேரம் வரை ஆகலாம். 

உணவு சென்று சேரும் இரைப்பையானது சக்திவாய்ந்த அமிலத்தையும் நொதிகளையும் சுரக்கிறது. இவை உணவைத் திரவமாகவோ அல்லது கூழாகவோ மாற்றுவதன் மூலம், அதை மேலும் சிதைக்க உதவுகின்றன. இங்கிருந்து, அந்த உணவு சிறுகுடலுக்கு நகர்த்தப்படுகிறது.

சிறுகுடல் என்பது செரிமானத்தின் முக்கியப் பங்காற்றும் பகுதியாகும், ஏனெனில் நம் உணவில் உள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் இங்குதான் நமது இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகின்றன.

 ஆக, உண்ணுகின்ற உணவு

நம்மில் ஏதேனும் மாற்றத்தை

ஏற்படுத்தாமல் போவதில்லை.

 இப்போது, நற்கருணைக்கு வருவோம். நற்கருணை என்பது விண்ணக உணவு. இது எந்த மாற்றத்தை நம்மில் கொண்டு வர வேண்டும்?

நம்மில் பல பேர் நற்கருணையை வெறும் சடங்காக பார்ப்பதால்தான், இன்னும் உள்ளிருக்கும் சாத்தான், நம்மை சாதி வெறி, இன வெறுப்பு, ஏற்ற தாழ்வு, ஆண் ஆதிக்கம், பெண் அடிமைத்தனம், குழந்தை தொழிலார் முறை என்று சாத்தானின் செயல்களில் நம்மை ஊறிக் கிடக்க செய்கின்றது. யூதாஸிடம், எப்படி அப்பத்தை பெற்ற பிறகு சாத்தான் புகுந்தான் என கேள்வி கேட்கும் நமக்கு, ஏன் நற்கருணையை பெற்ற பிறகும் நாம் இன்னும் பிரிந்து கிடக்கின்றோம் என்பதற்கான விடை அறிய விருப்பமில்லை.

 'உள் மனப் போராட்டங்களை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல் அனைத்தையும் நீங்கள் வான் தூதர்களின் உணவாகிய இந்த அப்பத்தை உண்ணும்போது பெறுவீர்கள்'.

 புனித பியர் ஜார்ஜியோ ஃபிராசாட்டி

 நமது வாழ்வுக்கும், நற்கருணை பெறுதலுக்கும் இடையே மிக பெரிய போராட்டம் இருக்கிறது. நற்கருணை நம்மை இறை அரசை நோக்கி நகர்த்த வேண்டும்.

 நற்கருணையை பெற்ற நாம்,

சிறிது கோபம் குறைந்தவராக மாற வேண்டும்

சிறிது புரிதல் கொண்டவராக மாற வேண்டும்

சாதிய வெறியை ஒதுக்கியவராக சிறிதேனும் மாற வேண்டும்

ஆண் ஆதிக்கம் குறைத்தவராக பிறரை மதிப்பவராக மாற வேண்டும்

பெண்களை சம உரிமை உடைய நபராக நடத்த முன் வர வேண்டும்

குழந்தைகளை பயன்படுத்தாது அவர்கள் உரிமைகளை பேணுபவராக மாற வேண்டும்

மன்னிக்கும் மனிதராக மாற வேண்டும்

துரோகங்களை இழைக்காத மனிதராக முயற்சிக்க வேண்டும்

நற்கருணை இந்த மாற்றங்களை ஏற்படுத்தாத போது, சாத்தான் யூதாஸிடம் மட்டும் அல்ல, நம்மிடையேயும் உள் புகுவான். சந்தேகமே இல்லை.

இந்த வாரத்தில்தான் ஏசுவுக்கு எத்தனை எத்தனை சோதனைகள், கனத்த நிமிடங்கள்?

துரோகம்

காட்டிக் கொடுத்தல்

மறுதலித்தல்

விட்டு விலகல்

சிலுவை பாதை

சிலுவை மரணம்

அவரை விடவா நாம் துன்பப்பட போகிறோம்?

சில நாட்களுக்கு முன் கூட, என் உடன் பேசியவர்கள், உடன் நடந்தவர்கள், உடன் பிறப்பே என்றவர்கள், உடன் சிரித்தவர்கள், வேண்டும் போது என் உதவி பெற்றவர்கள், ஒரு கண பொழுதில் என்னை தவிர்த்து ஒரு நிகழ்வில் பங்கேற்க முயன்றதை நினைத்து, ரொம்பவே கலங்கி போனேன். ஏன் என்னை தவிர்த்தார்கள்? நான் வேண்டாதவனாகி விட்டேனா? இறைவா இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர்? என்ற இயேசுவின் உணர்வு எனக்கும் வந்தது. உள்ளம் உடைந்து வருந்தினேன். மனத்தால் மன்னிக்க முடியாது என்று என்னையே வருத்திக்கொண்டேன், இன்றைய நற்செய்தியை கேட்கும் வரை.

இயேசு பேதுருவையோ, யூதாசையோ கைவிட்டு விடவில்லை மாறாக தனது அன்பை தொடர்ந்து செலுத்தினார். எனக்கும் அது ஒரு பாடமே. நற்கருணையை பெற்ற பின்பும், நான் மாற வில்லை என்றால், ஏசுவுக்கு இடமில்லையென்றால், சாத்தான் தான் உள் நுழைவான் கோபம், வெறுப்பு, எரிச்சல் என பல உணர்வுகள் வழியாய்.

இயேசுவுக்கே இடம் தந்தேன்.

இன்றைய நற்செய்திக்கும்,

இன்றைய நற்கருணைக்கும் நன்றி,

என்னை மீண்டும் மீட்டுக் கொண்டதற்காய்.

8 கருத்துகள்:

  1. Very true and lot of insights are taken from your commentary. Thank you very much. May God continue to bless you

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பெயரோடு பதிவிட்டால் தொடர்பு அர்த்தமுள்ளதாகும். தங்கள் வார்த்தைகள் ஊக்கமளிக்கிறது

      நீக்கு

  2. Diiferent Perspective, Depth in this reading, the bread of life should not be a ritual or a duty, in all things never forsaking God
    Excellent Work sir👏🏽

    பதிலளிநீக்கு
  3. Thanks for your perspective. It means a lot to know about your perspective.

    பதிலளிநீக்கு
  4. மிக ஆழமான, மனதை உலுக்கும் தியானம். “நற்கருணை பெற்ற பிறகும் நான் மாறவில்லை என்றால், சாத்தான் உள்ளே நுழைவான்” என்ற உங்கள் சிந்தனை மிகவும் வலிமையானது. யூதாசையும், பேதுருவையும் கூட இயேசு கைவிடவில்லை என்பதை நினைவூட்டிய விதம் நெகிழ்ச்சியளிக்கிறது. நற்கருணை ஒரு சடங்கு அல்ல; அது நம்மை சிறிது சிறிதாக மாற்ற வேண்டிய இறை அழைப்பு என்பதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு